murasoli thalayangam

“நாளுக்கு நாள் அதிரித்து வரும் தூய சக்தியின் துர்நாற்றம்” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (06-10-2026)

தூய சக்தியின் துர்நாற்றம்!

தூய சக்தியாக தன்னைச் சொல்லி வந்த விஜய் கட்சியின் துர்நாற்றங்கள் இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதியிலும் அதிகமாக அடிக்கிறது.

இந்த ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளாலேயே இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “த.வெ.க. வுக்கு ஆதரவாகக்களம் இல்லை. எனவே, தூயசக்தி என கூறிக் கொண்டுவாக்காளர்களுக்குப் பணம் தருகிறது; த.வெ.க. தூயசக்தி என கூறிக்கொள்ளும் விஜய், நேர் எதிராகச் செயல்படுகிறார். ஆதரவு இல்லை என்பது தெரிந்ததால் முதல்வர் தெருத்தெருவாகச் செல்கிறார்” என்று சொல்லி இருக்கிறார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், “தோல்வி பயத்தில்தயக்கம் இன்றி த.வெ.க. கட்சி இரண்டு தொகுதிகளிலும் பணத்தை அள்ளி வீசுகிறது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு த.வெ.க.வினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன். தாராபுரம் இடைத்தேர்தலில் கூகுள் பே போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு த.வெ.க.வினர் பணம் கொடுப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.

தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன், “தாராபுரத்தில் த.வெ.க.வினர் வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணம் வழங்கி வருகின்றனர். கிராமங்களில் அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். பேர- வைப் பொதுத் தேர்தலில் அதிக அளவில் தொகுதிக்குச் செல்லாத த.வெ.க.வினர் தற்போது இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் வங்கிக் கணக்கில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்க முடியாது. ஆனால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பணம் கோடிக்கணக்கில் புழங்குகிறது. தேர்தல் ஆணையம் தூங்குகிறது. எப்படி இவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி இருக்கிறார்.

“தனித்தனி நபர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தான் பார்த்திருக்கிறோம். ஒட்டுமொத்த தெருவையே விலை பேசுவதை இந்தத் தேர்தலில் பார்க்கிறோம். அமைச்சர்கள் பலர் இதில் இறங்கி இருப்பதாகச் செய்திகள் வருகிறது. ஒவ்வொரு வோட்டுக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கொடுக்கிறார்கள் . இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று நினைக்கிறார்களா? போன் பே, கூகுள் பேமூலம் எல்லாம் நடக்கிறது” என்றும் வீரபாண்டியன் சொல்லி இருக்கிறார்.

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு த.வெ.க. சார்பில் டிபன் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. அதற்குள் பணம் வைக்கப்பட்டுள்ளது. இவை வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகாராகத் தரப்பட்டுள்ளது. பறக்கும் படைக்குச் சொன்னாலும் அவர்கள் இதைப் பிடிப்பது இல்லை. தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இதைத் தான் தூய சக்தி என்கிறாரா விஜய். 'தேர்தலில் வாக்காளர்களுக்குப்பணம் கொடுப்பதை ஒழித்திருக்கிறோம்' என்று சொல்லித் திரிகிறார் விஜய். ஏழைகளை நிறுத்தினோம் என்றும் சொல்லித் திரிகிறார் விஜய். இரண்டுமேபொய்.

த.வெ.க. சார்பில் அதிகப்படியான கோடீஸ்வரர்கள் நிறுத்தப் பட்டார்கள். பெரும்பாலும் பணம் படைத்தவர்களுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மாற்றுக் கட்சியில் இருந்து வந்த, பணம் படைத்தவர்களுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள் என்பதே உண்மை.

அதே போல் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு த.வெ.க. வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள். 'சேலம் வேட்பாளர் 2 ஆயிரம் கொடுத்தார். அதனால் தான் அவர் வெற்றி பெற்றார். நான் பணம் கொடுக்காமல் விட்டுவிட்- டேன்' என்று ஓமலூர் தொகுதியில் நின்று தோற்றத.வெ.க. வேட்பாளர் சொன்னார். இதுதான் உண்மை ஆகும்.

கோடீஸ்வரர்களை நிறுத்தி, அவர்களையும் அதிகம் பணம் செலவு செய்ய வைத்துத்தான் பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களை விஜய் கட்சிகைப்பற்றியது. அதே வழியைத் தான் இடைத்தேர்தலில் பின்பற்றுகிறார் விஜய்.

குதிரை பேரம் நடத்துவதில் விஜய் தேர்ந்தவர் என்பதைப் பார்த்தோம். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதிலும் அவர் சாமர்த்தியசாலி என்பதையும் பார்த்தோம். இடைத்தேர்தல் களத்தில் வாக்குகளை விலை பேசுவதிலும் கூச்சப்பட மாட்டார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அரசு வழக்கறிஞர் பதவிக்கு சொந்தக் கட்சி வழக்கறிஞர்களிடமே லட்சக்கணக்கில் பண வசூல் நடந்துள்ளது. த.வெ.க.வைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலேயே வழக்குப் போட்டார். இந்த தூயசக்தி என்ன செய்தார் தெரியுமா?

அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட நீதி மன்றத்துக்கு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் விளையாடியதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை குற்றம் சாட்டி உள்ளது. இதனை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ‘லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்கள் வர வேண்டுமா? அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?' என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது விஜய்யைப் பார்த்துத்தான்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையை சீரமைக்க டெண்டர் விடுவதற்கு முன்னதாக ஒரு நிறுவனம் பணியைத் தொடங்கி விட்டது. தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் முறைகேடு எனச் சொல்லப்படும் புகாருக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் இல்லை.

பழனிகோவில் இடத்தையே மொட்டை போடத் துணை போனதுதான் தூயசக்தி யின் ஆட்சியா? தனியார் பேருந்துக் கட்டணங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால் விலை உயர்ந்துள்ளது. அரசு ஆவின் பால் பற்றாக்குறை என்று திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தை தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிப்பது யாருடைய லாபத்துக்காக? பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்யத் தூண்டியவர்கள் யார்? மதுபானம், கனிம வளம் ஆகிய இரண்டு துறைகளிலும் என்ன நடக்கிறது? நடக்கப் போகிறது?

தூய சக்தியின் துர்நாற்றம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

Also Read: “பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!