murasoli thalayangam
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
முரசொலி தலையங்கம் (11-09-2026)
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி!
மதச்சார்பற்ற – சமூகநீதி – வெற்றி கூட்டணி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்களது முகங்களைப் பாருங்கள்...
யாரையெல்லாம் ‘கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகள்’ என்று விஜய் சொன்னாரோ அவர்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளார். அப்படியானால் அவர்களை விஜய் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ‘கல்லாப்பெட்டி கூட்டணிக் கட்சிகள்’ என்றுதானே சொல்ல வேண்டும்?
இந்தக் கட்சிகளின் பெயரைக் கூட உச்சரிக்கும் அளவுக்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்தவர்தான் விஜய். ‘மற்றும் பலர்’ என்றுதான் இந்தக் கட்சிகளை விஜய் அழைத்தார். இந்த ‘மற்றும் பலரை’ச் சேர்த்துக் கொண்டு தான் ‘தம்ஸ் அப்’ காட்டுகிறார். மற்றும் பலரோடு சேர்ந்த மற்றும் சிலராக ஆகிவிட்டார் விஜய்.
‘அறிவாலயம் வாசல் வழியாக நடந்து போனாலே அந்தக் கட்சிகளை அழைத்து உள்ளே போட்டு சீட்டுக் கொடுத்து விடுவார்கள்’ என்று சொன்னார் விஜய். வாசல் வழியாகப் போனதால் சட்டமன்றத்துக்குள் செல்லத் தகுதி பெற்ற கட்சிகளை வைத்துக் கொண்டுதான் இன்று முதலமைச்சர் நாற்காலியில் இருக்கிறார் விஜய். அந்தக் கட்சிகளை பனையூர் வாசலில் நிறுத்தி வைத்துத்தான் ‘போட்டோ சூட்’ நடத்தி இருக்கிறார் விஜய்.
‘காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் விலை போய்விட்டது’ என்று உளறினார் விஜய். இப்போது எதைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கி இருக்கிறார் விஜய்?
‘சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்’ என்று பேசினார். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை கோடியைக் கொடுத்து கூட்டணிக்கு கை கொடுக்க வைத்துள்ளார்?
என்ன பேசினார் விஜய்?
‘’அது என்ன ஸ்டாலின் சார் கூட்டணி பேரு? ... என்ன மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்க தான இருக்குது. ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதுனால என்னவோ அவர் அப்படியே மக்கள் நலக் கூட்டணியா அதை மாத்திக்கிட்டாரோன்னு தெரியலை. உடைஞ்ச கிளாஸை ஒட்ட வெச்சது மாதிரி, கிழிஞ்ச துணியை தச்சு வெச்சது மாதிரி. ஒட்டுப் போட்ட ஒரு கூட்டணி. அவ்வளவு தான்.” என்று பேசியவரும் இதே விஜய்தான். இன்றைக்கு அவர் அமைத்துள்ள கூட்டணியைப் பாருங்கள் அப்படியே கிழிஞ்ச துணியைத் தச்சு வெச்சது மாதிரியே இருக்கிறது. உடைஞ்ச கிளாஸைப் போலவே ஐந்து பேர் முகமும் இருக்கிறது.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை விஜய் பெறவில்லை. 118 இடங்களை அவரது கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் தரவில்லை. எந்த தி.மு.க. கூட்டணியைக் கொச்சைப்படுத்தினாரோ, அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தயவைத்தான் விஜய் நாடினார்.
காங்கிரஸ் கட்சியில் ஐவர், தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்கள். விடுதலைச் சிறுத்தைகளில் இருவர் தி.மு.க. கூட்டணியில் வென்றவர்கள். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் இருவர் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்கள். ம.தி.மு.க.வில் இருவர் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு அமைச்சர், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் என்று வலைவீசி தனது நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டார் விஜய்.
அ.தி.மு.க. வைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன், வாரியம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 25 பேரின் வாக்குகளைப் பெற்ற சந்தர்ப்பவாதிதான் விஜய். பெரும்பான்மையை மெய்ப்பித்ததும் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்றார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தனது கட்சியில் சேர்த்து இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்ச்சியை அரங்கேற்றம் செய்தார். அதற்கும் நான்கு பேர் பலியானார்கள்.
விஜய் குதிரை பேரம் நடத்தியதை ஒப்புக் கொண்டார் வைகோ. ‘ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் முதலமைச்சர் விஜய். அதை அவர்கள் இருவரிடமும் நான் சொன்னேன். அவர்கள் ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை’ என்று வைகோ ஊடங்கள் முன்னாலும் சொன்னார். தனது கட்சிப் பொதுக்குழுவிலும் சொன்னார். இந்த இரண்டு பேச்சுகளும் வீடியோ காட்சிகளாக இருக்கிறது.
‘முதலமைச்சர் விஜய்யே ஜெயிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாரே! அப்புறம் என்ன ராஜினாமா செய்ய வேண்டியதுதானே’ என்று தான் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் என்னவெல்லாம் பேசினார்?
“பா.ஜ.க. பற்றி விஜய் ஏன் பேசுவது இல்லை, எங்களை தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிக்கத் துடிக்கிறார்கள், அன்று ரஜினி இன்று விஜய் என்றெல்லாம் கேட்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு, எங்கள் கூட்டணியை உடைக்க நினைக்கிறார் விஜய், மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் விஜய் பேசவில்லை’’ என்றெல்லாம் பேசியவர்தான் அவர். இன்று விஜய்யுடன் நிற்கிறார். ‘ஆதிதிராவிடர்’ என்பதை பட்டியல் சமூகத்தின் ஒட்டுமொத்த அடையாளச் சொல் என முழங்கியவர், இன்று ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்பதே நீக்கப்பட்டதற்குப் பிறகும் ‘தம்ஸ் அப்’ காட்டிக் கொண்டிருக்கிறார்.
சந்தர்ப்பவாதம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் போட்டோ சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார்கள்.
விஜய் இப்போது அமைத்திருப்பதை மனச்சாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி என்று அழைப்பதே பொருத்தமானது. அவரது வார்த்தைகள்தான் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளன. கோபம் வேண்டாம்.
Also Read
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!