Politics

திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 - அ.தி.மு.க-வினர் தப்பி ஓட்டம்!

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி, தேர்தல் பிரசார வேலைகள் சூடுபிடித்திருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் கொடுப்பதற்கு அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர் என புகார் எழுந்துள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியிலும், சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும், அ.தி.மு.கவினர் சிலரும் தங்கியிருந்தனர். அங்கு ஓட்டுக்கு ரூ.4,000 வீதம் கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு போடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவுக்கு சொந்தமான தோப்பில், கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகச் சென்றபோது 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் ஓட்டம் பிடித்து தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.