murasoli thalayangam

SIR குளறுபடிகளை எப்போதுசரி செய்யப் போகிறீர்கள்? SSR குழப்பம் இல்லாமல் எப்படி நடைபெறும்? : முரசொலி!

தேர்தல் ஆணையம் முதலில் இதனை செய்ய வேண்டும்!

முரசொலி தலையங்கம் (27.10.2027)

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரப் பணிக்கு ( SIR) எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்பதவி விலக வலியுறுத்தியும் இவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள்.

2027 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தை (SSR) இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் எஸ்.எஸ்.ஆர். பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன்படி நவம்பர் 12 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அன்றுமுதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக விண்ணப்பங்கள் கொடுக்கலாம். இப்பணிகள் அனைத்தும் டிசம்பர் 23க்குள் முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கானஆலோசனைக் கூட்டத்தைத் தான் தமிழ்நாடு தலைமை ஆணையர் நடத்தி இருக்கிறார்.

தி.மு.க. சார்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினும், ”ஏற்கனவே நடத்தப்பட்ட SIR குளறுபடிகளை எப்போதுசரி செய்யப் போகிறீர்கள்? நீக்கப்பட்ட 74 லட்சம் பேரை எப்படி சேர்க்கப்போகிறீர்கள்? இப்போது அறிவிக்கப்பட்டுள்ள SSR நடவடிக்கைகளும் குழப்பம் இல்லாமல் எப்படி நடைபெறும்?” என்ற கேள்வியை எழுப்பி விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்கள்.

SIR நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர்பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 331 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இரட்டைப் பதிவு உள்ளவர்களாக 3 லட்சத்து 93 ஆயிரத்து 273 பேர் சொல்லப்பட்டார்கள். உயிரிழந்தவர்களாக 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் அறிவிக்கப்பட்டார்கள். 66 லட்சத்து 44 ஆயிரத்து 331 பேர் இடம் பெயர்ந்தவர்களாகச் சொல்லப்பட்டார்கள். பெரும்பாலான வாக்காளர்கள் தங்களது முகவரியில் வசிக்காததால் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

“முந்தைய முகவரியில் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தேடிச்சென்ற குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர்கள் இல்லாததே பெருவாரியான வாக்காளர்கள் நீக்கப்பட்ட காரணம். அந்த வாக்காளர்கள் வேறு பகுதிக்கு இடம் மாறி இருக்கலாம். அல்லது வேறு காரணத்தால் கணக்கீட்டுப் படிவத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று தேர்தல் ஆணையம் அப்போது அறிவித்தது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 13 பேர் நீக்கப்பட்டார்கள். கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேர் நீக்கப்பட்டார்கள். செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீக்கப்பட்ட- வர்கள் எண்ணிக்கைஅதிகம். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் பெரும் சதிகள் உள்ளன.

SIR நடவடிக்கை பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றி இருப்பது இப்போது அம்பலமாகி வருகிறது.

‘பிசினஸ் லைன்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், 'தமிழ்நாட்டில் செய்யப்பட்ட SIR நடவடிக்கைகள் தான் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை மாற்றியது' என்று சொல்லப்பட்டது.

SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில்தான் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறது. குறைந்த அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தி.மு.க.வும், அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் த.வெ.க.வும் வெற்றி பெற்றுள்ளது என்கிறது இப்பத்திரிக்கை.

30 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளதாகவும், 50 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 13 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளதாகவும் சொல்கிறது. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 37 இடங்களில் 24 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்குகள் நீக்கப்பட்ட 66 இடங்களில் 32 இல் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. அதாவது SIR நடவடிக்கைகள் தான் தேர்தல் முடிவுகளை மாற்றி இருக்கிறது என்று சொல்கிறது 'பிசினஸ் லைன்'.

இதன் பிறகும் SIR நடவடிக்கைகளை அப்பட்டமாக ஏற்க முடியாது.அந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல் அடுத்த குழப்பங்களைச் செய்ய விடவும் கூடாது.

“மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சொன்னதற்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் இருக்கின்றன. நேர்மையான அமைப்புதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். ஞானேஷ்குமார் போன்றவர்களை வைத்துக் கொண்டு இதைச் செய்ய முடியாது.

Also Read: “சிறுமிகள் கடத்தல் அதிகரிப்பு - உங்களுக்கு CM பதவி எதுக்குங்க சார்?” : விஜயை கடுமையாக சாடிய முரசொலி!