murasoli thalayangam

ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!

முரசொலி (13-06-2026)

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனையை ஒப்புக்கொண்ட விஜய்!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை ஒப்புக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய். டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய் பேச்சில் இவை வெளிப்பட்டது.

உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு – என்று முதலமைச்சர் விஜய் சொல்லி இருப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் எட்டப்பட்ட சாதனை ஆகும்.

2024–25 ஆம் நிதி ஆண்டில், திராவிட மாடல் ஆட்சியில் 11.19 விழுக்காடு வளர்ச்சியை தமிழ்நாடு கண்டது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்தது. சாதாரணமான சாதனை அல்ல இது. இதே சாதனை தொடர்வதும் சாதாரணமானது அல்ல. 2025–26 ஆம் நிதி ஆண்டில் 10.83 விழுக்காட்டைத் தக்க வைத்து இரட்டை இலக்கச் சாதனையை இரண்டாவது முறையும் மெய்ப்பித்துக் காட்டினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்கிற சாதனையை திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்த்திக் காட்டினார்கள். இதனைச் சொல்லித் தான் விஜய்யும் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு குறித்தும், தி.மு.க. ஆட்சி பற்றியும் பொய் பேசினார் விஜய். ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில், ‘வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு’ என்ற உண்மையைச் சொல்லி இருக்கிறார்.

அதேபோன்று இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனையையும் ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.

திருக்குறளைத் தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் விஜய். திராவிட மாடல் ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருந்த போதே 2021 ஆம் ஆண்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்ததை தமிழ்நாடு மறந்திருக்காது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் விஜய். நீட் எதிர்ப்பு என இன்று பேசியிருக்கும் விஜய், ‘மருத்துவம் மட்டும்தான் படிப்பா?’ என்று கேட்டவர்தான். இன்று அவர் மனம் மாறி இருக்கிறார். அல்லது மனம் மாறியதாக நடிக்கிறார்.

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘’அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். எங்கள் மாநிலத்தின் வளர்ச்சி என்பது, சமூகநீதி, சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொல்லி இருக்கிறார் விஜய். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சொல்லை மட்டும் நீக்கி இருக்கிறார்.

‘’தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சிகொண்ட மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு ஆகும்” என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுத் துறையின் அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னது ஆகும். அதையே, ‘‘2036–ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் விஜய்.

திராவிட மாடல் ஆட்சியில், தனது கனவுத் திட்டமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். 48 லட்சம் மாணவ, மாணவியருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். முதல் உலகளாவிய நிறுவனங்களில் வேலைகள் வரை மாணவ, மாணவியர் உயர்ந்தார்கள். இதையே காப்பி அடித்துச் சொல்லி இருக்கிறார் விஜய்.

‘‘ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் விஜய். இதுதான் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘நான் முதல்வன்’ திட்டம் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையை எப்போது கட்டித் திறப்பீர்கள் என்று கேட்காத விஜய், இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமையுங்கள் என்று சொன்னது ஜோக் ஆகத் தான் பார்க்க வேண்டி உள்ளது.

‘தி.மு.க. ஆட்சி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறது’ என்று குற்றம் சாட்டியவர் விஜய். இன்று அவர் எதற்காக நிதி ஆயோக் கூட்டத்துக்குப் போனார்? ‘‘ஒன்றிய அரசுடன் ஆக்கப் பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது” என்று விஜய் நெளிந்து குழைந்தது ஏனோ? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா?

தன் மீதான 41 பேர் மரணத்துக்குக் காரணமான கரூர் சம்பவ சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ளவா? அல்லது வருமான வரித் துறையில் ஏராளமான வழக்குகள் இருக்கிறதே? அதில் இருந்து தப்பிக்கவா?

Also Read: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் : உண்மையை தோலுரித்த முரசொலி!