murasoli thalayangam
“தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!
பதற வைக்கும் பாலியல் வன்கொடுமைகள்!
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல் கிரிமினல்களின் ஆட்டம் அதிகம் ஆகிவிட்டது. கேட்பார் இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. கொலை, கொள்ளைக்கு இணையாகப் பாலியல் வன்கொடுமைகள் நடந்து பதற வைக்கின்றன. மே 11 அன்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். மே 30 ஆம் தேதிக்குள் நடந்த பாலியல் வன்முறைகள் இவை...
•சூலூரில் நடந்த கொடுமை யாராலும் மறக்க முடியாதது. 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி உயிரோடு இருப்பதாக முதலில் சொல்லிவிட்டு, பிணமாகக் கொடுத்துள்ளது போலீஸ். அம்மாவுக்குத் தெரியாமல் சிறுமியின் உடலை எடுத்துச் சென்றுள்ளார்கள். அவசர அவசரமாக எரித்துள்ளார்கள்.
•சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை செய்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
•கடலூரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதைக்கப் பட்டார்.
•சென்னையில் 61 வயதான மூதாட்டியை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் கொடுமை செய்துள்ளார்கள்.
•திருவண்ணாமலையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். •மதுரையில் அழுகிய நிலையில் காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
•தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைதானார்கள்.
•சென்னை காசிமேட்டில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆர்.கே.நகர் 43-ஆவது வார்டு த.வெ.க. பகுதி பொறுப்பாளர் ‘பாம்பு' தினேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
•தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த த.வெ.க. நிர்வாகி தியாகு (32) கைதானார்.
•மதுரை கீழமாத்தூர் பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வரும் த.வெ.க. நிர்வாகி கண்ணன் 10-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று பாலியல் தொல்லை அளித்தபோது கையும் களவுமாக சிக்கினார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
•விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதான இவர், அதே பகுதியைச் சார்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
•திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணுக்குப் பாலியல்தொல்லை கொடுத்து நகையை ஒரு கும்பல் பறித்துள்ளது. பாலியல் தொல்லைதந்த 8 பேர் கொண்ட கும்பலில் வாசுதேவன் என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாசு தேவனின் செல்போனிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை போலீஸார் கண்டு பிடித்தனர்.
•செங்குன்றம் அருகே 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செந்தில்குமார் என்பவரை செங்குன்றம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் இவர்.
•கோவை மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர்கள் அன்னூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த த.வெ.க. இளைஞர், இரு சக்கர வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தி உள்ளார். இதனால் அச்சமடைந்த காதலர்கள், அங்குள்ள தேநீர் கடையில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்த பொதுமக்கள், இளைஞரிடம், 'ஏன் இவர்களை பின் தொடர்கிறாய்' என்று கேட்டதற்கு, ”நான் த.வெ.க.வைச் சேர்ந்தவன், பெண்களின் பாதுகாப்பிற்காகத் தான் இப்படிப் பின்தொடர்ந்து வந்தேன், என்னை விஜய் தான் பார்க்கச் சொன்னார்!” என்று உளறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக, காதலர்கள் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
•நாமக்கல்லில் இரண்டு சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குற்றவாளியார் என்று சொல்லி அந்த சிறுமிகளின் பெற்றோர் புகார் தருகிறார்கள். ஆனாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையம் பொதுமக்களால் முற்றுகை இடப்பட்டது. அதன்பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
•மதுரை திருமங்கலத்தில் கோவில் திருவிழாவுக்கு வந்த 13 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பெற்றோர் புகார் கொடுத்த பிறகு தான் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
•சென்னை மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானார். பொதுமக்கள் அவரை பிடித்து அடித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
•கோயம்பேடு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவை அனைத்தும் இருபது நாட்களுக்குள் நடந்த பாலியல் வன்கொடுமைகள். புகார் ஆனவை மட்டும். புகார் ஆகாமல் பல வன்கொடுமைகள் நடந்திருக்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கப்படும் என விஜய் முதல்வராகப் பதவியேற்ற போது கையெழுத்து போட்டார். 20 நாளாகியும் அந்தத் திட்டத்தை தொடங்கவில்லை. மே 29-ஆம் தேதி நடப்பதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத் துவக்க விழாவை ரத்து செய்துவிட்டு தனது மேனேஜர் வீட்டுக்குப் போய்விட்டார் முதலமைச்சர் விஜய். அவருக்கு எது முக்கியம் என்பதை இதன் மூலம் உணரலாம்.
தி.மு.க. ஆட்சியில் செயல்பட்ட பிங்க் பேட்ரோல் (Pink Patrol) திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என மாற்றினார்கள். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் போலீஸுக்கே பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் திலீபன் இடைநீக்கம் செய்யப்பட்டார். சிங்கப் பெண் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவருக்கு பாதுகாப்பு கேட்கும் நிலையில்தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
விஜய் முன்பு கேட்ட கேள்வி தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
"நீங்க எதுக்குங்க சார்?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்?
உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?”
Also Read
-
சிறுபான்மையினர் சுதந்திரத்தில் கைவைத்த ‘விஜய்’, மக்களின் கேள்விக்கு பதில் சொல்வாரா? : சா.மு.நாசர் கேள்வி!
-
“கலைஞரின் புகழையும், சாதனைகளையும் எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!” : தவெக அரசுக்கு பி.வில்சன் கண்டனம்!
-
“நூலக அரங்கில் அகற்றப்பட்ட கலைஞரின் புகைப்படம்.. தவெக அரசின் காழ்ப்புணர்ச்சியா?.. குவியும் கண்டனங்கள்”
-
“தி.மு.க தலைவர் கரங்களால்.. பொலிவூட்டப்பட்ட அன்பகம் கட்டடம் திறப்பு.. 75 அடி உயரத்தில் பறந்த கழகக் கொடி”
-
“முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா.. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை” : முழு விவரம்!