murasoli thalayangam
“இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான குரல் இது...” : முரசொலி தலையங்கம் !
முரசொலி தலையங்கம்
21.02.2026
மாநில சுயாட்சிக்கான இந்தியக் குரல்!
மாநில சுயாட்சிக்கான இந்தியக் குரலாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
சமுதாயத்தில் சீர்திருத்தம் – பொருளாதாரத்தில் சமத்துவம் – அரசியலில் ஜனநாயகம் ஆகிய மூன்றும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்பதை பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொன்னார்கள். இக்கொள்கையை நிலைநிறுத்தவே இயக்கம், இக்கொள்கையைச் செயல்படுத்தவே ஆட்சி என்று நினைத்துச் செயல்பட்டார்கள்.
18 ஆண்டுகள் போராடி ஆட்சியைக் கைப்பற்றி – முதலமைச்சர் ஆன பேரறிஞர் அண்ணா அவர்கள், அதிகாரங்கள் இல்லாத பதவியாக முதலமைச்சர் பதவி இருக்கிறதே என்று வருத்தப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இறுதி உயில் என்று சொல்லப்படும் கடிதத்தில் கூட, மாநில சுயாட்சியைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்தினார்கள்.
‘‘வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக்கூறி நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை” என்று எழுதினார் பேரறிஞர் – முதலமைச்சர் அண்ணா. அந்தப் பெருந்தகையின் உயில் என்று போற்றப்படும் கட்டுரை இது. அண்ணாவின் உயிலாக, உயிராக இருந்தது மாநில சுயாட்சி தான்!
எனவே தான், பெருந்தகையின் மறைவுக்குப் பிறகு கழகத்தின் ஐம்பெரும் முழக்கத்தை வடிவமைத்த தலைவர் கலைஞர், ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பதை முக்கியமானதாக வலியுறுத்தினார்.
முதலமைச்சர் கலைஞரின் அரசால் இராஜமன்னார் குழு 1969 செப்டம்பர் 22 அன்று அமைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், நான்காவது நிதிக்குழுவின் தலைவருமாக இருந்தவர் மாண்புமிகு இராசமன்னார் அவர்கள். இக்குழுவில் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி (ஆர்க்காடு இரட்டையர்களில் ஒருவர்), சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் பி.சந்திரா ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். 27.5.1971 அன்று இராசமன்னார் குழு தனது அறிக்கையை அளித்தது. இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு, மாநில சுயாட்சிக்காக அமைத்த முதல் குழு இதுதான். 16.4.1974 அன்று மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது. 20.4.1974 அன்று சட்டப் பேரவையிலும், 27.4.1974 அன்று மேலவையிலும் நிறைவேறியது.
பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழியில் இன்றைய முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதியன்று மாநில சுயாட்சிக் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய–மாநில அரசுகளின் உறவுகளை, கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும், ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள்.
உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் கு.மே.ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக அசோக் வர்தன் ஷெட்டி இ.ஆ.ப. (ஓய்வு), மேனாள்துணை வேந்தர், இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் அவர்களும் பேராசிரியர். மு.நாகநாதன், மேனாள் துணைத்தலைவர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு அவர்களும் இருந்தார்கள். இக்குழு தனது அறிக்கையின் முதல் பகுதியை வழங்கி உள்ளது.
இக்குழு தனது அறிக்கையை கடந்த பிப்ரவரி 16 அன்று முதலமைச்சரிடம் வழங்கியது. தமிழில் 562 பக்கமும் ஆங்கிலத்தில் 387 பக்கமும் கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. இதனை பிப்ரவரி 18 அன்று அவையில் வைத்துள்ளார் முதலமைச்சர்.
‘‘கூட்டாட்சி என்பது அரசியல் கருத்தல்ல, வாழ்வியல் உணர்வு. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை.– என்று இந்த அறிக்கை நிறுவுகிறது. இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் மாற்ற வேண்டும். 1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சிக் கோட்பாட்டை அரசமைப்புச் சட்டத்தின் பண்பாடாகச் சேர்க்க வேண்டும். அதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தமும், சீர்திருத்தமும் தேவை. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுள்ளது. எனவே நாம் முயற்சித்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியும்.
இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கியாக வேண்டும்.” என்று முழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.
மாநிலங்களவையில் உரையாற்றிய அண்ணா அவர்கள், ‘’நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாக நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்” என்றார் . அத்தகைய முன்னணியாக தி.மு.க.வை உருவாக்கி வருகிறார் இன்றைய தலைவர். இது தமிழ்நாட்டுக்கான முன்னணி மட்டுமல்ல, இந்தியாவுக்கான முன்னணியாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான குரல் இது.
Also Read
-
“Online,Offline இரண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!