murasoli thalayangam
”பொய் சொல்லி போராட்டம் நடத்தும் பழனிசாமி... இருப்பை காட்டிக்கொள்ள நாடகம்!”: முரசொலி விமர்சனம்!
பழனிசாமி ஆட்சியின் பழைய நிலவரங்கள் - 2
முரசொலி தலையங்கம் (20.03.2026)
•2019 ஆகஸ்ட் 27 – சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் வைத்தீஸ்வரன் கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான அஞ்சம்மாள் கைது செய்யப்பட்டார். வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயத்தை அவர் வைத்திருந்தார்.
•2020 ஏப்ரல் 14 - யூடியூப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் என்ற வீடியோவை பாலிமர் சேனல் வெளியிட்டது.
2020 ஜூன் 26 - வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே கள்ளச்சாராயக் கடத்தல் பாதையை அடைத்தவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட 3 பேர் என்ற செய்தியை தந்தி டிவி வெளியிட்டது.
2020 ஜுலை 28 - மயிலாடுதுறையில் பாண்டி ஐஸ் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்றதாக ஜெயா ப்ளஸ் செய்தி வெளியிட்டது.
•2021 ஜூன் 26 – ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கள்ளச்சாராய ஊறல் போட்டு வைத்திருந்த அ.தி.மு.க. பிரமுகர் நேரு என்பவர் கைது செய்யப்பட்டார்.
2021 ஜூலை 27 - கோவையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராய ஊறல், 4 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் இன்னமும் இருக்கும் செய்திகள் ஆகும்.
போதைப்பொருட்கள் அதிகமாகிவிட்டன என்று பொய் சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார் பழனிசாமி. அவரது ஆட்சிக் காலத்தில் குட்கா விற்பனை அவர்களது ஆசிர்வாதத்துடன் நடந்ததை சி.பி.ஐ. வழக்காக தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறதே!
சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில்.
இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில்,"டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது”என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இவை அனைத்தும் பழனிசாமி ஆட்சியில் நடந்தவை ஆகும்..
ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் இடம் பெறாத வகையில் பழனிசாமி இவர்களைக் காப்பாற்றினார். சில ஊழியர்களை மாட்டி விட்டு அ.தி.மு.க. அமைச்சர்களை தப்பிக்க வைத்தார் பழனிசாமி.
அ.தி.மு.க. அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள் பழனிசாமி ஆட்சியில். இதுதான் பழனிசாமி, தனது ஆட்சிக் காலத்தில் போதைப் பொருட்களை ஒழித்த லட்சணம் ஆகும்.
•எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்குப் போன போதுதான் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தார். காவலர்களுக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சியை பழனிசாமி நடத்தினார்.
•சென்னை கேளம்பாக்கம் பகுதியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
•சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிய ராம்குமார் சிறையிலேயே மர்மமான முறையில் இறந்தார்.
•காதலை ஏற்க மறுத்த விழுப்புரம் 12ஆம் வகுப்பு மாணவி நவீனா உயிரோடு எரிக்கப்பட்டார்.
•கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலியை, முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
•தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்துக்குள் நுழைந்து ஃபிரான்ஸினா என்ற இளம் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
•பேராசிரியை நிர்மலா தேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகளைப் பாலியல் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி, மாநிலமே அதிர்ந்தது.
•தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் கலப்புத் திருமணத்தின் கொடூரத் துயரங்களை மறக்க முடியுமா? இதற்கெல்லாம் பழனிசாமியால் பதில் சொல்ல முடியுமா?
•தேசிய குற்ற பதிவேடு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் கொலைகள் அதிகம் நடக்கும்
மாநிலங்களின் பட்டியலில் 6ஆவது இடத்தை எட்டியதுதான் எடப்பாடி ஆட்சிக் காலம் ஆகும்.
•கொலைகள் அதிகம் நடந்த மாநகரங்களில் நான்காவது இடத்தை சென்னை பெற்றது எடப்பாடி ஆட்சிக் காலம்.
•இந்திய தண்டனைச் சட்டப்படியான குற்றங்களில் 6ஆவது இடத்தில் தமிழ்நாட்டைக் கொண்டு போய் நிறுத்தியவர் பழனிசாமி.
•பொதுமக்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக அதிகம் வழக்குப் போட்டதில் 4 ஆவது மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.
•பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலை அதிகம் நடக்கும் மாநிலப் பட்டியலில் 4ஆவது இடத்தில் தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.
•பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் 8ஆவது இடத்தில் தமிழ்நாட்டை நிறுத்தியவர் பழனிசாமி.
•தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டை 2ஆவது இடத்தில் நிறுத்தியது பழனிசாமி ஆட்சிக்காலம்.
இவை எதையும் மக்களும் மறக்கவில்லை. அதற்கான ஆதாரங்களையும் அழிக்க முடியாது. தேர்தல் நேரத்தில் பத்துப் பேரைக் கூட்டி வைத்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரால் தனது இருப்பை பழனிசாமி காட்டிக் கொள்ள மட்டுமே அவதூறுகள் பயன்படும்.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!