Politics

”டாக்டர் பட்டம் வாங்குவதை விட மக்களிடம் பாராட்டுகளை வாங்க முயற்சி பண்ணுங்க எடப்பாடி” - திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் தி.மு.க, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளில் மீது மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர்.

பணப்பட்டுவாடா கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவி வருவது வருத்தப்பட கூடியதாக உள்ளது. தேர்தல் ஆணையம் மத்திய அரசு, எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தினால் தடுக்க முடியவில்லை. தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதா இந்திய அளவில் பிரபலமானவர். இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்து வந்து ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் செய்யப்படவில்லை. ஜெயலலிதாவிற்காக எடப்பாடி, பன்னீர்செல்வம் என்ன செய்து உள்ளனர். மருத்துவமனையில் இருந்தபோதும் சரியாக கவனிக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் மர்மமாக உள்ளது. விசாரணை கமிஷன் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க வேறு கமிஷன் போட வேண்டும். ஓட்டுக்காக ஜெயலலிதா பெயரை சொல்கிறார்கள். இந்த அரசு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசாங்கம் கிடையாது. மக்களுக்கு நன்மை செய்ய கூடிய அரசும் கிடையாது.

ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவதாக கூறியுள்ளார். ஆட்சி முடிந்ததும் தொடங்குவாரா ஆட்சி இருக்கும் போதே தொடங்குவாரா என்பதை ரஜினிகாந்த் தான் சொல்ல வேண்டும். தேர்தல் பற்றி தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லும் கருத்துகளை 24ம் தேதி பின்னர் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம். ஓட்டு பெட்டிகளை எண்ணும் போது தான் அ.தி.மு.க பலமா பலவீனமா என்று தெரியும்.

டாக்டர் பட்டம் நிறைய பேர் வைத்திருக்கிறார்கள். 100 டாலர்கள் தந்ததால் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் தர நிறைய பேர் உள்ளனர். முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வாங்குவது கண்டிக்க கூடியதும் இல்லை. பாராட்ட கூடியதும் இல்லை. எடப்பாடி டாக்டர் பட்டம் வாங்குவதை விட மக்களிடம் பாராட்டுகளை வாங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.