murasoli thalayangam

தொகுதி மறுவரையறை - “ஒரே வாரத்தில் பல்டி... காங்கிரஸ் முகத்தில் கரி பூசிய விஜய்”: முரசொலி கடும் விமர்சனம்!

ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக ஒரு கூட்டம் போட்டு அவர்கள் கணக்கை முடித்த விஜய், கரூர் 41 பேர் மரண சம்பவத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. சொல்வதையும் ஆதரித்துவிட்டார் என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து முரசொலி நாளேட்டில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:-

கேரள காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வர மறுத்தவர் விஜய். ‘டெல்லி வரும் போது சோனியாவையும் ராகுலையும் சந்திப்பேன்’ என்று சொல்லி விட்டுச் சந்திக்காமல் திரும்பி வந்தவர் விஜய். (இரண்டாவது முறை சென்றபோதுதான் சந்தித்தார்!)

வைகோ புத்தகத்தை ராகுல் வெளியிடும் போது முதல் பிரதியை வாங்கிக் கொள்வதாக ஒப்புக்கொண்ட விஜய், திடீரென வர மறுத்தார். இந்தியா கூட்டணிக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது காங்கிரஸ். அதையும் விஜய் ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய் இல்லாமல்தான் இந்தியா கூட்டணிக் கூட்டமும் நடந்தது. இந்த வரிசையில் தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் காங்கிரஸ் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார் விஜய்.

மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரம் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தனது நிலைப்பாடாகச் சொன்னார் முதலமைச்சர் விஜய். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும் சொன்னார். இதையே 12.8.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி நாடகம் போட்டார் முதலமைச்சர் விஜய். இவரின் நாடகத்தைப் புரிந்துகொண்ட தி.மு.க., இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உடனே, ‘பார்த்தீர்களா? பா.ஜ.க.வுடன் சேர்ந்து விட்டது தி.மு.க.’ என்று திசை திருப்பியது த.வெ.க.

தொகுதி மறுவரையறை பிரச்சினையை முழுமையாக விளக்கி போராட்டங்களைத் தொடங்கியது, அதனை இந்தியப் பிரச்சினையாக ஆக்கியதும் திராவிட முன்னேற்றக் கழகமே! தி.மு.க. தலைவராக மட்டுமல்ல; தமிழ்நாடு முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் மிகச் சரியாகச் சிறப்பாகச் செயல்பட்டார். நடக்கிறது.

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கை நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

"இந்தப் போராட்டம் எல்லை நிர்ணயத்திற்கு எதிரானது அல்ல. நியாயமான எல்லை நிர்ணயத்திற்கான போராட்டம்" என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதனைப் புரிந்து கொள்ளாமல் த.வெ.க. அமைச்சர்கள் விமர்சித்தார்கள்.

‘தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்’ என்று காங்கிரஸ் கட்சியும் விமர்சித்தது. துரோகம் இழைப்பதும், உடனிருந்து கொல்வதும் காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலையாகும். அதனைத் தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் செய்தது. தி.மு.க. கூட்டணியில் வென்று விட்டு, த.வெ.க. ஆட்சியில் இரண்டு பதவியைப் பெற்றுவிட்டு, ‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் அலை’ என்ற கூச்சம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் தான் முடியும்.

இதுபோன்ற சூழலில் தங்களது கைப்பாவையாக விஜய்யை மாற்ற நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் தன்மை கொண்டவன் நான் என்பதை விஜய் நிமிடத்துக்கு நிமிடம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறேன்.

41 பேர் மரணத்துக்குக் காரணமான கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிப்பதாலும், பல்வேறு வருமான வரி வழக்குகளாலும் பா.ஜ.க. என்ற பெயரையே உச்சரிக்கப் பயந்து இருப்பவர் முதலமைச்சர் விஜய். அவரது ஆட்சிக்கு இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு முட்டுக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. எனவே காங்கிரஸ் கட்சியையும் அவரால் பகைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் காங்கிரஸ் இழுப்புக்காக ஒரு கூட்டத்தைப் போட்டார் விஜய். உள் அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்ததும், அவர் சொல்வதற்கும் தலையாட்டி விட்டு வந்து விட்டார் விஜய்.

20.8.2026 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ‘‘நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்ற தெளிவான சட்டபூர்வமான உறுதிமொழியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்’’ என்று பேசி இருக்கிறார் விஜய்.

‘எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் விஜய். ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்து விட்டார் விஜய். இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளின் பதில் என்ன? ‘தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்’ என்று ராகுல் காந்தி சொன்னார். யாரைச் சொன்னார் ராகுல்?

ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக ஒரு கூட்டம் போட்டு அவர்கள் கணக்கை முடித்த விஜய், கரூர் 41 பேர் மரண சம்பவத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. சொல்வதையும் ஆதரித்துவிட்டார். இப்படி பச்சையாக நிறம் மாறுவதை தைரியமாகச் செய்வது தான் விஜய்யின் துணிச்சல் ஆகும். ‘சத்தமாகச் சொல்லி விட்டால் பொய்யும் உண்மையாகும்’ என்பது போல!

Also Read: “முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!