murasoli thalayangam

“பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம்

02.10.2026

தி.மு.க., அ.தி.மு.க. ஆக்ஸிஜனில் விஜய்!

தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க துப்பு இல்லாத விஜய், அடுத்தவர்களைப் பற்றிய அவதூறுகளின் மூலமாக காலம் தள்ளப்பார்க்கிறார். நேற்றைய முன்தினம் (செப்.30) தாராபுரத்தில் அவர் ஆற்றிய உரையும் தரங்கெட்ட உரையாகவே இருந்தது.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேரப் பார்த்தது, இதைச் செய்யலாமா, இது எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகமல்லவா என்று ஏதோ அரசியல் ஞானியைப் போல பேசினார் விஜய். அந்தக் கூட்டத்தில் அவர் இரண்டு கட்சிகள் மீது வைத்த மிகப்பெரிய விமர்சனமே இதுதான்.

அந்த இரண்டு கட்சிகளையும் விமர்சிக்க தனக்கு யோக்கியதை இருக்கிறதா என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

118 இடங்களைக் கைப்பற்றி அவர் த.வெ.க.வை தனிப்பெரும்பான்மை கட்சியாகக் காட்டி ஆட்சி அமைக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தயவால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தயவால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தயவால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவால்தான் முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்ந்துள்ளார். இவர்களில் எந்தக் கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்றாலும் விஜய் வீழ்ந்துவிடுவார். இதனை அவர் முதலில் மனதில் வைக்க வேண்டும்.

விஜய் குதிரை பேரம் நடத்தியதற்கான ஆதாரமாக வைகோவின் பேட்டிகள் இருக்கின்றன. ‘ம.தி.மு.க. உறுப்பினர்கள் வந்திருந்தால் அமைச்சர்கள் ஆகி இருக்கலாம்’ என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லி இருப்பதும் வைகோ சொன்னதற்கு கூடுதல் ஆதாரமே!

எனவே, ‘யார் தயவாலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால் நான் முதலமைச்சர் ஆகி இருக்கிறேன்’ என்று சொல்வதை விஜய் நிறுத்த வேண்டும். அவ்வளவு ரோஷம் இருந்திருந்தால் தி.மு.க. கூட்டணியில் வென்றவர் ஆதரவை வாங்கி இருக்கக் கூடாது. வெட்கமே இல்லாமல் அந்தக் கட்சி அலுவலகங்களுக்குச் சென்றபோது, இதை எல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

இவை போதாது என்று டி.டி.வி. தினகரன் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரை குதிரை பேரம் நடத்தி அவரையும் தனக்கு வாக்களிக்க வைத்தார் விஜய். இது தொடர்பான புகார் கிண்டி காவல் நிலையத்திலும் இருக்கிறது. ஆளுநர் முன்னாலும் இருக்கிறது என்பதை விஜய் மறந்து விட வேண்டாம்.

அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் விஜய். அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 பேரின் வாக்குகளை வாங்கித்தான் அவரது ஆட்சிக்கு ஆதரவு 144 என்று சட்டசபையில் நிரூபித்தார் விஜய். அதனை அவர் மறந்து விட்டாரா? தனக்கு ஆதரவு தந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக்கையும் நம்பாமல் அ.தி.மு.க.வினருடன் பேரம் பேசினார் விஜய். அந்தக் கட்சியை உடைக்கத் திட்டமிட்டார். 33 பேர் வரை உடைக்கலாம் என்று பார்த்தார். மானத்தைப் பற்றி கவலைப்படாமல் சி.வி.சண்முகம் வீட்டுக்குப் போனார். மந்திரி தருகிறேன், வாரியம் தருகிறேன் என்று ஏமாற்றினார். அதையும் நம்பி 25 பேர் போய் வாக்களித்தார்கள். இரட்டை இலையில் வென்றவர்கள் 25 பேர் ஆதரவுடன்தான் அவர் முதலமைச்சர் நாற்காலியை நிலை நிறுத்தினார்.

இவரின் யோக்கியதை தெரிந்து 20 பேர் திரும்பினார்கள். அதில் ஐவருடன் குதிரை பேரம் நடத்தினார் விஜய். ‘நீங்கள் ராஜினாமா செய்யுங்கள், அங்கு இடைத்தேர்தல் வந்தால் உங்களையே வேட்பாளராக அறிவிக்கிறேன்’ என்பதுதான் பேரம். அதனடிப்படையில் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரத்துக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கரூர் விஜயபாஸ்கரும், விராலிமலை விஜயபாஸ்கரும், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையாவும் காத்துக் கிடக்கிறார்கள்.

விஜய்க்காக பதவி விலகியவர்கள் அனைவரும் இரட்டை இலையில் வென்றவர்கள். இரட்டை இலையில் வென்றவர்களை தனது சுயநலத்துக்காக பதவி விலக வைத்தது கேவலம் இல்லையா? தூய சக்தி பார்க்கும் வேலையா இது? ‘மற்றும் பலர்’ என்று சொல்கிறாரே விஜய். அந்த ‘மற்றும் பலரை’ நம்பித்தான் அவர் ஆட்சியும் நடக்கிறது. அவரது பதவியும் நிலைக்கிறது. அவர்களை நம்பித்தான் பதவியைத் தக்க வைக்கவும் நினைக்கிறார் விஜய்.

இந்த ‘மற்றும் பலரோடு’தான் முதலில் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை மறந்து விட்டாரா? தேர்தல் முடிவுகள் வெளியான இரவு அன்று ‘லாட்டரி’ மார்ட்டின் மனைவியும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் மார்ட்டின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அவரது செல்வாக்கை யாருக்கும் நினைவூட்டத் தேவையில்லை. அவரது மருமகன்தான் ஆதவ் அர்ஜூன். எனவே அ.தி.மு.க. – த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மீடியேட்டராக அவர் இருந்துள்ளார்.

‘’பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை நல்லபடியாக நடக்கும். த.வெ.க.வுக்கும் எடப்பாடி அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது’’ என்று சொன்னவர் லீமா ரோஸ்.

‘’107 தொகுதிகள் மட்டுமே உள்ளதால் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே த.வெ.க. ஆதரவுடன் கூட்டணித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயன்றோம்’’ என்று டி.டி.வி. தினகரனும் பின்னர் பேட்டி அளித்தார்.

இப்படி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் தான் விஜய். அவர் இன்று மகா யோக்கியரைப் போல பேசுவது கேவலமாக இருக்கிறது. இதை எல்லாம் அவர் மறக்கலாம். மக்கள் மறக்க மாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தயவால் ஆட்சி அமைத்து, அ.தி.மு.க.வினருடன் குதிரை பேரம் நடத்தி அதனைத் தக்க வைத்து, தன்னை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுக்கும் பல்லக்குத் தூக்கி பச்சோந்தித் தனத்தை தினமும் காட்டி வாழ்ந்து வரும் விஜய்க்கு திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, அதன் பெருமைமிகு தலைவரையோ பெயரைச் சொல்வதற்குக் கூட அருகதை இல்லை.

Also Read: “பா.ஜ.க.வைப் பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா? விஜய் என்ன மாவீரனா?” - விஜயை பந்தாடிய முரசொலி!