murasoli thalayangam

“விஜய் இதற்கு வெட்கப்பட வேண்டாமா?” : த.வெ.க.வின் அலட்சிய ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!

பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்திகளின் சத்தமே அதிகம்!

தீபாவளி நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 15 படுகொலைகள் நடந்து மாநிலத்தையே பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. அதனால் தான், ‘பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்திகளின் சத்தமே அதிகம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மிகமிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டை படம்பிடிக்க இந்த ஒரு சொற்றொடர் போதும். எவ்வளவு சொன்னாலும் சொரணை வரப்போவது இல்லை என்பது வேறு! இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா, முதலமைச்சர் இருக்கிறாரா, அவருக்கு ஆளத் தெரியுமா, ஆட்சி என்றால் என்ன என்று தெரியுமா, உள்ளே அவர் கையில் இருக்கிறதா, காவல் துறை இருக்கிறதா, ஊர் ஊருக்கு காவல் நிலையங்கள் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

கொத்துக் கொத்தாக கொலை நடக்கிறது. கொள்ளை நடக்கிறது. வழிப்பறி நடக்கிறது. அரிவாள் வெட்டுகளுக்கு அளவே இல்லை. ஆட்சி இல்லை, போலீஸ் செயல்படவில்லை என்றால் தான் கொத்துக் கொத்தாக கொலைகள் நடக்கும். கேட்டால், ‘தீபாவளி போன்ற திருவிழா நாளில் இது போன்ற கொலைகள் நடக்கத்தான் செய்யும்’ என்று சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். ‘இனிமேல் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கொலைகள் நடக்கத் தான் செய்யும்’ என்றும் சொல்வார். ‘இரவு நேரங்களில் கொலைகள் நடப்பது சாதாரணம்’ என்றும் அவர் சொல்லலாம்.

த.வெ.க. ஆட்சியில் கிரிமினல் தனங்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகின்றன.

தீபாவளி நாளில் மட்டும் 15 கொலைகள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  • தேனியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதைக் கும்பலை, தட்டிக்கேட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

  • திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ராகுல், விஷால் ஆகிய 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

  • திருச்சி சமயபுரம் அருகே புறத்தாக்குடியில் பட்டாசு வெடிப்பில் ஏற்பட்ட மோதலில் ஐ.டி. ஊழியர் கிறிஸ்டோபர் என்பவர் ஸ்பேனர் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டார்.

  • சென்னை பெரம்பூர் முதலமைச்சர் விஜய் தொகுதி. பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் தனுஷ் எனும் 18 வயது இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

  • கடலூர் மாவட்டம் பெரிய கட்டுப்பாளையத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பிரித்விராஜ் என்ற 26 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

  • சிவகங்கை மாவட்டம் முருகபாஞ்சான் கிராமத்தில் விக்னேஷ் என்ற இளைஞரும், கல்லல் அருகே 25 வயதான நவீன் என்பவரும் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டனர்.

  • திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை காப்புக்காடு பகுதியில் மணிமேகலை எனும் 24 வயது பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

  • நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாபட்டியில் வனோபி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுவேதா என்ற பெண் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நின்னையூரில் பால சுப்ரமணியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

  • பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் 50 வயதான ரவி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

  • காஞ்சிபுரம் திருகாலிமேடு நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருகாலிமேடு அருகே ரயில்வே தண்டவாளம் அருகே மீட்கப்பட்டது.

  • விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் தீபாவளி நாளன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அன்பு செல்வம் எனும் 25 வயது இளைஞர் கீழே தள்ளி கழுத்தில் மிதித்து கொலை செய்யப்பட்டார்.

இதுதான் த.வெ.க. ஆட்சியின் தீபாவளி கிரைம் பட்டியல்.

‘திராவிட மாடல்’ புத்தகம் எழுதிய கலையரசனைக் கைது செய்து அதிகாலையில் முடுக்கிவிட்ட போலீசார் எங்கே போனார்கள்? நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை நள்ளிரவில் கைது செய்த காவலர்கள் எங்கே போனார்கள்?

ஆட்சிக்கு எதிராக ட்வீட் போட்டால் படை அனுப்பி கைது செய்தீர்களே அந்த போலீசார் எங்கே போனார்கள்? அவர்களை எல்லாம் வீட்டுக்குள் போட்டு பூட்டி வைத்து விட்டாரா போலீஸ் துறை அமைச்சர் மிஸ்டர் விஜய்?

சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தேனியில் கொல்லப்பட்டவர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர். போலீஸ் துறையை கையில் வைத்துள்ள விஜய் வெட்கப்பட வேண்டாமா? சமயபுரம் சுங்கச் சாவடியில் கொலை செய்யப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள். சின்னப்பிள்ளைகளை மயக்கி, குடும்பத்தினரை ஏமாற்ற வைத்த விஜய் இதற்கு வெட்கப்பட வேண்டாமா?

முதலமைச்சராக பொறுப்பு வந்ததும், சிறுவர் சிறுமியருக்கு தானே இவர் நன்றி சொன்னார். இவரது ஆட்சியில் சிறுவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள்.

தலைநகர் சென்னையில், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் கூட சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தெரியவில்லை. 18 வயது இளைஞர் ஓடஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னால் போய் கோலம் போட்டாரே விஜய். இப்போது கொலை நடக்கிறதே. தடுக்க முடிந்ததா? தடுக்க என்ன செய்தார்?

பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய்கிழியப் பேசினாரே விஜய். பென்னலூர் பேட்டையில் கழுத்தறுக்கப்பட்ட மணிமேகலை, முக்கூடலில் கொலை செய்யப்பட்ட வனோபி, வேடசந்தூரில் கழுத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சுவேதா இவர்களின் மரணம் யாருடைய கைலாகாத்தனத்தால் நடந்தது?

இந்தக் கொலைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது போதை. தடுக்கப்பட்டதா போதை மருந்துகள் இந்த ஆறு மாத காலத்தில்?

அவர் முதலமைச்சரும் அல்ல, அவர் நடத்துவது ஆட்சியும் அல்ல என்று நவம்பர் 8 ஆம் தேதி மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Also Read: சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆட்டம்.. கட்டுப்படுத்துவாரா டம்மி CM? : உதயநிதி கேள்வி!