murasoli thalayangam

காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (17-12-2025)

காந்தி மீதான வன்மம்!

இந்தியாவின் அடையாளச் சொல்லாக ‘காந்தி தேசம்' என்று சொல்லப்பட்டது. இப்போது அந்த அடையாளச் சொல்லை அழிக்கும் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.

‘மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்ட'த்தின் பெயரை மாற்றி விட்டார்கள். அதற்கு வைத்திருக்கும் பெயரை அவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். 'விக்சித் பாரத் ராம்ஜி திட்டம்' என்பது இதன் பெயராம். சில காலம் கழித்து அந்தத் திட்டத்தையே தூக்கி விடுவார்கள். அதுதான் உண்மை.

‘“தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக் கிறார்கள். 100 விழுக்காடு ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 69 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம். பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு” என்று கடும் எச்சரிக்கை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

‘“நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்பட உள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்”என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்வது, காந்தி பெயரைத் தூக்குவதுமட்டுமல்ல. இந்தத் திட்டத்தையே சிதைக்க நினைக்கிறது. பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழி வகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi Nationa1 Rura1 Employment Guarantee Act (MNREGA)) என்று பெயர். காங்கிரஸ் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் இது. இச்சட்டம் 25.05.2005 அன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. 2009 அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளன்று ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டது.

கிராமப்புறத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ள வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் இது. கிராமங்களின் உள்கட்டமைப்பைச் சரி செய்ய அந்தக் கிராமத்து மக்களுக்கே வாய்ப்பு தரப்பட்டது. அதற்கான ஊதியம் தரப்பட்டது. இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைக்கு ஓரளவு உத்தரவாதம் தரும் திட்டமாக அமைந்தது. பா.ஜ.க. ஆட்சி வந்தது முதல் இத்திட்டத்தைக் குறி வைத்தது.

ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது போன்ற உதவிகள் கிடைப்பதுபா.ஜ.க.வுக்கு எப்போதுமே பிடிக்காது. கார்ப்பரேட்டுகளுக்கு கோடிகளில் சலுகைகளை வழங்கி அவர்களை வாழ வைக்கும் பா.ஜ.க., இப்போது இது போன்ற அப்பாவிகளுக்குத் தரும் 199 ரூபாயைக் கூட பெரிய செலவாகப் பார்க்கும். எனவே, வேலை நாட்களைக் குறைத்தார்கள். ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். பின்னர் பணம் தரு வதையே நிறுத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் ஒன்றிய அரசிடம் கெஞ்சி பணத்தை வாங்கும் சூழலையே உருவாக்கினார்கள்.

ஏன் ஒழுங்காகப் பணம் கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான் மாநில ஆளுநர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய காட்சியையும் பார்த்தோம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 4,034 கோடி ரூபாயை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்காததைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தி.மு.க. நடத்தியது. 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் பிரதமருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர். அதன் பிறகும் நிதி தரவில்லை.

ஒன்றிய அரசு வழங்காவிட்டாலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை தமிழ்நாடுஅரசு வழங்கியது. பெயர் ஒன்றிய அரசின் திட்டம். ஆனால் நிதி கொடுப்பதுமாநில அரசு. 'கல்யாணம் அவருக்குத்தான், சட்டை என்னுடையது' என்று சொல்வதைப் போல நடந்து கொண்டது பா.ஜ.க. அரசு. பணம் கொடுக்காத திட்டத்துக்கு இப்போது பேரை மாற்றத் துடிக்கிறார்கள்.

அண்ணல் காந்திக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை உயிரற்ற உடலாக ஆக்கியவர்கள் யார்? அழித்தவர்களின் வாரிசுகள் யார்? அழித்தவர்களைக் கொண்டாடுபவர்கள் யார் என்பதெல்லாம் இந்திய நாடு அறிந்த வரலாறுகள் தான். அதனையே தான் ஆட்சியில் அமர்ந்த பிறகும் செய்கிறார்கள்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்த அவரை ‘பொது இடத்தில் மலம் கழிக்கக் கூடாது” என்று சொன்னதன் அடையாளமாக ‘சுவஜ் பாரத்' திட்ட முகமாக மாற்றினார்கள். இப்போது அதுதான் தொடர்கிறது.

திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்குவது என்பது அற்ப சந்தோஷம். அவ்வளவுதான். காந்தியம் என்பது உணர்வுகளில் ஒன்றாக இந்திய நாட்டுமக்களின் மனங்களில் இருக்கிறது. அதனைச் சிதைக்க யாராலும் முடியாது.

Also Read: வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!