Politics

சௌகிதாரே நிலத்தை அபகரிக்கலாமா? - மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. மோடி குஜராத்தில் உள்ள காந்தி நகரில் அவருக்கு நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் மோசடி நடைபெற்றிருப்பாதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம்சாட்டியுள்ளார்.

பவன் கேரா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது; "பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து தவறான தகவலை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் காந்திநகரில் 411 எண்ணில் உள்ள நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 401 ஏ எண்ணில் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்திருந்தார். அதில் 411 எண் நிலம் குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலங்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு குஜராத் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டவை ஆகும். இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் விசாரணை மேற்க்கொண்டபோது அந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ அல்லது வேறு ஒருவருக்கு உரிமையை மாற்றிடவோ முடியாது என்று தெரியவந்துள்ளது. அப்படி சட்டப்படி நிலத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்ற முடியாத போது அதை எப்படி ஒன்றாக இணைக்க முடியும்?" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் பேசிய அவர் "அந்த பகுதியில் இருந்த 4 நிலங்களில் ஒரு நிலத்திற்கு உரிமையானவர் மறைந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அவர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இறந்துவிட்டார். ஆனால் மோடிக்கு சொந்தமான நிலத்தோடு அந்த நிலத்தை இணைத்தது அவர் இறந்தது 7 மாதங்களுக்கு பிறகு. அவர் உயிரிழந்த பிறகு ஜனா.கிருஷ்ணமூர்த்தி இதற்கு ஒப்புதல் தந்தாரா? உயிரிழந்த நபரின் நிலத்தை பாதுகாவலர் (மோடி) அபகரித்துள்ளார். தனது பிரமாண பத்திரத்திலும் உண்மையான தகவலை மோடி அளிக்கவில்லை.

இந்நிலையில் மோடி முதலில் கால் பங்கு நிலத்திற்கு உரிமையானவர் என்றார். பிறகு நிலம் இணைக்கப்பட்டு விட்டது என்று மோடி கூறுகிறார். இந்நிலையில் நிலத்தை இணைப்பது சட்டவிரோதம் ஆகும். நிலத்தை இணைத்ததற்கான ஆதாரத்தை பா.ஜ.க வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் காவல்காரர் என்று தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியே தனது முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து நிலத்தை அபகரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.