murasoli thalayangam

மு.க.ஸ்டாலினை பாராட்டிய கரப்பான்பூச்சி தலைவர் : இது Gen Z தலைமுறையின் பாராட்டு - முரசொலி!

முரசொலி தலையங்கம் (28-08-2026)

காக்ரோச் தலைவரின் கணிப்பு!

‘‘இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார் மு.க.ஸ்டாலின்’’ என்று CJP நிறுவனர் அபிஜித் தீப்கே புகழாரம் சூட்டி இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் கலந்து கொண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கேவிடம், “இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்?’’ என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், கேரளாவில் பினராயி விஜயன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்” என்று அபிஜீத் தீப்கே பதிலளித்தார்.

‘’தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக மு.க. ஸ்டாலினும், கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக பினராயி விஜயனும், டெல்லியை கல்வியின் சிறந்த மாநிலமாக அரவிந்த் கெஜ்ரிவாலும் மாற்றினார்கள்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

இதைவிடச் சிறந்த பாராட்டு இருக்க முடியாது. இது இந்திய அளவிலான பாராட்டாக அமைந்துள்ளது. இளைய தலைமுறையின் பாராட்டாக அமைந்துள்ளது. இளைய தலைமுறையை ஒருங்கிணைக்க அபிஜீத் திப்கே என்பவரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி இது. இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கட்சி இது. கல்வித் துறையில் முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது.

நீட் தேர்வை முறைப்படுத்தவும், நீட் தேர்வில் இதுவரை நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை இந்த அமைப்பு நடத்தியது. மிகப்பெரிய போராட்டமாக அது வெடித்தது. அராஜகமான வகையில் மாணவர்கள், இளைஞர்களை ஒடுக்கியது டெல்லி போலீஸ். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை வீரியமாக நடத்தினார்கள். வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும், அதன் தலைவர் அபிஜீத் தீப்கேவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கணிக்கப்பட்டது. இத்தகைய அபிஜித் தீப்கே தான், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்துள்ளார்.

“இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார் மு.க.ஸ்டாலின்’’ என்று CJP நிறுவனர் அபிஜித் தீப்கே சொல்லி இருப்பது, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புகழ் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்பதை உணர்த்துகிறது.

‘அனைத்துத் துறையிலும் தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’ என்றும், ‘இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’ என்றும், ‘திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது’ என்றும் சொன்ன போது இங்குள்ள சிலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் இது உண்மைதான் என்பதை இந்தியாவுக்கு வெளியில் உள்ளவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பதைத்தான் காக்ரோச் கட்சித் தலைவரின் கணிப்பு உணர்த்துகிறது.

2024–25 ஆம் நிதி ஆண்டில் 11.19 விழுக்காடு வளர்ச்சியை தமிழ்நாடு கண்டது. இதே சாதனை தொடர்ந்ததும் சாதாரணமானது அல்ல. 2025–26 ஆம் நிதி ஆண்டில் 10.83 விழுக்காட்டை தக்க வைத்து இரட்டை இலக்க சாதனையை இரண்டாவது முறையும் மெய்ப்பித்துக் காட்டினார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘’நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல. தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உயர வேண்டும்” என்று நெஞ்சுயர்த்திச் சொன்னார்.

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024–25 ஆகிய ஆண்டில் 6.5 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டை 11.19 விழுக்காடாக உயர்த்தியதுதான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையாகும்.

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி 2025–26 ஆகிய ஆண்டில் 7.4 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டின் வளர்ச்சியை 10.83 ஆக உயர்த்தியதுதான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையாகும்.

‘‘இந்தச் செயல்பாடு, மாநிலத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு வலிமைகளை எடுத்துக்காட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்னணிப் பங்களிப்பாளராக அதை நிலைநிறுத்துகிறது.” என்று பொருளாதார அறிஞர் கே.ஆர். சண்முகம் ( மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசகர்) குறிப்பிட்டார். இதுதான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனையாகும்.

இது ஏதோ பொருளாதாரப் புள்ளி விபரம் மட்டுமல்ல. இது பொதுமக்கள் மத்தியிலும் தெரிந்தது. மக்களும், மாவட்டங்களும் மலர்ந்தது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மக்கள் நலன் காக்கும் குணத்தையும், ‘அனைத்திலும் வளர்ச்சி’ என்ற மாநில வளர்ச்சி காக்கும் திட்டத்தையும் ‘திராவிட மாடலின்’ அடித்தளமாகச் சொல்லி இந்தச் சாதனைகளை மு.க.ஸ்டாலின் செய்தார்.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இலக்காக வைத்து செயல்பட்டார். தொழில் வளர்ச்சியைப் போலவே அனைத்து துறைகளும் கவனிக்கப்பட்டன. அதனால் தான் சமூக வளர்ச்சிக் குறியீட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்தது.

அரசியல் ரீதியாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம். இதனால் அவருக்கு இழப்பு அல்ல. தமிழ்நாட்டுக்குத்தான் இழப்பு என்பதைத் தான் மூன்று மாதங்களாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சினிமா கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி விஜய் என்ற நடிகர் ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்சர் பதவியை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறார்.

மூன்று மணிநேரம் படம் முடிந்ததும் மொத்தமும் மறந்து விடுவதைப் போலத்தான் மக்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். ‘நல்ல திறமையான முதலமைச்சரை தோற்கடித்துவிட்டோமே’ என்று வருத்தப்படும் மக்கள் அதிகமாகி வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்ததன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை இளைய சமுதாயத்தின் வாய்ப்புகளை குழிதோண்டிப் புதைத்து விட்டார் விஜய். இப்படி ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டோமே என்று ஜென் ஸீ இளைஞர்கள் பதிவு போட்டு வருகிறார்கள். இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?

தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்திய, வளப்படுத்திய, மேன்மைப்படுத்திய மாமனிதராம் மு.க.ஸ்டாலின் அவர்களை உணராமல் போனதே தமிழ்நாட்டு இளைய சமுதாயம் என்று நாம் வருத்தப்படும் நிலையில் காக்ரோச் கட்சித் தலைவரின் கணிப்பு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நன்றி அபிஜீத் தீப்கே!

Also Read: தொகுதி மறுவரையறை - “ஒரே வாரத்தில் பல்டி... காங்கிரஸ் முகத்தில் கரி பூசிய விஜய்”: முரசொலி கடும் விமர்சனம்!