murasoli thalayangam
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
முரசொலி தலையங்கம்
04.08.2026
கர்நாடகாவிடம் இருந்து கற்றுக்கொள்!
“காவிரிப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதால் எந்தப் பயனும் இல்லை” என்று அமைச்சர் நிர்மல்குமார் கண்டுபிடித்திருக்கிறார். கத்துக்குட்டிகளும் தற்குறிகளும் அமைச்சர் ஆனால் ஒரு பிரச்சினை எப்படி சிக்கலுக்குள் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு உதாரணம்தான் நிர்மல்குமாரின் பேட்டி ஆகும்.
காவிரிப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் நிர்மல்குமார் நித்தமும் உளறிக் கொண்டு இருக்கிறார். கர்நாடகாவிடம் காவிரி உரிமையை நிலைநாட்டும் முதுகெலும்பு இன்றைய விஜய் அரசுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. அவர்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிதானே கர்நாடகாவை ஆள்கிறது. ராகுல் காந்தியை வைத்து பேச வேண்டியது தானே? இங்கே தண்டத்துக்கு இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்து வைத்துள்ளீர்களே! அவர்களை கர்நாடக அரசிடம் பேச வைக்க வேண்டியது தானே? கர்நாடகாவிடம் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்றால் பிரச்சினையை ஒன்றிய அரசின் முன்னால் வைத்து பஞ்சாயத்து செய்யச் சொல்லும் துணிச்சலாவது இருக்கிறதா என்றால் அதுவும்விஜய் அரசுக்கு இல்லை.
டெல்லி என்றாலே கிலி பிடிக்கிறது. ஒரு பக்கம் கரூரில் 41 பேரைக் கொலை செய்த வழக்கை சி.பி.ஐ. வைத்துள்ளது. இன்னொரு பக்கம் வருமானவரி வழக்குகள், கார் இறக்குமதி வழக்குகள். அதனால் பா.ஜ.க.வையும் பகைத்துக் கொள்ள முடியாது.
வழக்கம் போல படம் காட்ட நினைத்தார் விஜய். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதாக நாடகம் நடத்தி, அணைக்கட்டுகளைப் பார்வையிடுவதைப் போல ரீல்ஸ் எடுக்கத் திட்டமிட்டார். இந்தக் கோமாளித்தனம் நடக்கப் போவதை முதலிலேயே தெரிந்து கொண்டு எச்சரிக்கை மணி ஒலித்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'கர்நாடகம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை’ என்று உழவர் பெருமக்களும் ஒப்புக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 'திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல' மாட்டிக் கொண்ட த.வெ.க. அரசு, இப்போது மழுப்புகிறது.
‘தற்போதைய நிலையில் முதலமைச்சர் விஜய், கர்நாடகம் செல்வதற்கான திட்டம் ஏதுமில்லை' என்று சொல்கிறார் நிர்மல்குமார். இதில் உண்மை என்ன என்பதை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அம்பலப்படுத்தி விட்டார். 'கர்நாடகம் வர இருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து தான் முதல் தகவல் வந்தது' என்று சொல்லி இருக்கிறார் கர்நாடக முதலமைச்சர். இதன் மூலமாக விஜய் ஆட்சி சொல்வது பொய் எனத் தெரிந்துவிட்டது.
காவிரிப் பிரச்சினை ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. அது தமிழ்நாட்டின் பிரச்சினை. எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும். மாறாக, தி.மு.க.வை விமர்சிப்பதை மட்டுமே த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் செய்து வருகிறார். அவருக்கு காவிரி பிரச்சினை என்றால் என்ன என்றே தெரியவில்லை. பிரதமர் வி.பி.சிங் அமைத்த காவிரி நடுவர் மன்றமும் தெரியவில்லை. பிரதமர் வாஜ்பாய் அமைத்த காவிரி கண்காணிப்பு ஆணையமும் தெரியவில்லை.
இந்த இரண்டையும் இரண்டு பிரதமர்கள் மூலமாகச் செய்ய வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 1990 முதல் காவிரியில் தண்ணீர் வர நடுவர் மன்றமும் கண்காணிப்பு ஆணையமும் தான் காரணம். ஆனால், 'பிரச்சினையே கலைஞரால்தான்' என்று கம்பி கட்டு கிறார் நிர்மல்குமார். தனது ஆட்சி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் வழக்கம் போல திசை திருப்பவே த.வெ.க. அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. இந்தச் சண்டையை ரசிக்கிறது கர்நாடகம்.
கர்நாடக அரசும் அரசியல் தலைவர்களும் தங்கள் மாநிலத்தின்நிலைப்பாட்டை ஓரணியாக நின்று காட்டுகிறார்கள். அங்கு காங்கிரஸும்ஒன்றுதான். பா.ஜ.க.வும் ஒன்றுதான். அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இருந்து ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள்.
கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் வந்து விட்டார்கள். மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சரும் இருக்கிறார். ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அமைச்சர்களும் அங்கு உட்கார்ந்து உள்ளார்கள். நேற்று கூட பெங்களுரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து, அதில் ஒன்று விடாமல் எல்லா கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா த.வெ.க. அரசு? தமிழ்நாட்டின் ஒற்றுமையைக் கெடுத்த நிர்மல்குமார், 'கர்நாடக முதலமைச்சரே தி.மு.க. பேச்சைத்தான் கேட்பார்' என்று சொல்வது எல்லாம் ஆணவத்தின் உச்சம். தான் சொல்லும் சொல்லுக்கு என்ன பொருள் என்றே தெரியாதவர் தான் இப்படி எல்லாம் பேசுவார்? வாய்க்கு வந்ததை உளறுவது என்று இதற்குப் பெயர். இதை ராகுல்காந்திக்கு கடிதமாக எழுதுவாரா விஜய்? காவிரிப் பிரச்சினையை இதை விட மோசமாக யாரும் கையாள முடியாது. இந்த மாதிரியான உளறுவாய்களிடம் ஆட்சி சிக்கி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை ஆகும்.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!