murasoli thalayangam
டெல்டா மாவட்டங்கள் குறித்து கொஞ்சமாவது முதலமைச்சர் விஜய்க்கு கவலை இருக்கிறதா? : முரசொலி கடும் கண்டனம்!
டெல்டா மாவட்டங்கள் வறண்டு கிடக்கின்றன. அதைப் பற்றி கொஞ்சமாவது முதலமைச்சர் விஜய்க்கு கவலை இருக்கிறதா? இல்லை. உழவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது புதுத் திட்டம் உண்டா? சொல்லி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதியன்று திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. திறப்பதற்கான முயற்சியாவது எடுத்தாரா? அதுவும் இல்லை. ஆண்டுதோறும் வழக்கமாகத் திறக்கும் நாளில் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லையே என்ற கவலை அல்லது வருத்தமாவது முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறதா? இல்லை.
ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையை செப்டம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க பட்டுவேட்டி சட்டையோடு போன முதலமைச்சர், விஜய்யாக மட்டுமே இருக்க முடியும். இவருக்குதான் என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்து செய்கிறாரா? இல்லை தெரியாமல் தான் செய்கிறாரா?
32 நாட்கள் தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனால் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சாகுபடி குறையும் என்கிறார்கள். இதற்கு முதலமைச்சரின் பதில் என்ன? ‘செல்லம் பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுத்துவிட்டேன்’ என்பது தான் அவர் இந்த மாநிலத்துக்குச் சொல்லும் பதிலா? ஒரே ஒரு பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுத்து விட்டால் கோடிக்கணக்கான உழவர்களை கூல் செய்து விட முடியுமா?
மூதாட்டியைக் கட்டிப் பிடித்து போட்டோ எடுப்பதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். செய்துவிட்டுப் போய்விட்டார். இன்னும் அந்த அதரப்பழைய பாணி தனக்கு கைகொடுக்கும் என்று விஜய் நம்புகிறாரா?
‘அரசாங்கம் மாசா மாசம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய்ல தான் என் வாழ்க்கையே ஓடுது’ என்று விஜய்யிடமே சொல்லி இருக்கிறார் அந்த மூதாட்டி. ஆயிரம் ரூபாய் நோட்டில் தெரிவது திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகம் அல்லவா? இவரைப் போன்றவர்களை ஏமாற்ற முடியாது.
கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உரிய அளவில் வழங்குவது இல்லை. அதைத் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத முதலமைச்சராக விஜய் இருக்கிறார். அதை மறைக்க ‘மேட்டூர் சூட்டிங்’ போல, ‘மைசூர் சூட்டிங்’ எடுக்க நினைத்தார் விஜய். ஆனால் கர்நாடக அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின் வாங்கினார் விஜய்.
காவிரி உரிமை நீரைத் தடுக்க மேகதாது அணையைக் கட்டுகிறது கர்நாடக மாநிலம். இதனைத் துணிச்சலோடு எதிர்க்கவில்லை முதலமைச்சர் விஜய். பாவலா காட்டிக் கொண்டு இருக்கிறார். இந்த உரிமைகளுக்காக ஒன்றிய அரசிடம் பேச வேண்டிய தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி, ஏதோ ஒரு விழாவில் நடிகையுடன் கைகோர்த்து ஆடிக் கொண்டு இருக்கிறார். தனது படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட வழங்கப்பட்ட பதவி அது.
தனது அதிகாரத்துக்கு உட்பட்ட மாநிலத்தில் உழவர்களுக்கு நன்மை செய்தாரா முதலமைச்சர் விஜய் என்றால் அதுவும் இல்லை. அனைவருக்கும் பயிர்க்கடன் என்று சொல்லி விட்டு, அதிலும் பல்வேறு நிபந்தனைகளை வைத்து உழவர்களை ஏமாற்றினார் விஜய்.
இதன் தொடர்ச்சியாகத்தான் மேட்டூர் ‘சூட்டிங்.’ மேட்டூர் அணையை தண்ணீரைத் திறந்து வைக்க வருகை தரும் இவருக்கு ஆன செலவு மட்டும் ரூபாய் 5 கோடியைத் தொடுகிறதாம். இவரைப் பாதுகாக்கிறார்களாம்? யாரிடம் இருந்து? அவரது ரசிகர்களிடம் இருந்து. உலகத்தில் சொந்த ரசிகரை 'பேரிகார்டு' வைத்து தடுத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு பயந்து போயிருக்கிறார் விஜய்.
தேவையான அளவு தண்ணீரே இல்லை. பயிர் விளைச்சலுக்கு இது போதுமானதும் இல்லை. அரைகுறை நிலையில் மேட்டூர் அணையைத் திறந்து வைக்க கோடிகளை வாரி இறைக்க வேண்டுமா? அரசாங்கக் காசில் தனது விளம்பர வெறியைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா?
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சரியாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர் திறந்து வைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது. இதெல்லாம் இன்றைய முதலமைச்சருக்குத் தெரி-யுமா?
மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டால் 200 நாட்கள், 130 நாட்கள் என தண்ணீர் பாயும். அதுதான் உழவர்களை மகிழ்வித்தது. இன்று மூன்று மாத காலம் தாமதமாகத் திறப்பதால் மொத்தமே 45 நாட்கள் தான் தண்ணீர் பாயும். இது போதாது, காணாது என்கிறார்கள் உழவர்கள். இதுவாவது முதலமைச்சருக்கு சொல்லப்பட்டதா?
“டெல்டா பாசனத்துக்காக செப்.1-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும்" என அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 90 அடி-யாகத் தான் உள்ளது. இதனால், அணையில் இருந்து 40 முதல் 50 நாட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இது சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது.
எனவே, அணைக்கு நீர்வரத்தும் 3 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை இருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகோ அல்லது செப்.10-ம் தேதிக்கு பிறகோ பாசனத்துக்காக தண்ணீர் திறந்தால்தான் ஒரு போக சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுமையாக செய்ய முடியும்" என்று விவசாய சங்கங்கள் சொல்வதை முதலமைச்சர் விஜய்க்கு யாராவது சொன்னார்களா?
அல்லது, ‘சூட்டிங் தானே போய் வரட்டும்’, ‘அவர் மேட்டூர் அணையைத் திறக்கப் போகவில்லை, செல்லம் பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுக்கத் தானே போகிறார்’ என்று அதிகாரிகள் விட்டுவிட்டார்களா?
Also Read
-
“DMK 2.0-விற்கான பயணம் தொடங்கியது” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
GST சரிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பி.ராஜா!
-
கச்சத்தீவு விவகாரம் : தவறான தகவல் சொல்லும் உறுப்பினர் - பேரவையில் விளக்கம் கொடுத்த எ.வ.வேலு!
-
மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் பாதிப்புகள் : தவெக அரசுக்கு சுட்டிக்காட்டிய MRK பன்னீர்செல்வம்!