murasoli thalayangam
“சிறுமிகள் கடத்தல் அதிகரிப்பு - உங்களுக்கு CM பதவி எதுக்குங்க சார்?” : விஜயை கடுமையாக சாடிய முரசொலி!
'நான் பதவியேற்ற அடுத்த நொடி முதல் எந்தக் குற்றச் சம்பவமும் நடக்காது' என்று சவால் விட்ட விஜய் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என சிறுமிகள் கடத்தல் விவகாரங்களை சுட்டிக்காட்டு முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பான முரசொலி தலையங்கம் பின்வருமாறு :-
த.வெ.க. ஆட்சியில் போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்ததாக சிறுமிகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் குழந்தைகள், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. த.வெ.க. ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? போலீஸ் இருக்கிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அவருக்கு ஆட்சியின் மீதும் மக்கள் மீதும் அக்கறை என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் திரும்பத் திரும்ப கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக விஜய் உருவாக்கிய சிங்கப் பெண் படை என்ன செய்து கொண்டு இருக்கிறது? அப்படி ஒரு படை செயல்படுகிறதா? அந்தப் படை இதுவரை என்ன சாதனைகள் செய்துள்ளது என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா? அடிக்கடி காவல் துறை விழாக்களில் மட்டும் பங்கெடுத்து சல்யூட் வாங்கிக் கொள்ளும் விஜய் இதுவரை சல்யூட் அடிக்கும் வகையில் செய்திருக்கும் சாதனைகள் என்ன? குற்றத்தடுப்புகள் என்ன?
* இராணிப்பேட்டையில் சேகர் – பிரேமா ஆகியோரின் ஒரு வயது பெண் குழந்தை கடந்த செப்டம்பர் 23–ஆம் தேதி, பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானது. குழந்தை காணாமல் போய், ஒரு மாதமாகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.
* செஞ்சியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய 7 வயது சிறுமி கடந்த 12ம் தேதி மாயமானார். சிறுமி காணாமல் போய் 13 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது.
* பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் உள்ள வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 –ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவிகளை கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன சிறுமிகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
* கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி கடை உரிமையாளர் திருநாவுக்கரசுவின் 12 வயது மகன் சஞ்சய், தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சஞ்சய், தனிப்பயிற்சிக்காக ஆசிரியர் ஒருவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவன் சஞ்சய், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்பதும், பின்னர், ஒரு வாகனத்தில் ஏறி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை யாரேனும் கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பகுதியில் 6 வயது சிறுமியை ஒருவர் தூக்கிச் சென்றதை பொதுமக்கள் பார்த்துவிட்டார்கள். உடனே விரட்டிப் பிடித்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் அந்தக் குழந்தையும் காணாமல் போயிருக்கும்.
– இதுதான் விஜய் ஆட்சியில் பாதுகாப்பு நிலைமை ஆகும்.
ஆட்சியாளர்கள் மீதும், போலீஸ் மீதும் பயமில்லாத காலத்தில் தான் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும். அதைத் தான் இப்போது பார்க்கிறோம்.
தனக்கு வாக்களித்த நண்பா, நண்பீஸைக் காப்பாற்றவில்லை விஜய். குட்டீஸைக் காப்பாற்றவில்லை விஜய். ‘ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி விஜய்யும், குட்டி விஜியும் தங்கள் பெற்றோரை, தாத்தா பாட்டியை எனக்கு வோட்டுப் போட வைக்க வேண்டும்' என்று குழந்தைகளை, சிறுவர் சிறுமிகளைத் தூண்டி வோட்டு வாங்கிய விஜய் ஆட்சியில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காணாமல் போகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். மாயமாகிறார்கள். கையை பிசைந்து கொண்டு நிற்கிறது போலீஸ். அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் பட்டு வேட்டி சட்டையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார் விஜய்.
'நான் பதவியேற்ற அடுத்த நொடி முதல் எந்தக் குற்றச் சம்பவமும் நடக்காது' என்று சவால் விட்ட விஜய் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
''பச்சை புள்ளைங்க.. படிக்கிற புள்ளைங்க... சின்னப் பொண்ணுங்க... வீட்டுல இருக்கிற பொண்ணுங்க... வேலைக்கு போகிற பொண்ணுங்க... இதுங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியாது சார்" என்று டயலாக் பேசிய விஜய் ஆட்சியில் இப்போது என்ன நடக்கிறது?
விஜய் முன்பு கேட்ட கேள்விதான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
“நீங்க எதுக்குங்க சார்?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்?
உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?”
Also Read
-
“அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?” : கனிமொழி எம்.பி சுளீர் கேள்வி!
-
‘துப்பாக்கி ஹீரோ’ இல்லை குற்றங்களைத் தடுக்கத் ‘துப்பில்லாத ஹீரோ’ விஜய் : மு.க.ஸ்டாலின் காட்டம்!
-
தமிழ்நாட்டில் ‘உண்மையான தீயசக்தி’ யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னை ரேடாரில் தொழில்நுட்பக் கோளாறு : நிகழ்நேர மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல்!
-
பிரபல சமையல் கலைஞர், பத்மஸ்ரீ தாமு (72) மறைவு!