murasoli thalayangam
“விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது! கேவலம்... மகா கேவலம்!” : முரசொலி தலையங்கம்!
அடிதடி துணை சபாநாயகரும் – ஆபாச எம்.எல்.ஏ.வும்
ஆறு மாத விஜய் ஆட்சிக்கு மகுடம் வைப்பதைப் போல இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒன்று: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனுக் கொடுக்க வந்தவரை அடி அடி என்று அடித்துள்ளார் துணை சபாநாயகர் ரவிசங்கர்.
துறையூரைச் சேர்ந்த கார்த்திக், தனது 23ஆவது வார்டில் இருக்கும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து துறையூர் எம்.எம்.ஏ.வான ரவி சங்கரைச் சந்தித்து மனுக் கொடுக்க வந்துள்ளார். ரவி சங்கருக்கு முதலில் போன் செய்கிறார். அவர் எடுக்கவில்லை என்றதும் நேரில் வந்துள்ளார். கார்த்திக்கை அடிக்கிறார் துணை சபாநாயகர். ‘நான் விஜய்க்காக வோட்டுப் போட்டவன்’ என்று கதறுகிறார் கார்த்திக். அதன் பிறகும் அடிக்கிறார் ரவிசங்கர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
உடனே கார்த்திக்கை அழைத்து சமாதானம் செய்கிறார் துணை சபாநாயகர். ‘துணை சபாநாயகரை சந்திக்கச் சென்றபோது கூட்ட நெரிசலில் தவறி விழுந்துவிட்டேன். என்னை யாரும் தாக்கவில்லை’ என்று கார்த்திக் சொல்வது போல வீடியோ வெளியானது.
அதன்பிறகு உண்மையைச் சொல்லி விட்டார் கார்த்திக். ‘’என்னை மிரட்டித்தான் துணை சபாநாயகர் ரவிசங்கர் அப்படிச் சொல்ல வைத்து வீடியோ எடுத்தார். நான் சொன்ன மாதிரி பேசவில்லை என்றால் உயிரோடு விட மாட்டோம் என்று மிரட்டினார். என் உயிரையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே அப்படிச் சொன்னேன்” என்று சொல்லி விட்டார் கார்த்திக்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் எப்படி இருக்கிறார் என்பதை நாடு பார்த்து தலைகுனிகிறது. இவரை இந்தப் பதவிக்கு நியமித்த போதே ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது. அது அதைவிடக் கேவலமானது.
இரண்டு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,
அருள் விக்னேஷ். இப்படி ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக வைத்துள்ளார் விஜய். ‘அந்த மாவட்ட ஆட்சியர் புகார் தந்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். தலைமைச் செயலாளருக்கு புகார் சொல்லப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ்மோகனிடம் நேரில் வந்து சொல்ல வேண்டுமா?
மனுக் கொடுக்க வந்தவரைத் தாக்கிய துணை சபாநாயகர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் முதலமைச்சர் விஜய்? இதுவரை எதுவுமில்லை.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் முதலமைச்சர் விஜய்? இதுவரை எதுவுமில்லை.
நேற்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்தார் விஜய். அதில் இவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இருவரையும் ஸ்டார் ஹோட்டலில் உட்கார வைத்து பட்டு வேட்டி சட்டை கொடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். தீபாவளி வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் விஜய். இதுதான் ஒரு முதலமைச்சருக்கு அழகா?
குறைந்தபட்சம், அவர்களைச் சந்திக்க மறுத்தார், அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை, பட்டுவேட்டி சட்டை தரவில்லை என்றாவது தனது கோபத்தைப் பதிய வைத்திருக்க வேண்டாமா? ‘அட்வைஸ் செய்தார்’ என்று செய்திகளைப் பரப்புகிறார்கள். விஜய் என்ன அறிவுரை செய்திருப்பார்? ‘வாழ்க்கையில் ஒரு ஜாலி இருக்க வேண்டியதுதான், அதற்காக அதற்கு அடிமையாகி விடக் கூடாது’ என்று சொல்லி இருப்பாரா?
யாரையும் கேள்வி கேட்கும் நிலைமையில் விஜய் இல்லை என்பதுதான் உண்மை. யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் நிலைமையிலும் அவர் இல்லை. எந்தவொரு எம்.எல்.ஏ. கோபித்துக் கொண்டாலும் ஆட்சி கவிழ்ந்து போகும்.
‘பவுடர்’ அமைச்சர் சரத்குமார் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. விஜய் ரசிகையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிக்கிய திருவைகுண்டம் எம்.எல்.ஏ., சரவணன் மீது நடவடிக்கை இல்லை.
‘ஜட்டியைக் கழற்றி உட்கார வைத்து விடுவேன்’ என்று சொந்தக் கட்சிக்காரர்களை போனில் மிரட்டிய அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது நடவடிக்கை இல்லை. மின்சாரக் கொள்முதலில் விளையாடி வரும் அமைச்சர் நிர்மல் குமார் மீது நடவடிக்கை இல்லை.
‘அரசு வக்கீல் நியமனத்தில் ஊழல்’ என்று குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் இருவர் மீது நடவடிக்கை இல்லை. கட்சிப் பெண்களை வளைப்பதாக ஆடியோ லீக் ஆன அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை.
‘போதை மருந்து கடத்தலில் முக்கியப் புள்ளி’ என்று சொல்லப்படுகிறவர் மீது நடவடிக்கை இல்லை. 100 கோடி நில மோசடியில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் மீது நடவடிக்கை இல்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எவர் மீதும் விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்த வரிசையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது. கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. இத்தகைய மனிதர்கள் தயவால்தான் அவர் முதலமைச்சராக இருக்கிறார். கேவலம். மகா கேவலம்.
Also Read
-
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ 22.30 கோடி அரசு நிதி மாயம் : தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு
-
பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்? : நிர்மல்குமாருக்கு தி.மு.க மகளிர் அணி கேள்வி!
-
“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
தவெக MLA-க்கள் கூட்டத்தில் தீபாவளி பரிசா? நடவடிக்கை எப்போது? எதற்கு இந்த நாடகம்? : திமுக சரமாரி கேள்வி!
-
6 மாத தவெக ஆட்சியில் 3-வது முறையாக குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு : தி.மு.க ஐடி விங் கண்டனம்!