murasoli thalayangam
“முதல்வர் விஜய்.. ஆட்சியை நடத்துங்கள்.. எதிர்க்கட்சியை கொச்சைப்படுத்தி காலத்தை ஓட்ட வேண்டாம்” - முரசொலி!
த.வெ.க. சட்டமன்றத்துக்கு...
மக்களை சினிமா கவர்ச்சியில் மயக்கி, சினிமாவில் செய்வதை எல்லாம் நிஜத்திலும் செய்வேன் என ஏமாற்றி முதலமைச்சர் ஆகி விட்டார் விஜய். அவருக்கு வாக்களித்த பல பேர் வருந்திக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பக்கம்.
முதலமைச்சர் ஆகிவிட்ட விஜய், ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தி.மு.க.வை விமர்சிப்பதில், அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கொச்சைப்படுத்துவதில் குளிர் காய்ந்து காலத்தை ஓட்ட நினைக்கக் கூடாது.
'எங்க உங்க அப்பாவைக் காணோம்' என்று கொச்சைத்தனமான விமர்சனத்தை அவர் சட்டசபையில் தொடங்கி வைத்தார். இப்போது கண்டதும், காணாததும் தன்னைப் பெரிய தலைவர்களாக நினைத்துக் கொண்டு சபையில் பேசி, சபையை அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறது. 'உங்க அப்பாவிடம் போய் கேளுங்கள்' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதும் அவரது உடல்மொழியும் அருவெறுப்பானவை.
கேட்ட கேள்வியே புரியாமல் ஏதோ ஒரு பதிலைச் சொல்லி, 'தினமும் பேப்பரை ஒழுங்காக படியுங்கள்' என்கிறார் முதலமைச்சர். அவர் ஏதோ தினமும் பத்து பேப்பர் படிப்பதைப் போல! 'உளவுத்துறை அனுப்பும் செய்தியையே அவர் படிப்பது இல்லை' என்று ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைக் கூட அவர் படித்தாரா எனத் தெரியவில்லை.
'சூரியனுக்கே வேர்க்கிறது', 'மழைக்கே குளிர்கிறது' என்பதைப் போன்ற மொண்ணைத் தனமான கவிதை வரிகளைச் சொல்லி முதலமைச்சர் விஜய்யை குளிர்விப்பதாக நினைத்து அவையில் அசிங்க நாற்றத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விமர்சிப்பதன் மூலமாக ஸ்கோர் பண்ணலாம் என்று நினைத்துச் செய்யப்படும் தற்குறித்தனமான விமர்சனங்களை த.வெ.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் பேசுவதன் மூலமாக திராவிட நாயகன் - தமிழினத் தலைவர் மு.க.ஸ்டாலினை துளியும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது. ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். 75 ஆண்டு இயக்கத்தின் தலைவர். ஐந்தாண்டுகள் இந்த தமிழ்நாட்டை ஆண்டவர். ஐந்தே ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொடுத்தவர். ஒவ்வொரு கையெழுத்திலும் ஒவ்வொரு சமூகத்துக்கும் வளர்ச்சிக்கான திட்டத்தைக் கொடுத்தவர்.
மகளிர் உரிமைத் தொகையானது கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தைக் கொடுத்தது. மகளிர் விடியல் பயணமானது கோடிக்கணக்கான மகளிரின் சமூகப் பங்களிப்பை உயர்த்தியது. இந்தியாவிலேயே அதிகப்படியான மகளிர் வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியது.
பள்ளி மாணவர்க்கான காலை உணவுத்திட்டம், குழந்தைகளின் உடல் வலிமையையும் மனவலிமையையும் அதிகப்படுத்தியது. சத்துக் குறைபாடுடன் பிறந்து வளர்ந்த குழந்தைகளை உள்ளவலிமை உள்ளவர்களாக ஆக்கியது. புதுமைப் பெண் திட்டத்துக்குப் பிறகு தான் மாணவிகள் கல்லூரிக்கு படிக்க வரும் எண்ணிக்கை அதிகம் ஆனது.
வேளாண் நிதிநிலை அறிக்கையானது, பாசனப்பரப்பை அதிகரித்து, விளைச்சலை அதிகரித்தது. 48 லட்சம் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் காரணமான தனித்திறமை கொண்டவர்களாக வளர்ந்தார்கள். ஐ.ஏ.எஸ். முதல் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு பணி கிடைத்துச் சென்றுள்ளார்கள். 10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார்.இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் காலா காலத்துக்கு செழிக்க வைக்கப் போகிறது.
தியாகத்தால் அரசியலுக்கு வந்து, உழைப்பால் அரசியலில் வளர்ந்து, ஆளுமைத் திறத்தால் இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் என்று பேர் வாங்கியவர் அவர். இன்றைய முதலமைச்சர் வரலாற்றை எதில் போய் தேடுவது?
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு காலம் வைத்துள்ள பாராட்டுக் கல்வெட்டுகளை எந்த அரைவெட்டு விமர்சனங்களும் சேதப்படுத்தி விட முடியாது. அரை மார்க் வாங்குவதற்காக அரைகுறையாக பேசுவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான செயலுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்று த.வெ.க. ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தி.மு.க.கூட்டணியில் இருந்து அட்டையாக உறிஞ்சி வளர்ந்து அமைச்சராகவும் ஆகிவிட்ட ஒருவர், 'முரசொலி' நிலம் பஞ்சமி நிலம் என்றெல்லாம் எடுத்துக் கொடுத்து நினைவூட்டிய பச்சோந்தித் தனத்தையும் பார்க்கிறோம். பிழைக்க இதுபோன்ற இழிசெயல்கள் தேவையில்லை. இத்தகைய குணம் படைத்தவர்கள் வருங்காலத்தில் விஜய்யையும் என்னவெல்லாம் சொல்லப் போகிறார்களோ? இது போன்ற திடீர் வேடதாரிகளிடம் தான் எச்சரிக்கை அதிகம் தேவை.
'முரசொலி' தமிழ் நிலத்தைப் பண்படுத்திய போர் முரசு. 85 ஆண்டுகளைக் கொண்டாடிய கொள்கைக் கோபுரம். அது ஒலித்ததால் தான் தமிழ்நாட்டுக்கு விடியல். அது ஒலித்துக் கொண்டே இருந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடியல்.
திராவிட முன்னேற்றக் கழகம் –- அதன் தலைவர் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் -– தமிழினத்தின் போர் முரசமாம் 'முரசொலி' - ஆகிய மூன்றும் கொச்சைப்படுத்தப்பட அனுமதியோம். த.வெ.க. ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
ஆட்சி செய்யத் தெரிந்தால் செய்யுங்கள். மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் செய்யுங்கள். அது தெரியாமல் திசை திருப்புவதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்தி அசிங்கப்பட்டு போகாதீர்கள்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!