murasoli thalayangam

“மேகதாது என்பது படமல்ல; கோடிக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்வாதாரம்!” : முரசொலி தலையங்கம் அறிவுறுத்தல்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அனைத்திலும் மந்தமாக இருக்கும் த.வெ.க. அரசு, மேகதாது விவகாரத்திலும் அக்கறையில்லாமல் இருக்கிறது. மேகதாது அணையைக் கட்டுவது ஒன்று தான் தனது வாழ்நாள் லட்சியம் என்பதைப் போல பேசி வருகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.

கடந்த 13 ஆம் தேதியன்று மைசூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பேசும் போது, “மேகதாது அணையைக் கட்டலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று சொல்லி இருக்கிறார்.

கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அந்த மாநிலத்தில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு மேகதாதுவை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டுமா?

“இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது. நமது ஒற்றுமையையும் கர்நாடக முதலமைச்சருக்கு நமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தையும், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமருக்கு நேரில் தர வேண்டும். காவிரி உரிமையைப் பொறுத்த வரையில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம்" என்று தி.மு.க. தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு "ஸ்கீம்" உருவாக்கப்பட்டு எந்த எந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டுவிட்டது.

அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டது. இதனடிப்படை யில் கர்நாடக அரசு செயல்படுவதை உறுதி செய்தாக வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட நினைப்பது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் எதேச்சதிகாரப் போர் ஆகும். இதனை யாரும் வேடிக்கை பார்க்க முடியாது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர கர்நாடகம் மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு. சட்ட மீறல். மேகதாது அணைகட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறுவது ஆகும். இந்த உரிமையை தமிழ்நாடு நிலைநாட்ட வேண்டும்.

காவிரி உரிமை மீட்பு பிரச்சினையில் வழக்கம் போல் த.வெ.க. அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது. இதை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதிச் செயல்பட வேண்டும். வெறும் டயலாக் பேசுவதோடு விஜய் நின்று விடக்கூடாது.

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு தனியாகச் சென்று படையெடுக்கப் போவதைப் போல சீன் போட்டார் விஜய். 'தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்' என்று சோக கீதமும் பாடினார்.

கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாடுகளை எடுத்து, ஒன்றாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் இங்கும் தனி ஆவர்த்தனம் காட்ட நினைத்தார் விஜய்.

‘காவிரியில் நீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதலமைச்சர் விஜய், கர்நாடகம் செல்லப் போகிறார்' என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார்.

‘இதனால் எந்தப் பயனும் இல்லை, சும்மா கணக்குக்காட்டத்தான் பயன்படும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். உழவர் அமைப்புகளும் இதே கருத்தைச் சொன்னார்கள். அதை மீறி கர்நாடகம் செல்வதில் உறுதியாக இருந்தார் விஜய். உடனே தனது பயணத்தை மறைத்தார் விஜய்.

“கர்நாடகா வரும் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன். காவிரி விவகாரம் குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் விஜய் என்னிடம் பேசினார். கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வை யிடவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது உள்ளிட்ட கர்நாடகா வின் நீர்நிலைகளை முதலமைச்சர் விஜய் பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரே சொன்னார்.

இதை விட தமிழ்நாட்டுக்கு அவமானம் தேவையா?

இவராக வலியப் போய் கர்நாடகாவுக்கு வரப்போவதாகச் சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்? இதனால் என்ன பயன் ஏற்படும்? அணைக்கட்டுகளின் மேல் நடந்து போவதைப் போல ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும்.

கர்நாடகாவுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதால் பயனில்லை என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணம். அதை மீறி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டார் விஜய்.

‘கர்நாடகா வந்து பேசுகிறேன் என்ற விருப்பமானது தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்து தான் வந்தது’ என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொன்னார். இத்தகைய அவமானம் தமிழ்நாட்டுக்குத் தேவையா?

கன்னட அமைப்புகளும் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவுக்குள் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். இதன்பிறகு தான், ‘தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்’ என்று நடித்தார் விஜய்.

மேகதாது என்பது படமல்ல. கோடிக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினை. அதில் இது போன்ற சினிமா டயலாக்குகளை அடித்து ஆறு மாத காலத்தைக் கடத்தி விட்டார் விஜய். இனியாவது இதை சீரியஸான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

படத்தில் வேண்டுமானால் சோலோவாக நடித்துக் கொள்ளட்டும். முதலமைச்சராக அனைவரையும் அரவணைத்து ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

Also Read: வெட்கமில்லாமல்... : சோனியாகாந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்க்கு அப்பாவு கண்டனம்!