murasoli thalayangam

”தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சிகரத்துக்கு மகுடம்” : முரசொலி தலையங்கம்!

தொடர்ச்சியாக இரண்டாவது நிதி ஆண்டிலும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனை நாம் சொல்லவில்லை. ஒன்றிய புள்ளியியல் துறைதான் சொல்கிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டில் 11.19 விழுக்காடு வளர்ச்சியை தமிழ்நாடு கண்டது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்தது. சாதாரணமான சாதனை அல்ல இது.

இதே சாதனை தொடர்வதும் சாதாரணமானது அல்ல. 2025-26 ஆம் நிதி ஆண்டில் 10.83 விழுக்காட்டை தக்க வைத்து இரட்டை இலக்க சாதனையை இரண்டாவது முறையும் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

"தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! முதல் மூன்று ஆண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல. தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உயர வேண்டும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு சொல்லும் 100 விழுக்காடு உண்மையானது. இந்த உயரத்தை படிப்படியாக குறிவைத்து தமிழ்நாடு வளர்ந்துள்ளது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2021 -22 ஆகிய ஆண்டில் 9.7 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 7.89 விழுக்காடாக இருந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2022 -23 ஆகிய ஆண்டில் 7.6 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 6.17 விழுக்காடாக இருந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2023 -24 ஆகிய ஆண்டில் 9.2 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 9.26 விழுக்காடாக உயர்ந்தது.

•இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024-25 ஆகிய ஆண்டில் 6.5 விழுக்காடாக இருந்தது. அப்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்தது.

•இப்போது இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 7.4 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டின் வளர்ச்சியை 10.83 ஆக உயர்த்தி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தேசிய விழுக்காட்டை விட தமிழ்நாட்டின் விழுக்காட்டை அதிகரித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். அதாவது இரட்டை இலக்க வளர்ச்சியை இரண்டாவது ஆண்டாக தக்க வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.

வளர்வதைப் போலவே வளர்ச்சியைத் தக்க வைப்பதும் மிகமிக முக்கியமானது ஆகும். ” இந்தச் செயல்பாடு, மாநிலத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு வலிமைகளை எடுத்துக்காட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்னணிப் பங்களிப்பாளராக அதை நிலைநிறுத்துகிறது.” என்று பொருளாதார அறிஞர் கே.ஆர். சண்முகம் ( மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசகர்) குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு தொடர்ந்து வளர்ந்தே வருகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும்.பெயரளவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2024–25 நிதியாண்டில் 31.19 லட்சம் கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் 35.29 லட்சம் கோடியாக விரிவடைந்து, 13.16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது இந்திய மாநிலங்களிலேயே மிக உயர்ந்த வளர்ச்சியாகும்.

இது நிதி சார்ந்த வளர்ச்சியின் அடையாளம் மட்டுமல்ல. சமூகத்தின் உயர்வு சார்ந்த வளர்ச்சியின் அடையாளம் ஆகும். 2011 முதல் 21 வரை அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் கடுமையான வீழ்ச்சியை அடைந்தது. 2020 கொரோனா காலமானது படுபாதாளத்துக்கு தள்ளியது. 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தின் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதித்தது. பணமதிப்பிழப்பும், மாநிலங்களின் நிதி மூலதனத்தையும் வருவாயையும் சுரண்டும் சரக்கு மற்றும் மதிப்புக் கூட்டு வரியும் ஒட்டுமொத்த இந்தியாவைச் சுரண்டியது. அதிலும் குறிப்பாக தங்களது புறக்கணிப்பு, காழ்ப்புணர்வு அரசியல் காரணமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செயற்கைத் தடைகளை ஏற்படுத்தியது பா.ஜ.க.

இத்தகைய சூழலில் தான் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கொள்கை - நோக்கம் - ஆகிய இரண்டும் ஆட்சி நிர்வாகத்திலும் எதிரொலிக்கும் வகையில் 'திராவிட மாடல்' என்ற கொள்கையை உருவாக்கினார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘எல்லோருக்கும் எல்லாம்' என்ற மக்கள் நலன் காக்கும் குணத்தையும், 'அனைத்திலும் வளர்ச்சி' என்ற மாநில வளர்ச்சி காக்கும் திட்டத்தையும் 'திராவிட மாடலின்' அடித்தளமாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இலக்காக வைத்து செயல்பட்டார். தொழில் வளர்ச்சியைப் போலவே அனைத்துத் துறைகளும் கவனிக்கப்பட்டன. சென்னை போன்ற பெருநகரங்களைப் போலவே அனைத்து மாவட்டங்களும் கவனிக்கப்பட்டன. விளிம்பு நிலை மக்களது உயர்வுக்கும் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது. சமூகத்தில் கவனிப்பற்றவர்களும் கவனிக்கப்பட்டார்கள். இவை அனைத்தையும் இணைத்ததில் தான் மாண்புமிகு முதலமைச்சரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

தொழில் துறையில் சிறந்த மாநிலமாக இருப்பது சமூக வளர்ச்சிக் குறியீட்டில் சிறந்த மாநிலமாக இருப்பது இல்லை. இந்த இரண்டையும் இணைத்ததில் தான் முதலமைச்சரின் கொள்கைத் தெளிவும், எதிர்காலத்தின் மீதான அக்கறையும் வெளிப்பட்டது.

எத்தனை நிறுவனங்கள் வந்தது, அதன் மூலமாக எவ்வளவு ஏற்றுமதி நடந்தது என்பதும் முக்கியம்தான். அதே போல அந்த நிறுவனத்தின் மூலமாக எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது, அதில் எத்தனை பேர் பெண்கள் என்பதை அளவிடுவதும் முக்கியமானது தான். இது தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை ஆகும்.

அமைதியான மாநிலம் என்று பெயர் எடுத்ததால் அதிகப்படியான தொழில் முதலீடுகள் வந்தன. சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தது. உற்பத்தித் துறை வளர்ந்துள்ளது. இதன் மூலமாக வேலை வாய்ப்புகள் பெருகி இருக்கிறது. சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் அனைத்து தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. சமூக நலத் திட்டங்களால் மாநிலமே மகிழ்ச்சியில் இருக்கிறது. இதன் அடையாளம்தான் இந்த சாதனை ஆகும்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இந்த வளர்ச்சியை மேலும் முன்னேற்றத்துக்கு எடுத்துச் செல்வார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். திராவிடக் கொள்கையே சிறந்தது, திராவிட ஆட்சியே சிறந்தது என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறோம்.

Also Read: “ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!