murasoli thalayangam
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!
என்ன கண்டுபிடித்துள்ளார் நிர்மல்குமார்?
முரசொலி தலையங்கம் (ஜூன் 27)
“ஆட்சிக்கு வந்த முப்பதே நாளில் தனது பெரம்பூர் தொகுதியை முதலிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர். மின்வெட்டில்தான் முதலிடத்தில் இருக்கிறது பெரம்பூர்” என்று சட்டமன்றத்திலேயே நெத்தியில் உறைக்கும் அளவுக்குக் கொட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள். தனது பதிலுரையில் அதற்கும் பதில் சொல்ல வில்லை முதலமைச்சர் விஜய்.
மின்துறைக்கு அமைச்சராக ஆக்கப்பட்டவர் மகா புத்திசாலி. அவருக்கு ‘நான் முதல்வன்' என்ற வார்த்தையே புரியவில்லையாம். இரண்டாண்டு காலத்துக்குள் மூன்று கட்சி மாறியவருக்கு 'நான் முதல்வன்' என்ற வார்த்தையே புரியவில்லையாம். அப்படிப்பட்டவருக்குதான் மின்துறை தரப்பட்டுள்ளது. அவர் மின்வெட்டுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்துவிட்டார்.
*மின்வெட்டே இல்லை.
•எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மின்சாரத்தைத் துண்டிக்கிறார்கள்.
•மின்வாரிய அலுவலகத்தில் 'ஹார்ட் டிஸ்க்' திருடு போய்விட்டது.
•பியூஸ் கேரியரை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
•மின்சாரம் கொடுக்க முடியாதற்குக் காரணம் தி.மு.க. அரசாங்கம். இதோ வெள்ளை அறிக்கை வெளியிடப் போகிறேன்... இதுதான் நிர்மல் குமாரின் பதில்கள் ஆகும். 'கரண்ட் எப்ப வரும்?' என்ற கேள்விக்கு இது எதுவும் பதில் இல்லை.
கட்சித் தாவல் நிர்மல்குமார், 'வெள்ளை அறிக்கை' பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டே இருந்தார். இப்போது வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டு விட்டார். அது வெறும் நொள்ளை அறிக்கைதான். வெள்ளை அறிக்கை வெளியிட்டு, பேப்பரைத்தான் வீணடித்துள்ளார். இதனால் மின்துறைக்கு கூடுதல் செலவுதான் ஏற்படுத்தி இருக்கிறார் நிர்மல் குமார்.
மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது. ஒரு குழந்தை உள்ள வீடு, நான்கு குழந்தை உள்ள வீடாக மாறும் போது செலவினம் அதிகரிக்கும் அல்லவா? அதனைக் கணக்கிட வேண்டாமா?
தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 2 லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்தது தி.மு.க. அரசு.
நிர்மல் குமார் வெளியிட்ட புள்ளிவிவரப்படியே மின்சார வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை தி.மு.க. ஆட்சியில் குறைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி, 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாகக் குறைக்கப்பட்டது. இது சாதனை அல்லவா?
கடந்த ஆட்சியில் கட்டமைப்புக்காகச் செலவு செய்யப்பட்டதை நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கையே ஒப்புக் கொள்கிறது. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளன. 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
வடசென்னை அனல் மின் திட்டம் நிலை 3, உடன்குடி மின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலையப் பணிகள், குண்டாறு மின் திட்டப் பணிகள், கொல்லிமலை மின் திட்டம் ஆகியவை தொடங்கி, பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இதையும் தனது ஆட்சியின் சாதனையாகத்தான் சொல்லி திறந்து வைக்கப் போகிறீர்கள். இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் எதையும் கணக்கில் எடுக்காமல், செலவினம் என்று சொல்வதே, நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாதவர் சொல்வது ஆகும்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, இவை அனைத்துக்கும் ஆணித்தரமான மறுப்பை பதிவு செய்து விட்டார்.
•கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது.
•மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளது. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டிக்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர்படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது.
•பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்று இருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2021 இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731 கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதைக் கூறாமல் மறைத்துள்ளனர்.
•டெண்டர்களைப் பொறுத்தவரையில் அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளைக் குறைக்காமல், நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதையும் பார்ப்போம்.
•சமீபத்தில் த.வெ.க. அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது தி.மு.க. ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் தி.மு.க. ஆட்சியில் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது எதுவும் த.வெ.க. அரசின் சாதனைகள் அல்ல.
•மின்வெட்டுப் பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதைத் தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை.
– இவை அனைத்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மறுப்புகள் ஆகும். இதற்கும் இந்நாள் அமைச்சர் நிர்மல் குமாரிடம் இருந்து பதில் வராது. வெள்ளை அறிக்கை மூலமாக மீண்டும் மீண்டும் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார் நிர்மல் குமார்.
தெரியாத்தனமாக மக்கள் கூடுதல் வாக்குகளை த.வெ.க.வுக்குக் கொடுத்துவிட்டார்கள். அதை மனதில் வைத்து ஆட்சியில் இருக்கும் காலத்துக்குள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பாருங்கள். தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சொல்லி காலத்தைக் கடத்த நினைக்காதீர்கள்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!