Politics

பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு? : புயலைக் கிளப்பிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நிலைப்பாடு!

பொருளாதார ரீதியில் நலிவடைந்த - முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

இதையடுத்து பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

முதல்வர் எடப்பாடி கலந்துகொள்ளாத இந்தக் கூட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தினார். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், தமிழகத்திற்குக் கூடுதலாக 586 மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைக்கும்" எனத் தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

தொடர்ந்து பேசிய பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் 10% இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசினர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்யும். சமூகநீதியை நிலைநாட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க உணர்வுப்பூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும்” எனப் பிரகடனம் செய்தார்.

தி.மு.க, வி.சி.க, திராவிடர் கழகம், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க, , தே.மு மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் த.ம.மு.க ஆகிய கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை வன்மையாக எதிர்த்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை ஆதரித்தனர். அ.தி.மு.க மையமாகப் பேசி உறுதியான நிலைப்பாட்டைக் கூறவில்லை.

சமூகநீதிக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க-வுக்கு எதிரான சமரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.