murasoli thalayangam
அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட எஞ்சின் ஆட்சி… ஒன்றுக்கும் உதவாததே பா.ஜ.க எஞ்சின் - முரசொலி தலையங்கம்!
பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வாழும் இந்தியப் பிரதமர், இப்போது அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். தேர்தல் காலத்தில் மாநிலங்களுக்குள் வருவதுதான் அவரது வழக்கம்.
தமிழ்நாட்டுக்குள் வரும் பிரதமர் என்ன பேச வேண்டும்? தமிழ்நாட்டுக்குச்செய்த நன்மைகளைப் பட்டியலிட வேண்டும்? அப்படி ஏதாவது இருந்தால்தானே அவரால் பட்டியலிட முடியும்? அப்படி ஏதும் இல்லாததால் வழக்கம் போல வாயால் வடை சுட்டுச் சென்று இருக்கிறார் பிரதமர் மோடி. பாதி நாற்காலிகள் காலியாக இருந்தன. அவர் பேசத் தொடங்கியதும் பலரும் கலையத் தொடங்கிய காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
“ஏழைகளின் நலனில் தி.மு.க. ஆட்சி அக்கறை இல்லாத ஆட்சி” என்று பிரதமர் சொல்கிறார். அவருக்கு ஏழைகளைத் தெரியுமா?கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கான ஏழை எளியவர்களை பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடக்கவிட்ட கொடூரம் மோடி ஆட்சியில்தான் செய்யப்பட்டது. ஏழை எளிய மக்கள் வைத்திருந்த சேமிப்புப் பணத்தைக் கூட செல்லாமல் ஆக்கிய ஆட்சி அல்லவா மோடி ஆட்சி? மூன்றாண்டு காலம் மொத்த உழவர்களையும் போராட வைத்து, 200 பேருக்கும் மேற்பட்டோர் மரணிக்கக் காரணமான அரசுயாருடைய அரசு? பெட்ரோல் விலையும், டீசல் விலையும், சிலிண்டர் விலையும்எட்ட முடியாத உயரத்துக்கு ஏற்றியதுதானே மோடி ஆட்சியின் வேதனைகள்? ஏழைகள் என்ற சொல்லைச் சொல்லத் தகுதி உள்ளதா அவருக்கு? மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து வருகிறார்கள். அது எதற்கும் மாண்புமிகு மோடி உரையில் பதில் இல்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் திறக்கவில்லை! மதுரைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். அனுமதிக்கவில்லை.திருச்சிக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தர மனமில்லை.ஓசூர் விமானநிலையத்துக்கு அனுமதி தரவில்லை. சென்னை மெட்ரோ திட்டத்துக்காக ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை இன்று வரை முழுமையாகத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை நாம்தான் கொடுத்துள்ளோம்.
பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் நலனுக்காகத் தர வேண்டிய ரூ.3500 கோடியை தராமல் இழுத்தடிக்கிறார்கள். 'ஜல்ஜீவன்' இயக்கத்துக்கான மானியமான ரூ.3,548 கோடியை தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தர வேண்டிய ரூ.2,246 கோடியை தராமல் வைத்துள்ளார்கள். பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு தர வேண்டிய திட்டங்களுக்கான நிதியைக் கூட நிறுத்தி வைக்கிறார்கள்.ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரால் வசூலிக்கப்படும் அநியாய வரி காரணமாக தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறது. இந்திய ரிசர்வ் வங்கியில் தமிழ்நாட்டின் கணக்கில் இருந்த ரூ.1,709 கோடியை ஒன்றிய அரசு பிடித்தம் செய்து விட்டது. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்துக்கு 16 ஆயிரத்து 290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்கள்.
இப்படி தமிழ்நாட்டுக்கு அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்து வரும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டுக்குள் எப்படி கூச்சமில்லாமல் வர முடிகிறது? பேச முடிகிறது?
ஒன்றிய அரசின் மூலமாக அத்தனை கொடுமைகளையும், நிதி நெருக்கடிகளையும், சட்டபூர்வமான நெருக்கடிகளையும் செய்யும் மோடி அவர்கள், 'தி.மு.க. அரசு மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவில்லை' என்று குற்றம் சாட்டுகிறார். மதுரைக்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், வீதியில் இறங்கி மக்களிடமே கேட்டிருக்கலாம். மக்கள் சொல்வார்கள், இந்த ஐந்தாண்டு காலத்தில் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பற்றி!
ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் நன்மை கிடைக்கும் ஆட்சியை தி.மு.க. அரசு கொடுத்து வருகிறது. சமூகத்தின் சரிபாதியான பெண்ணினம் இரண்டே இரண்டு திட்டங்களின் மூலமாக (மகளிர்உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்) முழுப்பயனை அடைந்து வருகிறார்கள். பள்ளி மாணவ மாணவியரைச் சென்று சந்தித்து காலை உணவுத் திட்டத்தைப் பற்றி பிரதமர் கேட்டிருக்க வேண்டும். காலை உணவுத் திட்டமே மதுரையில் இருந்துதான் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இப்படி நூற்றுக்கணக்கான திட்டங்களைக் கொடுத்தஆட்சியை, 'மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவில்லை' என்கிறார் பிரதமர் மோடி.
தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். தனது நண்பருக்காக மட்டும் இந்திய நாட்டின் வளத்தைச் சுரண்டிக் கொடுக்கும் மோடி ஆட்சியில் இந்தப் பத்தாண்டு காலத்தில் இந்திய நாட்டு மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு எல்லை இல்லை. இத்தகைய ஒரு ஒன்றிய அரசை வைத்துக் கொண்டு தன்னுடைய மாநிலத்துக்கு எத்தனையோ திட்டங்களைத் தீட்டி வருகிறார் முதலமைச்சர்.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களின் மூலமாக மெய்ப்பிக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. பல மாநிலங்களை ஆள்வது பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின்தான் என்பதை அந்தந்த மாநிலங்கள் அனுபவித்து வருகின்றன. அந்த மாநிலங்களுக்கு உதவாத எஞ்சின் தான் ஒன்றிய பா.ஜ.க. எஞ்சின் என்பதையும் இந்திய நாடு அறியும். ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி வேகமும் விவேகமும் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய திராவிட எஞ்சின். இங்கு எல்லோரும் முன்னேறுகிறார்களே என்பதுதான் மோடி கூட்டத்துக்கு கோபமும் கடுங்கோபமும். அதனால்தான் அவதூறுகள் மூலமாக அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்.
முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வர வேண்டும். இப்படியே பேச வேண்டும். அவரைப் பார்க்கப்பார்க்கத்தான் அவரது துரோகங்களை மக்கள் அதிகம் நினைத்துப் பார்ப்பார்கள்.மோடி அவர்களே... பேசுங்கள்! இதைப் போலவே பேசுங்கள். இன்னும் அதிகமாகப் பேசுங்கள். உங்கள் பிதற்றல்கள், உங்களையே அதிகமாக அம்பலப்படுத்தும்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!