Politics

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவை செயலாளரிடன் ஆர்.எஸ்.பாரதி மனு!

சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் ஆர்.எஸ்.பாரதி மனுக்கொடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த தீர்மானத்தைச் சட்டப்பேரவை செயலாளர் அவர்களிடம் நேரடியாகச் சந்தித்து வழங்கியுள்ளோம். அதே போல் மனுவின் நகலை சட்டப்படி சபாநாயகரும் அளித்துள்ளோம் .

2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கவேண்டும் என்று அதிமுக கொறடா அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் ஒரே மாதத்தில் அவர்களைப் பதவி நீக்கம் செய்தனர். அதேநேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணி மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் செயல்பட்டது குறித்து அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குச் சபாநாயகர் ஆளானார். இந்த வழக்கு கூட நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த சூழலில் சபாநாயகர் மீண்டும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியதாகத் தகவல் வெளிவந்தது. இதை அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த செயலால் ஜனநாயக படுகொலை என்றும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார். இதனால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவருவோம் என அறிவித்தார். அதன்படி தற்போது தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம். அவர்கள் 15 நாட்களுக்குள் பதிலளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.