உணர்வோசை
இயற்கையை முதலீடாக பார்க்கும் முதலாளித்துவம்.. Cosmos தொடர் பேசுவது அறிவியலா, பிரசாரமா?
என்றுமே கம்யூனிசத்தின் மீது விஷத்தைக் கொட்டும் பரப்புரையை ஐரோப்பிய, அமெரிக்க வெகுஜன ஊடகம் தப்பாமல் செய்து விடுகிறது. சோவியத் யூனியன் கொடுத்த மாற்றம், முதலாளித்துவத்துக்குக் கொடுத்த அச்சம் இன்று வரை நீடிப்பது உணர்கையில் சோவியத் யூனியன் மீதான மதிப்பே கூடுகிறது.
Cosmos என ஓர் அறிவியல் தொடர். Neil deGrasse Tyson தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரம்மாண்டமான கதைப்பரப்பு. அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகள். இதற்கு முன் 1980-ல் அறிவியலாளர் கார்ல் சாகன் Cosmos: A Personal Voyage என ஒரு தொலைக்காட்சித் தொடரை வழங்கியிருந்தார். அத்தொடரின் அடி தொட்டு உருவாக்க முயன்ற Cosmos: A Spacetime Odyssey மற்றும் Cosmos: Possible Worlds தொடர்கள் அற்புதமான உருவாக்கங்களாக நிச்சயமாக இருக்கின்றன. எனினும் முதலாளித்துவக் குடுமி மட்டும் தெரிந்து விடுகிறது.
சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசம் மீதான பொய்ப் பிரச்சாரத்தை அவர்கள் கட்டவிழ்க்கும் முயற்சியில் ஓர் அசம்பாவிதம் நேர்ந்துவிடுகிறது. உண்மை ஒரு தருணத்தில் வெளிப்பட்டு விடுகிறது.
சோவியத் ஸ்புட்னிக் அனுப்பிய பல ஆண்டுகளுக்கு பிறகு அவசர அவசரமாக தொடங்கிய நாசாவிலிருந்து நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை சோவியத் விஞ்ஞானியிடமிருந்து அமெரிக்கா திருடியிருக்கும் உண்மையே அது. ஆனால் அந்த உண்மையின் ஆழம் புலப்பட்டு விடக் கூடாதென சுடச்சுட ஒரு கதையும் கட்டிவிடப்பட்டிருக்கிறது.
குவாண்டம் அறிவியலை பேசும்போதும் இணை யதார்த்தங்களை (parallel reality) பேசும்போதும் உள்ளபடியே நமக்குப் புல்லரிக்கிறது. கருந்துளை பற்றி ஏன் வரவில்லை என தெரியவில்லை. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்ஸை ஏன் விட்டார்களென தெரியவில்லை.
நேர்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றம் பேசப்பட்டிருக்கிறது. விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டதே எல்லாவற்றுக்கும் காரணம் என சுலபமாக குற்றம் சுமத்தப்படுகிறது.
விவசாயம் என்றாலும் தனி நபர் விவசாயமல்லாமல் நிறுவனமய விவசாயம்தான் காரணம் என்றோ அல்லது விவசாயத்திலிருந்து உருவான தனி உடைமையே காரணம் என்றோ சொல்லும் நேர்மை எதிர்பார்த்தபடி இருக்கவில்லை. முக்கியமாக தொழிற்புரட்சி எத்தனைப் பெரிய பிரச்சினையை உருவாக்கியது என்பதை பற்றி மூச்.
ஆனால் கம்யூனிசத்தையும் ரஷ்யாவையும் குறை சொல்ல மட்டும் எந்தத் தயக்கமும் இல்லை.
சோவியத் உடைந்த பிறகும் காலநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே, அதற்கு யாரடா காரணம் என கேட்டால் பதில் கிடையாது. கார்ல் சாகனை மட்டும் வாய்க்கு வாய் கொண்டாடும் தொடரில் அவர் முன் நிறுத்திய panhumanism-க்கும் கம்யூனிசத்துக்கும் இருக்கும் தொடர்பை பேசவே இல்லை. காலநிலை மாற்றத்துக்கான தீர்வை, இயற்கையை முதலீடாக பார்க்கும் முதலாளித்துவத்தை எதிர்த்த மார்க்சிடம் காண்பதற்கான முனைப்பும் இல்லை.
மொத்தத்தில் உலகம் அழிந்தால் கூட பரவாயில்லை,கம்யூனிசம் என்கிற பொது சித்தாந்தம் குறித்து யாருக்கும் தெரிந்தோ, புரிந்தோவிட கூடாது என்கிறது தொடர். ஒரே நல்ல விஷயம், மொகஞ்சதாரோவை கிராபிக்ஸ் அழகில் தரிசிக்கலாம்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!