உணர்வோசை

‘நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் விளம்பரத் தூதர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்’ - அபூர்வத் தகவல்கள்!

விளம்பரங்கள் இல்லாமல் வணிக உலகம் இயங்குவதில்லை. ஒரு ரூபாய் பாக்குப்பொட்டலம் முதல் ஒரு கோடி ரூபாய் வாகனம் வரை சந்தையை நிர்ணயிப்பதும், தயாரிப்புகளை வெற்றிபெறச் செய்வதும் விளம்பரங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி’ என்று கபில்தேவ், டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என கிரிக்கெட் வீரர்கள் அட்டகாசமாக திரையில் தோன்றி பூஸ்ட் ஊட்டச்சத்து பானத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

‘லக்ஸ்... சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்’ என்று பிரபல நடிகைகள் லீலா சித்னிஸ், நர்கிஸ், வகீதா ரஹ்மான், வைஜயந்தி மாலா, ரேணுகா ராய், நிருபமா ராய், சுவரூப் சம்பாத், மதுபாலா, சுரையா, நந்தா, மீனா குமாரி, பூனம் தில்லான், ஹேமாமாலினி, ரேகா, மாதுரி தீட்சித், ஜீகி சாவ்லா, ஸ்ரீதேவி, கஜோல், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், தீபிகா படுகோனே, கரினா கபூர் என பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கிய நட்சத்திரங்கள் லக்ஸ் குளியல் சோப்பின் விளம்பர தூதர்களாக வந்து ஜொலித்தார்கள்.

பத்திரிகைகளில், தொலைகாட்சிகளில், இணையங்களில் விளம்பரத்திற்காக தோன்றியவர்கள் புகழ்பெற்ற நடிகர்கள் ஆகி இருக்கிறார்கள். புகழ்பெற்ற நடிக, நடிகைகள், அழகுப்பதுமைகள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள் பொதுமக்கள்.

இப்போதெல்லாம் ஜவுளிக்கடை அதிபர்களும், நகைக்கடை அதிபர்களும் தங்கள் பொருட்களுக்கு தாங்களே உத்தரவாதம் அளிக்கும் வகையில் வண்ண வண்ண உடையணிந்து வந்து விளம்பரங்களில் தோன்றுகிறார்கள்.

நாடு விடுதலையாவதற்கு முன்பு இந்த விளம்பர உலகம் எப்படி இருந்தது?

"கோத்ரேஜை விட வெளிநாட்டு சோப் எதுவும் எனக்குத் தெரியாது ... அதைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளேன்." இது நாடு விடுதலையாவதற்கு முன்பு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பழைய சோப்பு விளம்பரம். இந்த சோப்புக்கு உத்தரவாதம் தந்து, விளம்பரப்படுத்தியது ஒரு அழகிய நடிகை என்றோ... அழகான இளம்பெண் என்றோ நீங்கள் நினைக்கலாம். அப்படி நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பு தவறானது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன்முதலில் வென்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர்தான் கோத்ரெஜ் சோப்பின் விளம்பரத் தூதராக இப்படி கருத்துச் சொல்லியிருப்பார். இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர், நோபல் பரிசு பெற்றவர், மகாகவி என மக்கள் கொண்டாடும் ரவீந்திரநாத் தாகூர் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விளம்பரத்தூதராக இருந்திருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு பெருமதிப்பு இருந்திருக்கிறது.

புத்தகங்கள், எழுதுபொருள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பல்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் ரவீந்திரநாத் தாகூர் தோன்றியிருக்கிறார்.

இவர் தோன்றியிருக்கும் விளம்பரங்கள் முன்னணி பத்திரிகைகளான பாஸ்மதி, கொல்கத்தா வர்த்தமானி, பண்டர் மற்றும் சாதனா, ஆனந்த பஜார் பத்ரிகா, அமிர்த பஜார் பத்ரிகா மற்றும் ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

போர்ன்விடா ஊட்டச்சத்து பான விளம்பரங்களில் இன்று கரீனா கபூர், கஜோல், ஹிர்த்திக் ரோஷன் என பாலிவுட் நட்சத்திரங்கள் கலக்குவது போல், அன்றைய தினம் ரவீந்திரநாத் தாகூரின் வாசகங்கள் கலக்கியிருக்கின்றன.

தங்கள் பொருட்களை விற்க நினைக்கும் நிறுவனங்கள் தாகூரின் புத்தகங்களை அலசிப்பார்ப்பார்கள். அவரது வார்த்தைகளில் தங்களுக்கு வியாபார பலன் கிடைக்காதா என்று ஆய்வு செய்வார்கள். தங்கள் நிறுவனங்கள் பற்றியும், நிறுவனப் பொருட்கள் பற்றியும் ஒரு சில வார்த்தைகளை அவரிடம் கேட்பார்கள்.

தாகூர் சொல்லும் வார்த்தைகளை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறார் தாகூரைப்பற்றி ஆய்வு செய்யும் அருண்குமார் ராய். மகாகவி தாகூர் 1889 முதல் 1941 இல் அவர் இறக்கும்வரை பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதாக அருண்குமார் ராய் கூறுகிறார்.

இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக, உள்நாட்டு தயாரிப்புக்களை ஊக்கப்படுத்தவே தாகூர் இவ்வாறு விளம்பரச் சொற்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தாகூரைப் படிக்கும் மற்றொரு ஆராய்ச்சியாளர் பபித்ரா கூறுகையில், "அவரது விளம்பர தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களால் செய்யப்பட்டவை. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட இந்திய நிறுவனங்கள் சிரமப்பட்டார்கள். ரவீந்திரநாத் தாகூர் தனது சொந்த நாட்டின் தயாரிப்புகளை மேம்படுத்துவது தனது சொந்த கடமையாகவே பார்த்தார் என்றார்.

விதிவிலக்காக, பிரிட்டிஷ் பன்னாட்டு கேட்பரி தயாரித்த பொன்வியேட்டாவின் விளம்பரத்திலும் தாகூர் இடம்பெற்றுள்ளார். பிரிட்டிஷ் நிறுவனங்களும் தாகூரை பயன்படுத்திக் கொண்டுள்ளன.

தாகூரின் சொற்கள் ஒவ்வொன்றும் மந்திரச்சொல்லாக இருந்துள்ளன. வணிக தயாரிப்புகளுக்கு மட்டுமல்லாமல், ஒரு சில மனிதர்களுக்காகவும் அவர் விளம்பரத்தூதராக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

1935 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் உள்ளூர் வாரியத் தேர்தலில் போட்டியிட்ட அமர் கிருஷ்ணா கோஷ், தாகூரின் ஆதரவுடன் களம் இறங்கினார். "ரிசர்வ் வங்கியின் உள்ளூர் வாரியத் தேர்தலில் அமர் கிருஷ்ணா கோஷ் வெற்றி பெறட்டும்" என்று தாகூர் கடிதம் எழுதினார். இது விளம்பரமாக பயன்படுத்தப்பட்டது.

மகாகவி தாகூர், வங்க இலக்கியத்தின் பிதாமகன் மட்டுமல்ல, கவிதையின் ஊற்றுக்கண் மட்டுமல்ல, சிறந்ததொரு கதைசொல்லி மட்டுமல்ல மக்களின் இதயங்களில் மாமனிதராக வாழ்ந்தவர். அவருடைய சொல் என்றுமே வெல்லும் சொல்லாக இருந்துள்ளது. அது விளம்பர உலகையும் ஆட்சி செய்துள்ளது!.