murasoli thalayangam

“கொள்கை உரமும், தொண்டர்களின் நெஞ்சுரமும்தான் தி.மு.க.வின் பலம்...” - முரசொலி பெருமிதம்!

முரசொலி தலையங்கம்

03.04.2026

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மிக மிக முக்கியமானது கொள்கை உறுதிமொழி ஆகும். ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் துறை வாரியாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட் டுள்ளன. ஒரு அரசாங்கம் அமையும் போது, அந்த அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளாக அவை அமைந்துள்ளன. அவை அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகள். ஒரு அரசியல் இயக்கத்துக்கு மிக அடிப்படையானது கொள்கை உறுதிமொழி ஆகும். அதன் அடிப்படையில் தான் அந்த இயக்கத்தை அளவீடு செய்ய வேண்டும். அந்த இயக்கத்தின் உண்மையான பலம் என்பதும் அதுதான். எனவேதான், தேர்தல் அறிக்கை யின் முகப்பிலேயே கொள்கை உறுதிமொழியை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வடித்துத் தந்துள்ளார்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில் இக்கொள்கை உறுதிமொழியை உருவாக்கி இருக்கிறார் தலைவர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாளன்றே இக்கொள்கை அடித்தளத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது, திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்” என்று தெளிவுபடுத்தினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

கருப்பு, சிவப்புக் கொடிக்கான விளக்கமே கொள்கை விளக்கம் ஆகும்.

* அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியே கருப்பு –

அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளிநிலையை உண்டாக்க வேண்டும் என்பதன் அடையாளமே சிவப்பு – என்று வரையறை செய்யப்பட்டது.

அறநெறி அரசியலுக்காகவும் –

பேதமற்ற சமுதாய அமைப்புக்காகவும்–

சமதர்மத்துக்காகவும் – பாடுபடும் உறுதி கொண்ட தி.மு. கழகம் என்று 1967 தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு கூடிய 1971 திருச்சி மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஐம்பெரும் முழக்கங்களை வடித்துக் கொடுத்தார்கள்.

* அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

* இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

* மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி!

– ஆகிய ஐந்து முழக்கங்களுக்குள் அனைத்துமே அடங்கியுள்ளது. அவர் வழிவந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2018 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் ஈரோட்டில் நடந்த மண்டல மாநாட்டில் தனது ஐம்பெரும் முழக்கங்களை அறிவித்தார்கள்.

* கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்!

* தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!

* அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

* மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

* வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!

– ஆகிய ஐம்பெரும் முழக்கங்களில் அடுத்த கட்டப் பாதைகள் அமைந்திருந்தன. இத்தகைய கொள்கை வழித்தடத்தில் மாறாமல் இன்றைய கொள்கை உறுதிமொழியும் அமைந்துள்ளது.

* அரசியலில், ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு – பொருளாதாரத் துறையில், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ நிலை – எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைத்திட சமதர்மம், சமூகத்துறையில், பகுத்தறிவு அடிப் படையில் மறுமலர்ச்சியும் பேதமற்ற சமூக அமைப்பும் ஏற்படுத்து வதற்கான முறைகளை மேற்கொள்வது என்று உறுதி அளிக்கிறது.

* தமிழைக் காப்பதும், உரிமை பெற்ற பேரினமாய் தமிழினத்தை வளர்ப்பதும், தன்னிறைவு பெற்ற தமிழ்நாட்டை உருவாக்குதலும்தான் நமது மாபெரும் இலக்குகள்!

* தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்குவதும், உலகில் குறிப்பிடத்தக்க பகுதியாக உயர்த்துவதும்தான் நமது நோக்கம்!

* இந்திமொழித் திணிப்பு என்பது ஒற்றை மொழி ஆதிக்க நடவடிக்கையாக அமைந்திருப்பதால் அதனை முழு மூச்சாக எதிர்க்கிறோம்!

* இந்திய மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும்!

* ஒன்றிய அரசின் அதிகாரங்களுக்கும் வரி விதிப்பு உரிமைகளுக்கும் வரம்பு நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்!

* ஒன்றிய அரசின் அரசியல், சமூக, பொருளாதார முடிவுகள் அனைத்தும் மாநிலங்களைப் பாதிப்பதால், மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே ஒன்றிய அரசு அந்த முடிவுகளை எடுக்க வேண்டும்!

* தமிழர்களைப் பிளவுபடுத்தும் சாதிப் பிரிவினைகள், வகுப்புவாதம் உள்ளிட்ட பேதங்கள் நமது வளர்ச்சிக்குப் போடப்படும் விலங்குகள். ஆகவே, சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளுக்கும் முற்போக்கு எண்ணங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்துத் தொடர்ந்து செயல்படுவோம்!

* மதச்சார்பற்ற தன்மைக்குப் புறம்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரிப்போம்!

* சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கோட்பாடுகளை மக்கள் மனதில் விதைத்து, அதற்கேற்ப சட்டங்களை இயற்றி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே நமது நோக்கம்!

* “எல்லார்க்கும் எல்லாம்” என்பதே திராவிடவியல் கோட்பாடு என்று கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமக்கு வகுத்துத் தந்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டேன் என்ற அவரது உறுதிமொழியைக் காக்க எந்நாளும் உழைப்போம்.

– திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் என்பது இத்தகைய கொள்கை உரமும், இக்கொள்கையைத் தாங்கிய தொண்டர்களின் நெஞ்சுரமும்தான்.

Also Read: கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!