murasoli thalayangam

தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!

முரசொலி தலையங்கம் (05-10-2026)

விஜய் வீட்டுப் பணமா?

ஒரு பாலத்தின் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தார் முதலமைச்சர் விஜய். 'இது'தி.மு.க. காலத்தில் கட்டிய பாலம்' என்று இணையத்தளத்தில் ஒருவர் விமர்சித்தார். உடனே, ‘இது என்ன ஸ்டாலின் சார் தனது சொந்தப் பணத்தில் கட்டிய பாலமா?' என்று கேட்கிறார் விஜய்.

‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் மோதிரம் போடுகிறீர்களே? இது என்ன உங்க சொந்தப் பணமா?' என்று திருப்பிக் கேட்டுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு விஜய்யிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வராது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர் மோதிரம் போட்டு அதனை ‘தாய்மாமன்' என்று சொல்லிக் கொண்டால் தவறு இல்லை. அரசாங்கப்பணத்தில் மோதிரம் போட்டால், அது தாய்மாமன் மோதிரமாக எப்படி ஆகும்? அவருக்கு புரியும் வகையில் சொன்னால், 'ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஏன் விஜய் ஸ்வீட் செய்யுறீங்க?' என்பதுதான்!

அவர் ஆட்சிக்கு வந்ததும் இரண்டு திட்டங்கள் மிகப்பெரிய விளம்பரம் கொடுத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டுமே 'திராவிட மாடல்' ஆட்சியில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மகத்தான திட்டங்கள் ஆகும்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று, அண்ணா பிறந்த நாளில், மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டில் செயல்படும் 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 20.59 இலட்சம் மாணவர்கள் தினந்தோறும் காலை உணவை பள்ளிகளில் சாப்பிடத் தொடங்கினார்கள். இதைத்தான் விரிவாக்கம் செய்துள்ளார் விஜய்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் வைத்துள்ளார். ஏதோ இவருக்கு காமராசர் மீது பெரிய மரியாதை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார். அந்தத் திட்டத் தொடக்க விழாவுக்கான மேடையில் கூட பெருந்தலைவர் காமராசர் பெயர் வைக்கப்படவில்லை. தனது படத்தை மட்டும் பெரிதாக வைத்து, அதற்குக் கீழே அவரே உட்கார்ந்து கொண்டார். மாணவர்களைக் கூட அருகில் உட்கார விடாமல் தள்ளித் தள்ளி உட்கார வைத்தார்.

மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராசர் காலத்தில் போடப்பட்டது என்றால் காலை உணவுத் திட்டத்தை முதன்முதலாகத் தொடங்கியவர் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்தப் பெயரை மறைக்க வேண்டும் என்பதற்கான கெட்ட எண்ணத்தில் விஜய் செயல்பட்டார். ஆனாலும் குழந்தைகள் பொய் சொல்லாது அல்லவா?

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியான தமிழ்நாட்டு ஊடகம் ஒன்று ஒரு மாணவனிடம் கேட்டது. ‘இப்ப தானே முதன்முதலா நீ பள்ளிக்கூடத்துல சாப்பிடுற? சாப்பாடு எப்படி இருந்தது?' என்று நிருபர் கேட்டதும், ‘நான் நாலு வருஷமா பள்ளிக் கூடத்துல தான் சாப்பிடுறேன்' என்று அந்தச் சிறுவன் பதில் அளித்தான். அந்த ஊடகத்துக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் விஜய்க்கும் அந்தச் சிறுவன் சொன்ன பதிலடி இது. என்ன பெயர் மாற்றினாலும் அது திராவிட மாடல் ஆட்சியின் திட்டம்தான் என்பதை மறைக்க முடியாது.

அதே போலத் தான், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை வெற்றிப் பயணம் என்று பெயர் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

2021 ஆம் ஆண்டு தான் முதலமைச்சர் ஆன முதல் நாளே, மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்ட கையெழுத்துதான் இந்தத் திட்டம். ஆட்சி மாறியதும் விடியல் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்பட்டது. (மு.க.ஸ்டாலின் விடியல் பயணம்' என்று பெயர் சூட்டலாம் என்று பலரும் ஆலோசனை சொல்லப்பட்டபோது, அதை மறுத்து, 'விடியல் பயணம்' என்று மட்டும் சூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் மக்கள் இதனை 'ஸ்டாலின் பஸ்' என்று சொல்லி அழைப்பதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். அதாவது அரசாங்க ஆணையில் இல்லை, இதயத்தில் அப்படி பொறிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் பயனாக பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மகளிருக்கும் மாதந்தோறும் 698 முதல் 1200 ரூபாய் வரை சேமித்தார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகம் ஆனது. இதைத் தான் விரிவாக்கம் செய்துள்ளார் விஜய். 'வெற்றி' என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்.

இதுவரை விஜய் செய்திருப்பது, புதிய புதிய ஸ்டிக்கர்கள் மட்டுமே!

•கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மகளிர் உரிமைத் தொகை என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•நான் முதல்வன் திட்டத்துக்கு வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு வெற்றி வீடுத் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•அன்புச்சோலைகளுக்கு மூத்த குடிமக்கள் பொழுது போக்கு மையம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•உலகம் உங்கள் கையில் என்பதற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•முதல்வர் படிப்பகங்களுக்கு டிஜிட்டல் நூலகம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்துக்கு மண்ணின் மகள் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

.விலையில்லா மிதிவண்டி திட்டத்துக்கு நவீன மிதிவண்டித் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•தகைசால் பள்ளிகளுக்கு பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளி என ஸ்டிக்கர் ஒட்டினார்.

•ஆடு, செம்மறி ஆடு ஊக்குவிப்புத் திட்டத்துக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டினார்.

ஆட்கள் முதல் ஆடுகள் வரை அனைத்தின் தலையிலும் ஸ்டிக்கர் ஒட்டியதுதான் விஜய் செய்த ஒரே வேலை.

எந்த திட்டமும் அந்த முதலமைச்சரின் சொந்தக் காசில் செய்யப்படுவது இல்லை. சொந்த மூளையால் அறிவிக்கப்படும். ஆனால் விஜய் சொந்த மூளையாலும் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

Also Read: “பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!