murasoli thalayangam

கச்சா எண்ணெய் விவகாரம் : “டெல்லிக்கு தலைநகர் அமெரிக்காவா?” - முரசொலி தலையங்கம் ஆதங்கம்!

முரசொலி தலையங்கம்

10.03.2026

இந்தியா யார் கட்டுப்பாட்டில்?

ரஷ்ய நாட்டில் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருக்கிறது என்ற செய்தி, ‘இந்தியா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்ட கேள்வியே ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தபிறகு அதிகமாகக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. மறைமுகமாக இருந்த அடிபணிதல் சமீப காலமாக வெளிப்படையாக ஆகிவிட்டது. “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போரை நான்தான் நிறுத்தச் சொன்னேன்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர்.

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. தீவிரவாதிகளின் 9 தளங்கள் மீது ஒருங்கிணைந்த துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானில் 4 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. லாகூர் உட்பட, பாகிஸ்தான் முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள் ஏவப்பட்டன. திடீரென இந்தப் போர் நிறுத்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தப்படுகிறது என்பதை இந்தியா அறிவிப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் சொல்வதற்கு முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி விட்டார்.

"நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இடையேயான அணுசக்தி மோதலை நிறுத்தினோம். அது ஒரு மோசமான அணுசக்தி போராக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். அப்படி நடந்திருந்தால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்திருக்கலாம். நீங்கள் இருவரும் போரை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப்போவதில்லை என்று நான் கூறினேன்” என்று சொல்லி இருக்கிறார் டிரம்ப். அதாவது தான்தான் போரை நிறுத்தியதாகச் சொன்னார். ஒரு முறையல்ல; இந்த ஓராண்டு காலத்தில் பல முறை சொல்லிவிட்டார் டிரம்ப். ஆனால் இதனை இதுவரை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. இது முதலாவது சறுக்கல்.

அடுத்ததாக இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகின் பல நாடுகளுக்கு இது போன்ற வரியை அவர் விதித்தார். இதனை உலகின் பல நாடுகள் கண்டித்தன. எதிர்த்துள்ளன. விமர்சித்தன. பதில் நடவடிக்கைகளில் இறங்கின. ஆனால் இதில் எதையும் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நெருக்கடி கொடுத்தார். அதற்கும் பா.ஜ.க. அரசு பதில் சொல்லவில்லை.

திடீரென்று ஒருநாள், அதனை ஏற்றுக் கொண்டார்கள். அதையும் பொது வெளியில் டிரம்ப் தான் சொன்னார். “பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசினேன். ரஷ்யா உக்ரைன் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார்.

இனிமேல் அமெரிக்காவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும். வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரை நிறுத்த உதவி செய்யும். பிரதமர் மோடியுடன் எனக்கு நட்புறவு நீடிக் கிறது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

இதன்படி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு இனி 18 சதவீத வரியை மட்டுமே விதிக்கும். அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் விளைபொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக் கிறது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவு மேலும் வலுவடையும்” என்று டிரம்ப் தெரிவித்தார். இது இரண்டாவது மாபெரும் சறுக்கல்.

மூன்றாவதாக இப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதியை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது அமெரிக்கா. இது மாபெரும் சறுக்கல் ஆகும்.

இது மிகப்பெரிய சரணாகதி நடவடிக்கை ஆகும். எந்த நாட்டிடம் எதை வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும், எதுவரை வாங்க வேண்டும் என்பது இந்தியாவின் சுதந்திரமான கொள்கையாக இருக்க வேண்டும். இதற்கு மற்ற நாட்டின் அனுமதி தேவையில்லை. மற்ற நாட்டின் தயவு தேவையில்லை. மற்ற நாட்டின் கட்டுப்பாடு தேவையில்லை.

இது மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும். மேற்கு ஆசியாவில் போர் நடந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் இருப்பின் தட்டுப்பாடு எழப் போகிறது. இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் வாங்குவதில் சுதந்திரமான முடிவுகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். அதனைத் தடுக்கிறது அமெரிக்காவின் அறிவிப்பு.

‘ஏப்ரல் 4 வரைக்கும்தான் ரஷ்யாவிடம் இருந்து வாங்க வேண்டும்' என்று நிபந்தனை விதிக்கிறார்கள் என்றால் ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் போர் முடியப் போகிறது என்ற உத்தரவாதத்தை அமெரிக்காவால் தர முடியுமா? இந்தியாவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறதா? ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு லிட்டர் தான் பெட்ரோல் தரப்படும் என்று சொல்லப் போகிறார்களா?

இந்தியாவுக்கு தலைநகர் டெல்லி என்றால், டெல்லிக்கு தலைநகர் அமெரிக்காவா என்று கேட்கும் நிலைமைக்கு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைத்து விட்டதா பா.ஜ.க. அரசு?

Also Read: “தமிழ் மக்களின் கனவே, தமிழ்நாட்டின் கனவு..” - 14 அம்சங்களை பட்டியலிட்டு முதலமைச்சருக்கு முரசொலி புகழாரம்!