murasoli thalayangam

திமுக தலைவரின் கோரிக்கை தமிழ்நாட்டுக்கானது மட்டுமல்ல இந்தியாவுக்கான கோரிக்கை : முரசொலி சொல்வது என்ன?

முரசொலி தலையங்கம் (02-11-2026)

குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகமிக முக்கியமான கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதனை நாடாளுமன்ற மக்கள- வைக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைக் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் நேரில் வழங்கி இருக்கிறார்கள்.

•தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

•தமிழ்நாட்டில் SIR நடவடிக்கையின் போது 97,37,832 வாக்காளர்கள் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் போனது சட்டப்பூர்வமானதா என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143 இன் படி உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும்.

•நாடு முழுவதும் SIR நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

•வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

- ஆகிய முக்கியமான கோரிக்கைகளை தி.மு.க. தலைவர் அவர்கள் முன் வைத்துள்ளார்கள். இவை தமிழ்நாட்டுக்கு மட்டுமான கோரிக்கை அல்ல. இந்தியா முழுமைக்குமான கோரிக்கை ஆகும்.

இதனை தி.மு.க. இன்று புதிதாகச் சொல்லவில்லை. SIR நடவடிக்கைகள் தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருகிறது. தமிழ்நாட்டில் அல்ல, பீகாரில் SIR நடவடிக்கை தொடங்கி, அதில் குழப்பமும் மோசடியும் நடைபெற்ற போதே தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதில் நடைபெற்ற மோசடிகளை அம்பலப்படுத்தியது.

பீகாரில் சுமார் 8 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். SIR என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து முதலில் 65 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. அடுத்து 3.7 லட்சம் பேரை நீக்கினார்கள். இஸ்லாமியர்கள், பட்- டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பின்னர் புதிதாக 21 இலட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இணைத்தது தேர்தல் ஆணையம். நீக்கப்பட்ட 3.7 லட்சம் பேரின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும், புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 இலட்சம் பேரும் முன்பு நீக்கப்பட்ட வாக்காளர்களா? அல்லது புதிய வாக்காளர்களா? என்ற விவரங்களை அளிக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை.

பீகாரில் ஒரே தொகுதியில் 80, 000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் சொந்தத் தொகுதியிலேயே 89 சதவிகித பட்டியல் சமூகத்தினரிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இல்லை. பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள். பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டவர்களின் வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம் என்பது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை யாராலும் தடுக்க முடியவில்லை. எனவேதான் இதே பாணியை எல்லா மாநிலத்திலும் அமல்படுத்தியது தேர்தல் ஆணையம்.

"தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் அமைப்பாக இருப்பதால் சட்டப்படி செயல்பட்டிருப்பதாக முன்கூட்டியே நம்புகிறோம். அதே நேரத்தில், எந்தவிதமான சட்டவிரோதமும், பாகுபாடும் நடந்திருந்தால் அந்த நடவடிக்கையே செல்லாது என அறிவிக்கப்படும்” என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. அதையும் மீறித்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் போடவில்லை என்று ஆனபிறகு தேர்தல் ஆணையம் துணிச்சலாக செயல்பட்டது. தேர்தல் ஆணையம் என்று சொல்வதை விட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தான் நினைத்தது அனைத்- தையும் செய்தார். மற்ற இரண்டு ஆணையர்களது ஆலோசனைகளை அவர் மதிக்கவில்லை என்பதை அந்த இரண்டு ஆணையர்களுமே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இப்போது உச்சநீதிமன்றமும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது. "படிவம் 6க்கு நாங்கள் ஒப்புதல் வழங்கவில்லை” என்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இவை அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நேர்- மையின்மையைக் காட்டுகிறது. இதனடிப்படையில் SIR நடவடிக்கைக்குப் பின் நடந்த அனைத்து தேர்தலும் மோசடித்தனமான முடிவுகள் கொண்டதாக அமைந்துள்ளன.

“SIR-க்குப் பிந்தைய வரைவுப் பட்டியலில் முந்தைய பட்டியலைவிட 97,37,832 வாக்காளர்கள் குறைவாக இருந்தனர். திருத்த மேல்முறையீட்டு நடைமுறைகளுக்குப் பிறகும் இறுதிப் பட்டியலில் 74,07,207 பேர் குறைவாக இருந்தனர். 234 தொகுதிகளிலும் சராசரியாகத் தொகுதிக்கு சுமார் 31, 655 பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். பல தேர்தல்களில் வாக்களித்த நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் ‘முகவரியில் இல்லை' அல்லது ‘இடம்பெயர்ந்தவர்' எனக் குறிக்கப்பட்டு, தனிப்பட்ட அறிவிப்பும் விசாரணை வாய்ப்பும் வழங்கப்படாமல் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கண்டறிந்துள்ளார்கள்”என்று தி.மு.க. தலைவர் தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தியாவில் ஜனநாயகத் தேர்தல் முறை கேலிக்கூத்தாகி விட்டது என்பதும், ஒட்டுமொத்தமாக அதன் நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதும், ஜனநாயகமே படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்பலமாகி இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவை இனியும் பெருமை பேசிக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை.

Also Read: த.வெ.க ஆட்சி பாசிச ஆட்சிதான் ; விஜய் ஒன்றும் அப்பாவி அல்ல - முரசொலி தலையங்கம் கடும் சாடல்!