Rahul Gandhi
Politics

“ ‘NYAY’ திட்டம், வறுமை மீதான காங்கிரஸின் துல்லியத் தாக்குதல்!” - ராகுல் நம்பிக்கை!

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியோடு கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ராகுல், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விரிவாக உரையாற்றினார். ‘பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவற்றால் பொருளாதாரம் சரிந்ததே, வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணம்’ என்று கூறினார்.

மேலும் பேசிய ராகுல், ‘நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்க, அரசின் பல்வேறு துறைகளில் 22 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைப்போல பஞ்சாயத்துகளில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தப் பணியிடங்களை இளைஞர்களுக்கு வழங்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

NYAY scheme

மேலும், “பா.ஜ.க ஆட்சியில் கடன் சுமையால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயரங்கள் தீர்க்கப்படும். காங்கிரஸ் அறிவித்துள்ள ‘நியாய்’ திட்டத்தின் மூலம் வறுமை ஒழியும். இத்திட்டம், வறுமை மீது காங்கிரஸ் நடத்தும் துல்லியத் தாக்குதல்” எனப் பேசினார் ராகுல்.