murasoli thalayangam

அமித்ஷாவைச் சந்திப்பது அவ்வளவு அவமானமா? : பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!

முரசொலி தலையங்கம் (20-09-2025)

அமித்ஷாவைச் சந்திப்பது அவ்வளவு அவமானமா?

சில மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் போனார். பல கார்கள் மாறி மாறிப் போனார். தலைமறைவாகப் போனார். ஒரு இடத்தில் மடக்கி, ‘அமித்ஷாவைச் சந்திப்பீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ‘ஏங்க நான் எதுக்காக வந்திருக்கேன்னே தெரியாம உங்க இஷ்டத்துக்கு கேட்கிறீங்க... என் கட்சி ஆபீஸைப் பார்க்க வந்திருக்கேன்ங்க..’ என்றார் பழனிசாமி. இதைச் சொன்ன சில நிமிடங்களிலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்தார். ‘எங்க கட்சி ஆபீஸ்’ என்று பழனிசாமி சொல்வது, அமித்ஷாவைத்தான் போலும்!

இரண்டு நாட்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் போது, மீடியாக்கள் கண்களில் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் வகையில் துணியை வைத்து தனது முகத்தை மூடிக் கொண்டார். கேட்டால், ‘முகத்தைத் துடைத்தேன்’ என்கிறார். அவர் போன கார் யாருடையது, அவரோடு இருந்தவர்கள் யார் என்று கேட்டால் கோபம் வருகிறது பழனிசாமிக்கு. ‘நீங்க யார் கூட வந்தீங்க? யார் கூட போனீங்கன்னு நான் கேட்க முடியுமா?’ என்று நிருபர்களைப் பார்த்தே பழனிசாமி கேட்கிறார். ‘எனக்கு கார் இல்லீங்க, கிடைச்ச காரில் போனேன்’ என்கிறார். ஐயோ பாவம், லிப்ட் கேட்டு போகும் நிலைமையில்தான் அவரது கட்சி அவரை வைத்திருக்கிறது போலும்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்திக்கப் போவதாக அறிவித்துவிட்டுப் போகலாம். தவறு இல்லை. அவர் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். அவரைப் போய் பார்ப்பதை மறைப்பதன் மூலமாக, அமித்ஷாவைச் சந்திப்பதை அவமானகரமான செயலாக பழனிசாமி நினைக்கிறாரா?

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை பழனிசாமி எப்போதும் சந்திக்கலாம். அமித்ஷா வீட்டிலேயே பழனிசாமி தங்கலாம். கார் ஷெட்டில் குடியிருக்கலாம். ஏனென்றால் பழனிசாமிக்கு, டெல்லியில் வீடு இருக்காது. அதனால் அங்கேயே தங்கலாம். தப்பில்லை. அமித்ஷாவும் மறுக்க மாட்டார். கடந்த தேர்தலில் பா.ஜ.க. வென்ற நாலு இடங்களை இம்முறை வெல்ல பா.ஜ.க.வுக்கு பழனிசாமி தேவை.

‘எங்கள் ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க. தான்’ என்கிறார் பழனிசாமி. அதற்குப் பரிகாரமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். பா.ஜ.க.விடம் அ.தி.மு.க.வை அடமானம் வைக்கலாம். எதையும் செய்யலாம். அவரைக் குறை சொல்லவில்லை. குறைகாணவில்லை. ஆனால், அதனை வெளிப்படையாகச் செய்யுங்கள். இதில் மறைக்க என்ன இருக்கிறது? முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?

எதற்காக இத்தனை கீழ்த்தரமான நாடகங்கள்? யாரை ஏமாற்றுவதற்கு இத்தனை இழிசெயல்கள்? ‘எனக்கு கார் இல்லை’, ‘எனக்கு டிரஸ்ட் இல்லை’ என்ற கழிவிரக்கம் யாரிடம் தேடுகிறார் பழனிசாமி. ‘நான் விவசாயி என்பதால் இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்?’ என்று நொந்தவரைப் போல புலம்புகிறார் பழனிசாமி. அவர் மகா நடிகன் என்பதால்தான் இத்தகைய கேள்விகளை எதிர்கொள்கிறார். ‘விவசாயி’ என்பதற்காக அல்ல? எந்த விவசாயியும் இத்தகைய இழிவான நாடகங்களை நித்தமும் நடத்த மாட்டார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து பழனிசாமியைத் தனிமைப்படுத்தி விட்டது பா.ஜ.க.. அவரைச் சுற்றிலும் உள்ளவர்கள் அனைவரையும் வளைத்துவிட்டது பா.ஜ.க. செங்கோட்டையனுக்கு ‘ஆக்ஸிஜன்’ அமித்ஷா வீட்டில் இருந்துதான் வருகிறது. ‘ஹரித்வார்’ போவதாக வந்த செங்கோட்டையனை அமித்ஷா வீட்டுக்கு கடத்தி விட்ட காட்சியையும்தான் சில நாட்களுக்கு முன்னால் பார்த்தோம். அ.தி.மு.க.வில் எவருக்கும், செய்வதைச் சொல்லும் துணிச்சல் துளியும் இல்லை. ஏனென்றால் செய்வது அனைத்தும் கேவலமானவை. அதனால்தான் இத்தகைய பொய்யும், பித்தலாட்டமும்.

வெறும் பழனிசாமியை மட்டும் வைத்துக் கொண்டால் பருப்பு வேகாது என்பது பா.ஜ.க.வுக்குத் தெரிந்துவிட்டது. அதனால், “விலகியவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிடுகிறது பா.ஜ.க. சசிகலாவை மீண்டும் சேர்த்தால், தனக்கு உட்கார சேர்கூட கிடைக்காது என்பது பழனிசாமிக்குத் தெரியும். சசிகலா காலைப் பார்த்து மண்புழுவைப் போல ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆனவர் பழனிசாமி.

‘என் பெயரை முன்கூட்டியே சொல்ல வேண்டாம். சொன்னால் பலரும் என்னை ஏற்க மாட்டார்கள்’ என்று கூவத்தூர் பட்டாபிஷேகத்துக்கு முன்னால் தன்னிடம் பழனிசாமி கெஞ்சியதாக டி.டி.வி. தினகரன் போட்டு உடைத்துவிட்டார். இத்தகைய பழனிசாமி, டி.டி.வி. தினகரனை எப்படி முகத்துக்கு நேராகப் பார்ப்பார்?

ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே பழனிசாமி தலையில் ஓங்கித் தட்டியவர். செங்கோட்டையன், புதிய கத்தியைத் தீட்டி வருகிறார். தன்னோடு சேர்ந்து ஆறு முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமியின் தவறான முடிவுகளைக் கண்டித்ததாக செங்கோட்டையன் சொல்லி வருகிறார். அந்த ஆறு பேரும் இதுவரை அதை மறுக்கவில்லை. அப்படியானால் பழனிசாமி, பங்களா வீட்டில் யாருமே இல்லாமல் தனிமையில் இருக்கிறார் என்றுதானே பொருள்?

இப்படி அவரைச் சுற்றி வளைத்துவிட்டது பா.ஜ.க. ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்’ என்பார்கள். ஆனால் பழனிசாமி, ‘சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழலாம்’ என்று நினைக்கிறார். அதனால்தான் தலைநகரில் தலையில் முக்காடு போட்டுத் திரிகிறார்.

சிலர் ஆசைக்கும்

தேவைக்கும்

வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்.

ஒரு மானமில்லை

அதில் ஈனமில்லை

அவர்

எப்போதும்

வால் பிடிப்பார்!

Also Read: “ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!