murasoli thalayangam

”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம்! (23.05.2026)

பொருளாதாரத்தில் மந்தம்!

நிகழாண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது ஐ.நா. இது இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலைமையை உணர்த்துகிறது.

நிகழாண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.4 விழுக்காடாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 விழுக்காடாக இருக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளது.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமெரிக்க – ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள மேற்காசிய நெருக்கடி, உலகப் பொருளாதாரத்துக்கு மற்றுமொரு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது வளர்ச்சியை மந்தமாக்கி, பணவீக்கத்தின் அழுத்தத்தை மீண்டும் உருவாக்கி, நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருந்தது. 6.6 விழுக்காடாக இந்த ஆண்டு இருக்கும் என்று கணித்தது ஐ.நா. அதையும் இப்போது குறைத்து 6.4 விழுக்காடாக ஆக்கிக் கொண்டு விட்டது. இது இந்தியப் பொருளாதாரத்தின் சரிவைக் காட்டுகிறது.

”மேற்காசியப் போரால் தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை” என்று ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் சொல்லி இருக்கிறார். அப்படியானால் எது உண்மை? கவலைப்படும் சூழல் இல்லை என்பது உண்மையானால், ஐ.நா.வின் கணிப்பு என்பது பொய்யா?

மாண்புமிகு பிரதமர் அவர்கள், “தங்கம் வாங்கி வைக்காதீர்கள், வெளிநாடு போகாதீர்கள், வீட்டுக்குள் இருந்து பணியாற்றுங்கள், இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்” என்று சொல்கிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர், 'மேற்காசியப் போரால் கவலைப்படும் சூழல் இல்லை' என்கிறார். எது உண்மை? போருக்குத் தொடர்பு இல்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறாரா பிரதமர்? அல்லது உண்மையை மறைக்கிறாரா ஒன்றிய அமைச்சர்?

இந்தப் பொருளாதார மந்தத்துக்கு போர் மட்டும்தான் காரணமா? வேறு காரணங்கள் எதுவும் இல்லையா?

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காக இதுவரை செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் பயன் அளிக்காமல் போனது ஏன்?

இந்தியப் பொருளாதாரத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது தான் 'மேக் இன் இந்தியா' திட்டம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தித் தரத்தை உயர்த்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் அடிப்படைகள் ஆகும். 27 முக்கியமான துறைகளில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று சொல்லப்பட்டது.

இந்தியாவை அனைத்து வகைகளிலும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை முறையாகச் செய்து இருந்தால் இப்போதைய பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்காது அல்லவா?

2022 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25 விழுக்காடு ஆக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அது 15 விழுக்காட்டில்தான் இருக்கிறது. இலக்கு என்பது எட்டப்படவில்லை.

இலக்காகச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்று சொன்னார் பிரதமர். அவரது மிகமுக்கியமான ஐந்து வாக்குறுதிகளில் அதுவும் ஒன்று. அதை அவர் நிறைவேற்றவில்லை.

2025ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உற்பத்தித் துறையில் ஈர்க்கப் போவதாகச் சொல்லப்பட்டது. 23 பில்லியன் டாலரைத்தான் எட்ட முடிந்தது. இலக்குகளுக்கும் உண்மைகளுக்குமான இடைவெளி மிகமிக அதிகமாக இருக்கிறது.

உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசால் முடியவில்லை. பெரும்பாலான உற்பத்தி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதனை 'அசெம்பிள்' செய்யும் இடமாகவே இந்தியா இருக்கிறது. அதனால்தான் 'மேக் இன் இந்தியா’ திட்டத்தை, ‘அசெம்பிள் இன் இந்தியா' திட்டம் என்று கிண்டலடிக்கிறார்கள்.

சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவில்லை. ஒன்றிய அரசின் அதிகப்படியான வரிகள், இத்தொழில்களை முடக்கி வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தையே சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்லி 500,1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தார்கள். இந்தியாவில் நடக்கும் பொருளாதார சுதந்திரப் போராட்டமாக இது சொல்லப்பட்டது. இந்தியாவுக்கு இன்னொரு விடுதலை நாளாக இதனைப் பலரும் பீற்றிக் கொண்டார்கள். 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் ஆனது. பின்னர் அதையும் ஒழித்தார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகச் சொல்லப்பட்டது.

எவ்வளவு அச்சடிக்கப்பட்டு இருந்ததோ அது ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டது. அப்படியானால் கருப்புப் பணம் எங்கே? ஏதுமில்லை. புழக்கத்தில் விடப்பட்ட நோட்டுகளில் 99 விழுக்காடு ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டது என்றால் எதற்காக ரூபாய் நோட்டுகளை வைத்து இப்படி ஒரு ஆட்டம் ஆடினார்கள்? வெறும் திசை திருப்பலுக்கு மட்டுமே இது பயன்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் இதுவரை செய்யப்பட்டது அனைத்தும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் தந்திரங்களாக மட்டுமே முடிந்துள்ளன என்பதைத்தான் ஐ.நா.வின் விழுக்காடு குறைப்பு உணர்த்துகிறது.

Also Read: “கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!