murasoli thalayangam

அரசு அலுவலர்களை தற்கொலைக்கு தள்ளும் SIR : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி கண்டனம்!

முரசொலி தலையங்கம் (24-11-2025)

அலுவலர்களே எதிர்க்கிறார்கள்!

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை அரசியல் ரீதியாக அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை. அரசு அலுவலர்களே இந்தியாவின் பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

S.I.R. பணிச்சுமை காரணமாக மத்தியப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர் தற்கொலை செய்துள்ளார். BLO அலுவலராக பணியாற்றிய உதயபானு சிகாரே என்கிற பள்ளி ஆசிரியர், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

S.I.R பணிச்சுமை காரணமாக கேரளாவில் கண்ணூர் மாவட்டம் காங்கோல் ஆலப்படம்பா பஞ்சாயத்தைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்துள்ளார். 'என் மகன் அதிகாலை வரைக்கும் வேலை பார்த்து கஷ்டப்பட்டான்.பணி அழுத்தம் காரணமாக வேலையில் இருந்து விடுவிக்கக் கோரி மூன்று முறை விண்ணப்பம் செய்தான். இறப்புக்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.30 மணி வரைக்கும் வேலை பார்த்தான்' என்று ஜார்ஜின் தந்தை சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கேரள மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் இந்தப் பணிகளை நிறுத்தி வைக்க அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் முகேஷ் ஜாங்கிட் என்பவர் ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் . தன்னை விட மூத்த அதிகாரி, தன்னை மிரட்டியதாக முகேஷ் சொல்லி இருந்தாராம்.

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணியால் ஏற்பட்ட பணிச்சுமையின் காரணமாக பி.எல்.ஓ. அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது தற்கொலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக்கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு ரிங்கு தரத்தார் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார் அவர்.

தினமும் 100 வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழுத்தம் கொடுப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர் தற்கொலையை தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அதீதமான பணி நெருக்கடிகளைக் களைந்திட வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளில் (S.I.R.) உரிய திட்டமிடுதலை தேர்தல் ஆணையம் செய்யவில்லை” என்று சொல்லி இருக்கிறார்கள்.

•வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO), கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

•வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை முழுமையாக பிழைகள் இன்றி மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), கண்காணிப்பாளர் நிலைகளில் போதிய தன் ஆர்வலர்கள்/ அரசு பணியாளர்களை உடன் நியமனம் செய்திட வேண்டும் - என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதன் மூலம் தெரிவது என்ன?

அவசர கதியில் ஏதோ ஒன்றைச் செய்ய நினைக்கிறது தேர்தல் ஆணையம். அனைத்தையும் ஒரே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். வீடுவீடாகச் சென்று படிவங்களை வழங்குவது, அவற்றை பூர்த்தி செய்து வாங்குவது, வாங்கிய படிவங்களை இணையத்தில் பதிவு செய்வது என்ற பணிகளுக்காக ஒரு மாத கால அவகாசமே தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இந்த கால அவகாசத்தைத்தான் அவசர கதி என்று சொல்கிறோம். இது வெளி மாநிலங்களில் அலுவலர்கள் சிலரை தற்கொலை வரைக்கும் தள்ளி இருக்கிறது.

அகில இந்திய அளவில் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீண்டகால அவகாசம் எடுத்து நடத்தப்பட வேண்டிய SIR எனும் பணியை அவசர அவசரமாக நடத்த வேண்டிய தேவை என்ன? தேர்தல் ஆணையம் பகுதி பகுதியாகச் செய்ய வேண்டிய பணியை ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் அனைவரையும் குத்தகைக்கு எடுத்து செய்ய வேண்டியது ஏன்? அனைத்துக்கும் பின்னாலும் ஒரு சதி இருக்கிறது. அதுதான் பா.ஜ.க. வின் அரசியல் திட்டங்களுக்கு வழிவகை செய்வது ஆகும்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தல் பட்டியல் தயாரிப்பு என்ற பெயரில் நடத்த நினைக்கிறார்கள். ஊடுருவல்காரர்களை நீக்குவதாக மற்ற மாநிலத்தில் பேசுபவர்கள், இங்கு சிலரை புகுத்த நினைக்கிறார்கள். பெரும்பான்மை மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்க நினைக்கிறார்கள். இந்த சதியை அரசியல் அமைப்புகள் மட்டுமல்ல, அலுவலர்கள் அனைவரும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். மக்கள் அனைவரது எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள்.

தங்களுக்குள் அதிகாரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தலாம். ஆனால் மக்கள் சரியான பாடத்தையே கொடுப்பார்கள்.

Also Read: ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் கொட்டிய உச்சநீதிமன்றம் : இதற்கு மேல் யார் சொல்ல வேண்டும்? - முரசொலி!