murasoli thalayangam
கேள்வி கேட்கும் உரிமை, தர்மேந்திர பிரதானுக்கு இருக்கிறதா? : முரசொலி சரமாரி கேள்வி!
முரசொலி தலையங்கம் (25-09-2025)
தர்மேந்திர பிரதானின் தடுமாற்றம்!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு வந்து பல்வேறு உருட்டுகளையும் புரட்டுகளையும் செய்து விட்டுப் போயிருக்கிறார். அவர் சொன்னதை அவரே மறுக்கிறார்.
"ஒன்றைப் புரிந்து ஆராய்ந்து கற்க வேண்டுமானால் தாய் மொழிக் கல்வியே அவசியம்” என்கிறார் தர்மேந்திர பிரதான். அவர்தான் இந்தியைத் திணித்து இந்தியை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நிதி கிடையாது என்று அராஜகமாகச் சொல்பவர். ‘ஒன்றைப் புரிந்து ஆராய்ந்து கற்க வேண்டுமானால் தாய்மொழிக் கல்வியே அவசியம்' என்று அவர் உண்மையான ஈடுபாட்டுடன் சொல்வாரேயானால், ‘அவரவர் அவரவர் தாய்மொழியை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்வாரா? இந்திக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்து இந்தி பேசாத மக்கள் வாழும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று 'இந்தி வியாபாரம்' செய்து வரும் அவர், தாய் மொழியைப் பற்றிப் பேசலாமா?
"தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது. தமிழகத்தில் அரசு மும்மொழிக் கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்சினை? ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனைவிட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள், நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரதான். இந்தியைத் திணிப்பது அவர்தான். தமிழ்நாடு அரசு எந்த மொழியையும் மாணவர் மீது திணிக்கவில்லை.
ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று அடம்பிடிப்பவர் அவர்தான். இப்படி அடம்பிடிப்பவர்தான் சொல்கிறார், 'நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கி- றேன்' என்று. ‘நிதி தர மாட்டேன்' என்பவரும் அவர்தான். ‘ஒத்துழைப்பு தருவேன்' என்பவரும் அவர்தான். புரிந்துதான் பேசுகிறாரா? புரியாமல் பேசி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறாரா?
“கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்” என்கிறார் பிரதான். அரசியல் செய்வது யார்? அவர்தானே? ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையையும், பள்ளிக் கல்வி நிதியையும் ஒன்றாக்கி, அதன் நிபந்தனையாக்கும் அரசியலைச் செய்வது யார்? தர்மேந்திர பிரதான் தானே?
"தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது” என்று சொல்கிறார் பிரதான். ஒன்றிய அரசு தனது இந்தித் திணிப்புக் கொள்கையை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிப்பது அரசியல் அல்லவா? அராஜகம் அல்லவா?
"இரு மொழிக் கொள்கை என்பதை அரசியல் நிலைப்பாடாக தி.மு.க. வைத்துள்ளது” என்கிறார் பிரதான். அரசியல் நிலைப்பாடாக அல்ல, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் அது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி, நாடாளு மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம் அது. இது தி.மு.க.வின் நிலைப்பாடு மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சட்டம் அது. அந்தச் சட்டத்தைக் கேள்வி கேட்கும் உரிமை, தர்மேந்திர பிரதானுக்கு இருக்கிறதா?
“ஒன்றிய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை” என்கிறார் பிரதான். இந்திக்கு ஆதரவான செயல்களுக்கு என்ன பெயர்? திணிப்பு அல்லவா? வேறு ஏதாவது சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளீர்களா?
“மொழியின் அடிப்படையில் பிரிவினைகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். சமூகம் அதையெல்லாம் தாண்டிச் சென்று விட்டது” என்கிறார் பிரதான். அதையேதான் நாங்களும் சொல்கிறோம். ‘மொழியின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க முயல்பவர்கள் தோல்வியையே அடைவார்கள்'. இதனை இந்தித் திணிப்பாளர்கள் முதலில் புரிந்து கொண்டு திருந்த வேண்டும்.
“நான் தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரதான். இதையே தான் பத்து ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி வருக்கிறார். ‘என்னால் தமிழில் பேச முடிய வில்லை' என்று பத்து ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார் அமித்ஷா. இவர்கள் தமிழில் பேசினாலும் என்ன பேசப் போகிறார்கள்? இந்தியை ஆதரித்துத் தான் பேசப் போகிறார்கள். அதை இந்தியிலேயே பேசட்டும். தமிழில் பேசவேண்டாம்!
தர்மேந்திர பிரதான் தனது உரையில் ஒரே ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறார். "நம் நாடு வரலாற்றுப் பெருமைகளை கொண்டது. ஆனால், வடக்குப் பகுதிகளில் தொடர் படையெடுப்புகளால், நாகரிகங்களை தக்க வைக்க முடியா- மல் போனது. அதேநேரம், தென் மாநில மக்கள், தங்கள் நாகரிகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்”என்று சொல்லி இருக்கிறார் பிரதான். ஆம் உண்மைதான். நாம் படையெடுப்புகளால் சேதமுறாமல் நம்மைக் காத்தோம். இன்றும் அதே படையெடுப்புகள் தொடரத் தான் செய்கின்றன. நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்!
“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அராஜகவாதிகள், ஜனநாயகப் பண்பு இல்லாதவர்கள்” என்று நாடாளுமன்றத்தில் கொக்கரித்தவர்தான் இந்த தர்மேந்திர பிரதான். பின்னர் மன்னிப்புக் கேட்டவர் இவர். ‘யாரோ ஒரு சூப்பர் சி.எம். பேச்சைக் கேட்டுக் கொண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை' என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை இந்திய நாடாளுமன்றத்தில் கொச்சைப்படுத்தி அசிங்க அரசியல் செய்தவர் தான்இவர் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு கட்டியம் கட்டி ஆடுகிறார் பிரதான்.
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !