murasoli thalayangam
“போலி விவசாயி பழனிசாமியின் பொய்கள்” முரசொலி தலையங்கம் கடும் விமர்சனம்!
போலி விவசாயியின் பொய்கள்!
முரசொலி தலையங்கம்
11-02-2026
பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு பச்சைப் பொய்களைச் சொல்வது பழனிசாமிக்கு வழக்கம். 'நானும் விவசாயிதான்' என்று சொல்லியபடியே உழவர் பெருமக்களுக்கு துரோகங்களை இழைத்ததுதான் அவரது துரோக வரலாறு ஆகும். தனது ஆட்சி காலத்தில் செய்த துரோகங்களை மக்களும் உழவர்களும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து இரண்டு நாட்களுக்கு முன்னால் பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு அதே பழைய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார் பழனிசாமி.
காவிரி நீர் உரிமையைத் தான் காப்பாற்றியதாகவும், தான் தொடங்கிய ‘நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட்டதாகவும் பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில்தான் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக முழுநேரத் தலைவர் நியமிக்கவே இல்லை. நியமிக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு அடம்பிடித்தது. அதனைத் தட்டிக் கேட்காமல் பழனிசாமியின் அரசு தலையாட்டிக் கொண்டுதான் இருந்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 5.2.2007 அன்று வந்தது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியே இருந்தது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்தின் பாசனப் பரப்பு 4,56,130 ஏக்கர் விடுபட்டு இருந்தது. இதனைக் கழக அரசு கடுமையாக எதிர்த்தது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் கலைஞர். அ.தி.மு.க.வும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது. காவிரி பாசன விவசாயிகளின் பாரம்பர்ய உரிமையைக் காக்க காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டி.எம்.சி. நீர் கோரி 2007 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.3
இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்கு தான் பழனிசாமி அரசின் கையாலாகாத் தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து அரசு வாதாடவில்லை.
"தமிழக அரசின் மனுவில் என்ன சொல்லப்பட்டு இருந்ததோ அதைக் கூடநீதிமன்றத்தில் சொல்லி வாதங்களை வைக்கவில்லை. தமிழக அரசின் வழக்கறிஞர்பேசுவதும், மனுவில் உள்ளதும் வேறு வேறாக இருக்கிறதே” என்று நீதிபதி களே சொன்னார்கள். இப்படி அலட்சியமாக வழக்கை நடத்திய அரசுதான் அ.தி.மு.க. அரசு. இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, 'காவிரி காப்பாளர்' என்ற பட்டத்தை தனக்குத் தானே கொடுத்துக் கொண்டார் பழனிசாமி.
அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண்மையைச் சிதைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிப்பாரா? விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடினார்கள். அவர்களை புரோக்கர்கள், என்றவர்தான் பழனிசாமி.
இன்னொரு பொய் என்னவென்றால், “டெல்டா மாவட்டத்து மக்கள் இயற்கைச் சீற்றத்தால் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த போதெல்லாம் நேசக்கரம் நீட்டிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.” என்றும் சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அதனை பழனிசாமி எடுத்து பார்க்க வேண்டும். சுவர் ஏறி தப்பி ஓடினார் பழனிசாமியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.எஸ்.மணியம்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட வருகை தரும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரையும் மக்கள் கோபமாக எதிர்த்தார்கள். வேதாரண்யம் வேட்டைக் காரனிப்பு பகுதிக்கு அ.தி.மு.க. அமைச்சர் ஓ.எஸ்.மணியம் வந்தபோது, மக்கள் அடிக்க வந்தார்கள். சுவர் ஏறிக் குதித்து ஓ.எஸ்.மணியம் தப்பி ஓடினார். இவர் தப்பி ஓடும் போது, பின்னால் ஓடியவாறு ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியத்தை அந்த நபர், துரத்தியபடியே போய் வீடியோ எடுத்தார். தனது காரை விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஓ.எஸ்.மணியன் ஓடியதை அன்று தமிழ்நாடே பார்த்தது. 'நேசக்கரம் நீட்டியதாக' இப்போது பேட்டி தரும் பழனிசாமி, அந்தக் காட்சிகளை மீண்டும் ஒரு முறை பார்க்கட்டும்.
நீலகிரி மாவட்டமே இயற்கை பேரிடரால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது ஒரே ஒரு அமைச்சரை மட்டும் அவசர அவசரமாக அனுப்பி வைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. அவரும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்து போனார். முதலமைச்சர் பழனிசாமி ஏன் வரவில்லை என்று தி.மு.க. கேள்வி எழுப்பியது. அதன்பிறகு ஒரு நாள் வந்தார் பழனிசாமி . அதுவும் ஹெலிகாப்டரில் வந்தார். சில இடங்களில் சில மணிநேரம் பார்த்துவிட்டுப் போய்விட்டார். பழனிசாமியின் நேசக் குணம், அவ்வளவுதான்.
விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில். கேட்டால் ஒப்பந்த ஊழியர்கள் செய்து விட்டார்கள் என்று திசைதிருப்பினார்கள். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை "போலி விவசாயிகளுக்கு" கொடுத்தது பழனிசாமி.
நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடந்ததாக உயர்நீதிமன்றமே கண்டித்தது. விவசாயிகளுக்கான நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல். விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல். விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்கான குடிமராமத்து பணிகளிலும் ஊழல். இதுதான் போலி விவசாயி பழனிசாமியின் ஆட்சியாகும்.
'விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன்” என்று சொல்லி உச்சநீதிமன்றம் வரை போனவர்தான் பழனிசாமி. மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை ஒடுக்கியவர்தான் இந்த பழனிசாமி. வேளாண் மண்டலம் என்பதை போலியாக அறிவித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படும் என்ற சதி செய்தவர் தான் இந்த பழனிசாமி.
இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து சாயம் போன பழைய துண்டு போட்டுக் கொண்டு அதே பழைய பொய்களை அவிழ்க்கிறார் பழனிசாமி.
Also Read
-
பெரம்பலூர் கைத்தறி உற்பத்திக்கான நிலுவலையிலுள்ள திட்டங்களின் நிலை என்ன?: மக்களவையில் அருண் நேரு MP கேள்வி
-
ஈரோட்டில் ஜவுளிக் கழிவுகள் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும் : மாநிலங்களவையில் தி.மு.க MP வலியுறுத்தல்!
-
விவசாயிகளுக்கான நிதிகளை தாமதப்படுத்துவது ஏன்? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கலாநிதி வீரசாமி MP!
-
தி.மு.க கூட்டணியின் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எப்போது? : வெளியான முக்கிய அறிவிப்பு!
-
பீகார் அரசை விமர்சித்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மைத்லி தாக்கூர் : சட்டப்பேரவையில் சரமாரி கேள்வி!