murasoli thalayangam
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
முதல் நாளிலேயே தமிழ்த் தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்!
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெறாத த.வெ.க.என்ற கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தயவில் ஆட்சியை அமைத்துள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத கட்சி அரசின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப் போலவே, பதவியேற்பு விழாவிலேயே, அவர் நடத்தப் போகும் ஆட்சியின் இலட்சணம் பல் இளித்துவிட்டது.
பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது. அதன் பிறகு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி வைத்து தனது பதவியேற்பு விழாவை நடத்தி இருக்கிறார் விஜய். ஆளுநரின் அஜெண்டாவுக்கு விஜய் தலையாட்டி இருக்கிறார்.
அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் பாடுவதுதான் தமிழ்நாட்டின் சட்டம். அந்தச் சட்டத்தை மீறி இருக்கிறது த.வெ.க. ஆட்சி.
‘மனோன்மணீயம்' தீட்டிய சுந்தரனார் (1855–1897) எழுதிய ‘நீராரும்’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அரை நூற்றாண்டுக்கு முன் அரசாணையாக ஆக்கினார் தலைவர் கலைஞர். அந்தப் பாடலை தமிழ்நாட்டு மாநிலப் பாடலாக அரசாணை வெளியிட்டார், திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்த்தாயை வாழ்த்துவது என்பது ஒரு சடங்கு - சம்பிரதாயமாக அல்ல, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டியது என்று நினைத்து இன்னொரு அரசாணையையும் திராவிட மாடல் ஆட்சி வெளியிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தட்டு மூலமாக ஒலிப்பதை விட - உரிய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குமான மோதலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்காகத்தான் வந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடக் கூடாது, தேசிய கீதம்தான் பாட வேண்டும் என்று அடம் பிடித்தார் ரவி. அதனை இறுதி வரை மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கவில்லை. இதற்காகவே சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் போனார் ரவி. இதுபோன்ற கடந்த கால அரசியல் செயல்பாடுகள் எதையும் அறியாமல், மக்குத் தனமாக ஆளுநர் மாளிகைக்குத் தலையாட்டி இருக்கிறது புதிய அரசு.
தமிழ்நாடு அரசு பதவி ஏற்பு விழாவில் 'வந்தேமாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயல். சட்டத்தை மீறிய செயல். தமிழை மீறிய செயல். தமிழை அவமானப்படுத்தும் செயல். த.வெ.க. ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளும் இந்தச் செயலை கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி பதவியேற்கும் போது கூட அங்கு ‘வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை. அது பா.ஜ.க. அரசு. அங்கேயே 'வந்தே மாதரம்' இல்லை. தமிழ்நாட்டில் எதற்காக ஒலிக்க வேண்டும்? 'வந்தே மாதரம்' எழுதியவர் வங்கத்துக்காரர். அவர்கள் மாநிலத்திலேயே அது ஒலிக்கவில்லை. தமிழ்நாட்டில் எதற்காக ஒலிக்க வேண்டும்? இதை முதலமைச்சர் விஜய்க்கு யாராவது சொன்னார்களா?
‘வந்தேமாதரம்' பாடல் மதச்சார்பற்ற பாடல் இல்லை என்பதால் அது தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது. அண்ணல் காந்தியடிகள் 'வந்தே மாதரம்' பாடலை ஏற்பதற்கு மறுத்து விட்டார். 1937இல் காங்கிரஸ், இப்பாடலில் இடம் பெற்ற இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளை ஏற்க மறுத்து விட்டது. தேசிய கீதமாக்க முடியாது என்று கூறி விட்டது.
முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மையமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்'. ஆங்கிலேயர்களை அரவணைத்து, இசுலாமியர்களை வெறுக்கும் கருத்துகளைக் கொண்டது தான் அந்த நூல். அதனால்தான் ‘வந்தே மாதரம்' பாடல் பா.ஜ.க.வுக்கு இனிக்கிறது.
பிரதமர் மோடி அரசு 'வந்தே மாதரம்' பாடலைப் பாட வேண்டும் என கட்டாயப்படுத்தியது. இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றினார்.
“இந்து - இசுலாமியர் பிரிவினைக்கு வித்திடுவது இந்தப் பாடல். இந்தப் பாடலை இசுலாமியர் பாடக்கூடாது என்று சொல்லப்பட்டது. சுதேசிய இயக்கத்தில் இசுலாமியருக்கு இடமில்லை என்று உறுதி செய்யப்பட்டது. அந்த நூல் இசுலாமியர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே உள்ளது என்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சொல்லி இருக்கிறார். 'வந்தே மாதரம்' பாடல் இசுலாமியர்களை காயப்படுத்துவதாக இருக்கிறது என்று சொன்னவர் தாகூர். பாடலின் சில பத்திகளில் கவிதை அழகும் நயமும் தெரிந்தாலும் அதை பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றார் தாகூர். இப்பாடலை பயன்படுத்தக் கூடாது என்று இறுதி முடிவெடுத்தவர் அண்ணல் காந்தி. இசுலாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கி இந்த தேசத்தை ‘இந்து ராஷ்டிரம்' என்று அறிவிப்பதுதான் மோடியின் கனவு”என்று பேசினார் ஆ.ராசா. இந்த அரசியல் அடிப்படை அறிவு ஏதுமில்லாமல் 'வந்தே மாதரத்துக்கு' தலையாட்டி இருக்கிறது த.வெ.க. ஆட்சி.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது, தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம். 'வந்தே மாதரம்' பாடலை அனுமதித்தது மத நல்லிணக்கத்துக்கு எதிரானது ஆகும். முதல் நாளில் இரண்டு மாபெரும் பிழைகளைச் செய்துள்ளது த.வெ.க. அரசு.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!