murasoli thalayangam
“நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி எப்போது?” : முரசொலி தலையங்கம் கேள்வி!
‘நீட்’ தேர்வு என்றாலே மோசடித் தேர்வுதான். அந்தத் தேர்வு தொடங்கிய காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதனைத் தகுதித் தேர்வாகக் காட்டிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே – 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 22.79 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். இந்தத் தேர்வையே தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது. மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மாணவர்களை இது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
எதற்காகத் தேர்வை ரத்து செய்தார்கள்? கேள்வித்தாள் கசிந்துவிட்டதாகச் சொல்லி ரத்து செய்துள்ளார்கள். ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்தத் தெரியாதவர்கள்தான் இவர்கள். ‘நீட்’ தேர்வு கேள்வித்தாள் கசிவது இது முதல் முறையல்ல. பல முறை கசிந்துள்ளது.
¬•2016–ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்விலும் வினாத்தாள் கசிந்தது.
•2017–ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன.
•2020 ஆம் ஆண்டில் உரிய மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர்.
•2021 ஆம் ஆண்டிலும் போலித் தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
•2022–ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டம் நடந்த புகாரில் பலரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர்.
2024–ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் பலருக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை 155 மாணவர்கள் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வரிசையில் இப்போதும் கேள்வித்தாள் கசிந்துள்ளது.
நீட் தேர்வு கசிவு விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. இளைஞரணிச் செயலாளர் தினேஷ் பின்வாலும் அவரது சகோதரர் மன்கிலால் பின்வாலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கியமான பா.ஜ.க. தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து தனது வீட்டில் மாட்டி வைத்துள்ளார்கள். இவர்கள் குடும்பத்தில் கடந்த ஆண்டு மட்டும் நான்கு பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்த ஆண்டு தினேஷ் பின்வாலின் மகன் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் இருந்து ‘நீட்’ வினாத்தாள் கசிந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேர்வுக்கு முன்னதாகப் பரவிய 410 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளில் 120 கேள்விகள் நீட் தேர்வில் அப்படியே கேட்கப்பட்டு இருந்தது. இதனை ராஜஸ்தான் காவல் துறை கண்டுபிடித்தது. ஏற்கனவே இது சி.பி.ஐ. தரப்பால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு என்பதால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பா.ஜ.க. பிரமுகர் உள்பட 5 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ராஜஸ்தான் காவல் துறை இதுவரை 150 பேரைப் பிடித்து விசாரித்துள்ளது. அதில் சந்தேகத்துக்கு இடமான 20 பேரை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது.
கேரளாவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் ராஜஸ்தான் மாணவருக்கு முதலில் இந்த கேள்வித்தாள் கிடைத்துள்ளது. அவர் மூலமாக ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு இது விற்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இது அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உத்தரகாண்டிலும் கேள்வித்தாள் கசிந்துள்ளது. புனேவில் ஒரு பெண் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வாய் மட்டும் பேசுகிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். கடந்த 10 ஆண்டு காலத்தில் பல்வேறு தேர்வுகளில் 89 தேர்வுத் தாள் கசிவுகள் நடந்துள்ளன. 48 முறை மறு தேர்வுகள் நடந்துள்ளது. இதுதான் தர்மேந்திரரின் சாதனை ஆகும். ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக, சர்ச்சைக்கு இடமில்லாத வகையில், புகார் எழாத வகையில் அவரால் நடத்த முடியவில்லை. ‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
எதற்காக இந்த மோசடித் தேர்வைக் கட்டி அழுகிறார்கள்? தனியார் கோச்சிங் சென்டர்களின் நன்மைக்காக மட்டும் தான். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் வர்த்தகமாக இருக்கின்றன கோச்சிங் சென்டர்கள். அதனால் லாபம் கொழிக்கும் சக்திகள் தான் இந்த நீட் தேர்வை ரத்து செய்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. கோச்சிங் சென்டர்களுக்குப் போட்டியாக கேள்வித் தாள் விற்கும் புரோக்கர்கள் பெருகிவிட்டார்கள்.
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. ராஜஸ்தானின் கோட்டா, சிகார் நகரங்களில்தான் இது போன்ற கோச்சிங் சென்டர்கள் அதிகம் இருக்கின்றன. இவர்கள் கோச்சிங்கும் கொடுக்கிறார்கள். இதுபோல கேள்வித்தாள்களை வாங்கியும் கொடுக்கிறார்கள். இவை அனைத்துமே வட மாநிலங்களில் தான் அதிகம் நடக்கிறது. தென் மாநிலங்களில் நடப்பது இல்லை. தேர்வுச் சதிகளில் உன்னிப்பாக இதனையும் கவனிக்க வேண்டும்.
“தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக ‘நீட்’ தேர்வு இருந்து வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி ‘நீட்’ தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு ‘நீட்’ ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘நீட்’ தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்பதை பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
“2026–27 கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வினை ரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார் தி.மு.க. தலைவர்.
ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வு முறையையே ரத்து செய்தாக வேண்டும். மோசடித் தேர்வுக்கு முதலில் முற்றுப்புள்ளி வையுங்கள்.
Also Read
-
இலாகா இல்லாத அமைச்சர்கள் : தேங்கிக்கிடக்கும் கோப்புகள் - அலட்சியத்துடன் இருக்கும் த.வெ.க அரசு!
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!