murasoli thalayangam
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!
முதல்வர் அறையில் முறைகேடு!
"உயரமான இடத்தில் உட்கார்ந்தால்தான் இன்னும் உயரத்துக்குப் போக முடியும்” என்று ஜோசியர் சொன்னதால் தனது அறையை பத்தாவது மாடிக் கட்டடத்துக்கு முதலமைச்சர் விஜய் மாற்றுகிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
அந்த பத்தாவது மாடி அறையை உருவாக்குவதில் பல்வேறு டெண்டர் முறைகேடுகள் நடப்பதாக Times of India' ஆங்கில நாளேடு
அம்பலப்படுத்தியுள்ளது. அந்த நாளேடு வெளியிட்டுள்ள செய்தி, த.வெ.க. அரசின் முறைகேட்டை வெளிச்சப்படுத்தி இருக்கிறது.
"தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் விஜய்க்கான புதிய அலுவலகப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய அலுவலக மறுசீரமைப்புக்காக, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் அலுவலகப் பணிகள் என 3 டெண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் ஆன்லைனில் வெளியிடப்படவில்லை என்பது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டது.
அதிலும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக செய்தித்தாளில் வெளியிடப்பட்ட டெண்டரில் 5 கோடியே 54 லட்சம் ரூபாய் என மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இணையத்தில் வெளியிடப்பட்ட டெண்டரில் எந்தத் தொகையும் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் டெண்டரில் விதிமீறல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அதிகாரப்பூர்வ டெண்டர் நடைமுறை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே அலுவலகத்தில் கட்டிட இடிப்பு உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. டெண்டர் அறிவிப்புக்கு முன்பே ஒப்பந்ததாரர் குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு என பிரச்சார மேடைகளிலும், அரசு மேடைகளிலும் பேசும் த.வெ.க. அரசு, முதலமைச்சர் அலுவலகத்துக்கான டெண்டர் விதிமீறல் சர்ச்சைக்கு முறையான பதிலளிக்குமா என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது” என்று ‘Times of India' எழுதி இருக்கிறது.
இன்னமும் துறைவாரியாக நிதி ஒதுக்கீடே முடியவில்லை. அதற்குள் விடப்பட்ட ஒரே ஒரு டெண்டரில் எத்தனை முறைகேடுகள்? அதுவும் முதலமைச்சர் அறையை உருவாக்குவதிலேயே முறைகேடுகள்?
பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி நான்கு நாட்கள் கழித்துதான் ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆன்லைன் டெண்டரில் 'திட்டத்தின் மதிப்பு எவ்வளவு?' என்பதுகுறித்த எந்த விவரமுமே இடம்பெறவில்லை என்பது எவ்வளவு மோசடியானது?
அரசு விதிகளின்படி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், முதலமைச்சரின் அலுவலகப் பணிகளுக்காக வெளியிடப்பட்ட சுமார் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று டெண்டர்களில், இரண்டு டெண்டர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தபோதிலும், அனைத்து டெண்டர்களுக்கும் விண்ணப்பிக்க வெறும் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட மோசடித்தனம் இருக்க முடியுமா?
டெண்டர் யாருக்குக் கிடைத்தது என்று தேர்ந்தெடுக்கும் முன்பே டெண்டர் முதலமைச்சரின் அலுவலகப் பணிகள் தொடங்கிவிட்டது என்பதும் மோசடித்தனத்தின் உச்சம் ஆகும்.
விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர்கள்தான் த.வெ.க. அரசு சொல்லும் வெளிப்படைத் தன்மையா? ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பைக் குறிப்பிடாமல் மறைத்திருப்பது வெளிப்படைத் தன்மைமிக்க ஆட்சியா? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்?
"வெளிப்படைத்தன்மை” என்று சொல்வதற்கான தகுதியை த.வெ.க. அரசு இழந்துவிட்டது. பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் என்ன சொல்லப் போகிறார்?
இது பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ”5.54 கோடி மதிப்பிலான இந்தப் பணிக்கான டெண்டர் ஆன்லைனில் விடப்படவில்லை. டெண்டரில் ஏதோ கோளாறு இருக்கிறது. டெண்டர் விஷயத்தில் நாங்கள் ரொம்ப வெளிப்படையாக இருப்போம் என்றீர்கள். ஆனால் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கை இதில் உள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறது. இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?” என்று கேட்டார். முதலமைச்சர் விஜய் வாய் மூடி மவுனமாகத்தான் இருந்தார். தூய சக்திக்கு பதில் சொல்ல வாய் வரவில்லை.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து, 'டெண்டரே இன்னும் வெளியிடவில்லை' என்று மட்டும் சொன்னார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்திக்கும் விளக்கம் அளிக்கவில்லை. அப்பாவிகள் மீது வழக்குப் போடும் த.வெ.க. அரசுக்கு 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி கோபத்தை வரவைக்கவில்லையா?
'முடிந்த வேலைக்கு டெண்டர்... முதல்வர் அலுவலக சர்ச்சை' என்று ‘ஜூனியர் விகடன்' இதழ் (23.8.2026) செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது. ”டெண்டர் வெளிப்படைத்தன்மை பேசும் ஆட்சியில் முதல்வர் அறைக்கே, முடிந்தபிறகு டெண்டர் ஏன்?” என்று ஜூனியர் விகடன் கேள்வி எழுப்பி இருக்கிறது.
'நான் பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன்' என்கிறார் முதலமைச்சர் விஜய். இதுதான் அவர் பேச வேண்டிய நேரம். ஊழல் கறை அவரது கையில் ஒட்டி இருக்கிறது. விளக்கம் அளிப்பாரா விஜய்?
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!