Politics

ஊடகங்களில் தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க கூடாது - அ.தி.மு.க கூட்டத்தில் உத்தரவு !

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் இரட்டை தலைமைக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க-வுடனான கூட்டணியே காரணம் என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து இன்று கூடிய அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் கூட்டத்தை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி.சண்முகம் மற்றும் ஒற்றைத் தலைமை கோரிய எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் என பலர் புறக்கணித்தனர்.

இதற்கிடையே, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஊடகங்களில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது செய்தித் தொடர்பாளர்களோ எந்தவித கருத்தும் தெரிவிக்கக்கூடாது என அ.தி.மு.க உத்தரவிட்டுள்ளது. மீறி பேசினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இது அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.