Politics

“ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங். வேட்பாளருக்கு பொருந்தாதா?” - எடப்பாடியை சாடும் கே.எஸ்.அழகிரி!

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பொய்களை அவிழ்த்துவிடும் அ.தி.மு.க-வினருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத் தேர்தல் வருவதற்கு காரணமே காங்கிரஸின் சுயநலம் தான் என்று பேசியிருக்கிறார். இத்தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருப்பதால் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதனால் தொகுதி மக்களிடையே இருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காக இத்தகைய மலிவான பிரச்சாரத்தை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ இடைத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், எந்தவித நியாயமும் இல்லாமல் 2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என நான்கு தொகுதிகளிலும் போட்டியிட ஜெயலலிதா மனு தாக்கல் செய்ததை எவரும் மறந்திட இயலாது. ஆனால், தேர்தல் ஆணையம் அந்த மனுக்களை நிராகரித்ததால் மீண்டும் இடைத் தேர்தல் நடக்காமல் தடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக தமிழக மக்கள் மீது 22 சட்டமன்றத் தொகுதிகளில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க தான் காரணமாகும். இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் போடிநாயக்கனூர், பர்கூர், காங்கயம், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா அந்தந்த ஊரைச் சேர்ந்தவரா? அங்கு போட்டியிடுகிற போது அவர் உள்ளூர்க்காரரா? வெளியூர்க்காரரா? ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸ் வேட்பாளருக்கு பொருந்தாதா?

அதுபோல, திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த விஜிலா சத்யானந்தை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்த காரணத்தால் அங்கு இடைத் தேர்தல் ஏற்பட்டது. இந்த இடைத் தேர்தலை மக்கள் மீது திணிக்கப்பட்டதாக எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா?

ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன் வெளியூர்க்காரர் அல்ல. அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் குன்னத்தூர் கிராமத்தில் பிறந்து, படித்து வளர்ந்தவர். அதற்குப் பிறகு இந்திய விமானப்படையில் சேர்ந்து 15 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக துப்பாக்கி ஏந்தி போராடுகிறவராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 10 ஆண்டுகள் தீயனைப்புத் துறையில் பணியாற்றியவர்.

பிறகு தமது 35வது வயதில் ஓய்வு பெற்று, அரிமா சங்க உறுப்பினராகி, பல்வேறு பொறுப்புகளை ஏற்று, மக்கள் சேவையாற்றிக் கொண்டிருப்பவர். காங்கிரஸ் கட்சியின் மீது ஈடுபாடு கொண்டு இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையால் கண்டெடுக்கப்பட்ட நல்முத்து தான் அரிமா ரூபி மனோகரன் அவர்கள். மற்றவர்களைப் போல, நில அபகரிப்பில் ஈடுபடாத நேர்மையாளர். இத்தொகுதியிலேயே முழுநேரமாக தங்கி தொண்டால் பொழுதளக்கும் கருவியாக இருக்க விரும்புபவர்.

நாங்குநேரி இடைத்தேர்தல் வருவதற்கு காரணம் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, சுயநலத்திற்காக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்று எடப்பாடி குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி என்பது மார்ஷல் நேசமணி மறைவிற்குப் பிறகு, 1968ல் பெருந்தலைவர் காமராஜரை தேர்ந்தெடுத்த தொகுதியாகும். அதற்குப் பிறகு நான்குமுறை என்.டென்னிஸ் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்ற தொகுதி. நீண்ட நெடுங்காலமாக காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட இன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி, 2014 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

இதன்மூலம் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன. எனவே, 2019 கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்காக ஆற்றலும், வல்லமையும், மக்கள் செல்வாக்கும் மிக்க, நன்கு அறிமுகமான ஒருவராகக் கருதி, எச்.வசந்தகுமார் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஒரு மிகப்பெரிய லட்சிய நோக்கத்திற்காக அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டதே தவிர, இதற்கு வேறு விதமான காரணங்கள் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டு, திசைதிருப்புகிற செயலாகும்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை மூன்றாண்டு காலம் எச்.வசந்தகுமார் அவர்கள் செய்த பணிகளைப் போல, வேறு எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்திருக்க முடியாது. தமது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிட்ட பிறகும், தமது சொந்த பணத்திலிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை தொகுதி மக்களுக்காக வாரி இறைத்த கொடை வள்ளல் எச்.வசந்தகுமார்.

பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக ரூபாய் 29 லட்சம் செலவில் ஜே.சி.பி. எந்திரம் வாங்கப்பட்டு, தொகுதி முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர் வாருதல், குளங்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற எண்ணிலடங்காத பணிகளை நாள்தோறும் செய்திருக்கிறார். தொகுதி மக்களின் குறைகளை அறிய பாளையங்கோட்டையிலும், வள்ளியூரிலும் அலுவலகங்களை அமைத்தல், குறைகளை நேரில் கண்டறிய 7 வாகனங்களை அமைத்துக் கொடுத்தல் என்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தவர்.

தமது சொந்த செலவில் பரப்பாடியில் அரசு கலைக் கல்லூரி கட்ட 5.5 ஏக்கர் நிலம் வாங்கி நன்கொடையாக வழங்கியவர். கல்வி உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, நாங்குநேரியில் குற்றவியல் நீதிமன்றம் என எண்ணற்ற பணிகளை பட்டியலிட்டால் தமிழகத்திலேயே மிகச் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்கிற பெருமை மக்கள் தொண்டர் எச். வசந்தகுமார் அவர்களையே சாரும்.

இத்தகைய பணிகள் தொடர்ந்து நடைபெற்றிட காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிற ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கமாகும்.

அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறி, மதநல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கிற வகையிலும், தலித் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் கடந்த காலத்தில் இத்தொகுதி மக்களுக்கு எச்.வசந்தகுமார் எத்தகைய மக்கள் தொண்டை ஆற்றினாரோ, அந்தப் பணிகள் மீண்டும் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக உறுதியளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.