murasoli thalayangam

பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!

முரசொலி தலையங்கம் (28-08-2025)

காலை உணவின் கதிரவன்!

மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல, பசிப்பிணி மருத்துவராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர்தான் காலை உணவின் கதிரவன்!

‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. அந்தக் காப்பியத்தின்படி உயிரூட்டும் முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு ஒரு விழாவுக்குச் சென்றிருந்த முதல் அமைச்சர், அங்கு படிக்கும் மாணவிகளிடம், “காலையில என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டார். ‘சாப்பிடவில்லை’ என்று பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ‘எங்க வீட்டுல சமையல் பண்ணல’ என்று ஒரு மாணவி சொன்னார். ‘மத்தியானம் ஸ்கூல்ல சாப்பிட்டுக்கோ என்று அம்மா சொல்லிட்டாங்க’ என்று இன்னொரு மாணவி சொன்னார். ‘காலையில் டீ மட்டும் குடிச்சிட்டு வந்தேன்’ என்று மற்றொரு மாணவி சொன்னார். இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் ‘காலை உணவுத் திட்டம்’ உருவாக்கினார் முதல் அமைச்சர்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளின் போது மதுரையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் இருந்து அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்குமான திட்டமாக விரிவு படுத்தப்பட்டது. தினந்தோறும் காலையில் 17 லட்சம் மாணவ, மாணவியர்க்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இதனை இன்னும் விரிவுபடுத்த உத்தரவிட்டார் முதலமைச்சர் அவர்கள். நகர்ப்புறப் பகுதிகளில் செயல்படும் 2,429 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 3.06 இலட்சம் குழந்தைகள் பயன்பெறும்வண்ணம், காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார். இனி தமிழ்நாட்டில் செயல்படும் 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 20.59 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆண்டொன்றுக்கு ₹600 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர் தினந்தோறும் காலை உணவை பள்ளிகளில் உண்ண இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின், அந்தக் குழந்தைகளின் பெற்றோரின் கடமையையும் சேர்த்துச் செய்கிறது திராவிட மாடல் ஆட்சி.

இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் அவர்களை அழைத்திருந்தார் முதலமைச்சர். “இந்தத் திட்டத்தை நான் எங்கள் மாநிலத்தில் செயல்படுத்த இருக்கிறேன். நாளைய தினம் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இது தொடர்பாக முடிவுவெடுக்கப்படும்” என்று முதலமைச்சர் பகவந்த்மான் சொன்னதுதான் இந்தத் திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.

5 ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் , “காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளியில் தொடங்கி வைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று சொல்லி இருக்கிறார். தாருணிகா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி, “முதலமைச்சர் என்னுடைய அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. என் அம்மா தினமும் காலையில் வேலைக்குச் செல்வதால் சாப்பிடாமல் வந்து விடுவேன். இப்போது பள்ளியிலேயே உணவு கிடைத்துவிடுகிறது” என்று மகிழ்ச்சி அடைகிறார். ‘’பல நாட்கள் பசியோடு பள்ளிக்கு வந்திருக்கிறேன். இனி அந்தப் பிரச்சினை இல்லை” என்கிறார் இம்மானுவேல் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவன்.

சாந்தோம் பகுதியைச் சேர்ந்த ஜுலி என்ற தாய், “காலையில் நேரம் ஆகிவிட்டது என்று சொல்லி என் மகள் சாப்பிடாமல் போய்விடுவாள். நான் வருத்தமாக இருப்பேன். ‘காலை உணவுத் திட்டம்’ வந்த பிறகு எனக்கு வருத்தம் இல்லை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், காலையில் கேசரி சாப்பிட்டேன், இட்லி சாப்பிட்டேன், பொங்கல் சாப்பிட்டேன் எனக் கூறுவதைக் கேட்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.

“வீட்டில் கஷ்டப்பட்டு சாப்பிடும் பிள்ளைகளும் பள்ளியில் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள்” என்கிறார் சத்யா என்ற பெண்.

காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு மற்றும் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சித்துறை ஒரு ஆய்வைச் செய்துள்ளது. மாணவர்களின் உண்ணும் பழக்கத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் வலிமை பெற்றுள்ளது. அவர்கள் மனவலிமை பெற்றுள்ளார்கள். காலையில் அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் போது, குழந்தைகளிடம் ஒருவருக்கொருவர் அன்பான நட்புறவு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் சேர்ந்து பேசுகிறார்கள். பழகுகிறார்கள். படிப்பில் அக்கறை செலுத்துகிறார்கள். மனதில் எதிர்மறை எண்ணம் மறைந்து, நேர்மறையாகச் சிந்திக்கிறார்கள். இப்படி தனது ஆய்வின் மூலமாக கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறது திட்டக்குழு.

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஒட்டுமொத்தமாக பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்தி இருக்கிறது. பள்ளிக்கு மாணவ, மாணவியரின் வருகை விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. கல்வியில் அனைவருக்கும் சமமான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து அதிகம் ஆனதால் நோய் எதிர்ப்பு சக்தியை பிள்ளைகள் பெற்றுவருகிறார்கள். இதன் மூலமாக நோய்த்தொற்றானது குறைகிறது. இப்படி எத்தனையோ பலன்களைத் தந்துவிட்டது ‘காலை உணவுத் திட்டம்’.

“அப்பாவாக இருந்து காலை உணவு வழங்கிய முதலமைச்சருக்கு பள்ளிச் சிறுவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

“எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து முதலமைச்சர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்” என்று பெற்றோர்கள் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

“பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது” என்று ஆசிரியைகள் சொல்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மகத்தான வெற்றி ஆகும்.

அறிவார்ந்த சமூகம், அனைவர்க்குமான சமுகம், வறுமை இல்லாத சமுகம், பெற்றோர்களின் குடும்ப சுமை குறைந்த சூழல் ஆகிய அனைத்தையும் உருவாக்கும் திட்டமாக ‘காலை உணவுத் திட்டம்’ அமைந்ததால்தான் அதனை விரிவாக்கம் செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்பது பழமொழி. பசியைப் போக்கினால் பத்து விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை மெய்ப்பித்து விட்டது முதலமைச்சரின் கருணை உள்ளம்!

Also Read: முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!