murasoli thalayangam
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
முரசொலி தலையங்கம் (09-10-2025)
சிறப்புக்கு சிறப்பு!
கோவையில் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மாபெரும், பிரமாண்டமான பாலத்தை அமைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு மாபெரும் மேதையும், மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு என அறியப்பட்ட கோ.துரைசாமி அவர்களின் பெயரைச் சூட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் ஆகும். கோவை மக்களுக்கு மிக நெருக்கடியைக் கொடுத்து வந்த போக்குவரத்து நெரிசலை மொத்தமாக போக்குவதற்கான திட்டம் இது.
2020 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இது அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் ஆட்சியில் 5 விழுக்காடு பணிகள் மட்டும்தான் நடந்திருந்தது.
2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதன்பிறகு தான் முழுமையான நிதி ஒதுக்கப்பட்டது. ரூபாய் ஆயிரத்து 791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10.10 கிலோ மீட்டர் நீளம் என உறுதி செய்யப்பட்டது. இந்தப் பாலத்தின் 95 விழுக்காடு பணிகளையும் விரைந்து முடித்து அதன் திறப்பு விழாவுக்கு தயார் ஆகிவிட்டது.
“கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய பாலத்திற்கு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன் – தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இது அறிவுலகுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மகுடம் ஆகும்.
இந்திய அறிவியல் இயலின் உண்மை முகங்களில் ஒன்று ஜி.டி.நாயுடு அவர்கள். கோபால்சாமி துரைசாமி என்ற இயற்பெயரை விட ஜி.டி.நாயுடு என்பதுதான் அனைவரும் அறிந்த பெயராக ஆகிவிட்டது.
கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த இவர் தனது கண்டுபிடிப்புகள் மூலமாக உலகத்தையே கலக்கினார். அந்தக் காலத்தில் பல லட்சங்கள் கொடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்பை விலை பேசிய போது, அதனைத் தரமறுத்தவர் அவர். இட்லரையும், முசோலினியையும் புகைப்படம் எடுத்தவர் அவர்.
இளம் வயதில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து, அதிலேயே தங்கி விடாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து பருத்தி மில் தொடங்கி அதன் மூலமாக பெரிய தொழில் அதிபராக வளர்ந்தார். ஒரு பேருந்தை வாங்கி பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இயக்கினார். பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும், வந்து சேரும் நேரத்தை அறிவிக்கும் கருவியையும், பயணச் சீட்டுக் கருவியையும் அவரே கண்டுபிடித்தார். மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். வேக கணிப்பு கருவியையும் உருவாக்கினார். அதாவது பேருந்தை வைத்தே அதற்குத் தேவையான கருவிகளைக் கண்டுபிடித்தார்.
அவரது கண்டுபிடிப்பு மூளையானது எல்லாப் பக்கமும் பாய்ந்தது. சலவை இயந்திரம், காபி தயாரிக்கும் கருவி, சப்பாத்தி தயாரிக்கும் கருவி, கால்குலேட்டர், சுவர் கடிகாரம் இப்படி பலதையும் கண்டுபிடித்தார். விதைகள் இல்லாத நார்த்தங்காய், விதைகள் இல்லாத ஆரஞ்சு பழங்கள் உருவாக்கினார். பெரிய பெரிய கதிர்களுடன் சோளம் விளைவித்தார்.
புகைப்படக் கேமராவுக்குத் தேவையான கருவிகளைக் கண்டுபிடித்தது. பழச்சாறு பிழியும் கருவியைக் கண்டுபிடித்தார். பிளேடு உருவாக்கினார். இதற்கான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வரவைத்தார். 1936 ஆம் ஆண்டு ஜெர்மன் கண்காட்சியில் இவரது பிளேடு, மூன்றாவது பரிசைப் பெற்றது. 1940 ஆம் ஆண்டே ஜெர்மனியில், ‘Coimbatore, India’ என்று தலைப்பிடப்பட்ட பொருட்களை அணிவகுக்க வைத்தார்.
ஆனால் இந்தியாவில் இவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ‘இந்தியர்கள் யாரும் இதனை பயன்படுத்தலாம்’ என்று அறிவிக்கும் பெருந்தன்மையும் அவருக்கு இருந்தது. தனது மோட்டார் வாகனங்களை கோவை வட்டாரக் கழகத்துக்கு இலவசமாக அளித்தார். ( 80 ஆண்டுகளுக்கு முன்னால் 18 லட்சம் மதிப்புக் கொண்டவை அவை) குறைந்த செலவில் கார் தயாரிக்கலாம், குறைந்த செலவில் வீடு கட்டலாம் என்று சொல்லி அதை நிரூபித்துக் காட்டினார்.
அதனால்தான் இவரை, ‘தமிழ்நாட்டின் நிதி’ என்றார் தந்தை பெரியார். திராவிடர் கழக மாநாடுகளில் கலந்து கொண்டார். உரையாற்றினார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார். தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு தராமல் இருப்பதைக் கண்டித்தும், அதிக வரிப் போடுவதைக் கண்டித்தும் 1954 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் ஜி.டி.நாயுடு. அதில் தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் போட்டு நொறுக்க முடிவெடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார், டாக்டர் வரதராஜூலு, முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அன்றைய பெரும் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். அனைவருமே ஜி.டி.நாயுடுவை பாராட்டினார்கள். அவர் உடைப்பது சரிதான் என்றார்கள். பெரியார் மட்டும்தான், உடைக்கக் கூடாது என்று பேசினார். ‘உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அனுமதி தராத டெல்லி அரசாங்கத்தை உடையுங்கள், உங்கள் கண்டுபிடிப்புகளை எதற்காக உடைக்கிறீர்கள்?’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இருவருக்கும் உரிமையும், நட்பும் இருந்தது.
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் கோவை அவினாசி சாலையில் கண்காட்சி, அருங்காட்சியகமாக இருக்கிறது. “விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளைப் பற்றிய 18 ஆயிரம் புத்தகங்களும், உளவியல் தொடர்புடைய 3 ஆயிரம் நூல்களும் எனது நூலக அறையில் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்ததின் மூலம்தான் ஓரளவுக்கு நான் அறிவு பெற்றேன். நீங்களும் இளம் வயதிலேயே அறிவு வேட்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
‘‘நம்பிக்கை, துணிச்சல், நேர்மைக்காகப் போராடும் குணம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர்வான குறிக்கோளும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் உங்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.’’ என்று சொல்லி இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஜி.டி.நாயுடுவைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரமாண்டமான பாலத்துக்கு அவரது பெயரை சூட்டி இருக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பாலம், சிறப்பானது. பெயர், அதனினும் சிறப்பு!
Also Read
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !