Politics

இந்தி திணிப்பில் மறைமுக சதி : வெளிநாடுகளில் இந்தியை பரப்ப ரூ.43 கோடியை வாரி வழங்கிய மோடி அரசு!

பா.ஜ.க ஆட்சி இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிந்து இந்தி மொழியை புகுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கல் கூட்டத்தின் போது இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்து, இந்தியை கற்றுக்கொடுக்க ரூ.50 கோடி பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

இது இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பல்கலைக்கழகங்களில் மறைமுகமாக இந்தியை திணிக்கும் யு.ஜி.சி அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்படி தொடர்ச்சியாக பாஜக இந்தி மொழியை திணிக்க முற்பட்டு வருகிறது. இதற்கு எதிரான ஜனநாயக அமைப்புகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தி மொழியைப் பரப்புவதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 43 கோடியே 48 லட்சம் அளவிற்கு மோடி அரசு அள்ளி வீசியுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 43 கோடியே 48 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றும், 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா. கருத்தாக்கங்களை இந்தியில் வெளியிட 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் ஐ.நா.வின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.” என்று முரளீதரன் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு மொழியை அலுவல் மொழியாக கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியை மறைமுகமாக திணிக்க முயற்சி எடுத்து வருகிறது. மேலும் இதற்கு எதிராக இந்தி பேசாத மாநிலங்கள் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஐ.நா.விற்கு இந்தியை பாஜக அரசு புகுத்த நினைக்கிறது எனவே பா.ஜ.க அரசின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என கடிதம் எழுதப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.