murasoli thalayangam
தேர்தல் ஆணையத்தின் ஆணவம் - பீகாரில் அரங்கேற்றிய ஜனநாயகப் படுகொலை : முரசொலி!
முரசொலி தலையங்கம் (13-08-2025)
தேர்தல் ஆணையத்தின் ஆணவம்!
பீகாரில் 65 லட்ச வாக்குகள், வாக்குரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த ஆவணங்களை உச்சநீதிமன்றம் கேட்டால்,‘தர முடியாது’ என்று ஆணவத்துடன் பதில் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தலை முறையாக நடத்துவதுதானே அவர்களின் வேலை. அதைக்கூட முறையாகச் செய்யாமல், அநியாயமாகச் செயல்பட்டிருக்கிறது தேர்தல்ஆணையம். அதுகுறித்து முறையான விளக்கம் கூடச் சொல்லத் தயாராக இல்லை என்றால் இவர்களுக்கு இந்த தைரியத்தைக் கொடுப்பது யாராக இருக்க முடியும்? ஒன்றிய பா.ஜ.க. அரசு தனக்குப் பின்னால் இருக்கும் துணிச்சலில்தானே இதைச் செய்கிறார்கள்?
65 லட்சம் பேரை எப்படி நீக்கினீர்கள் என்று கேட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை இல்லையா? உச்சநீதிமன்றத்துக்கு உரிமை இல்லையா? அல்லது யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா?
“பீகாரில் முதற்கட்டமாக சிறப்புத் திருத்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இருக்கிறோம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் எந்தக் காரணத்திற்காகவும், முன்னறிவிப்பு இன்றி நீக்கப்படாது. வாக்காளருக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்புவோம். அவர் உரிய ஆவணங்களை வழங்க நேரம் கொடுப்போம். அதன்பிறகே வாக்காளர் பெயரை நீக்குவோம். எவர் ஒருவர் பெயரும் நீக்காமல் இருக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இடம்பெறவில்லை என்றால் இறுதி வாக்காளர் பட்டியலில் அவர் நீக்கப்படுவார் என்று அர்த்தமில்லை” என்று சொல்கிறது தேர்தல் ஆணையம்.‘நாங்களாக நீக்க மாட்டோம், உங்களிடம் சொல்லிவிட்டு நீக்குவோம்’என்பதைத்தான் சுற்றி வளைத்துச் சொல்கிறது தேர்தல் ஆணையம்.
“இந்தப் பணியின் போது மனிதத் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது”என்பதையும் சொல்வது தேர்தல் ஆணையம் தான். இந்த நடைமுறையில்‘மனிதத் தவறுகள்’அதிகம் நடந்துள்ளன. அதனால்தான் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அதிகமாகக் கேள்விகள் எழுப்புகின்றன.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தனது ஆணவத்தை மொத்தமாகக் காட்டி இருக்கிறது தேர்தல் ஆணையம். “வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலைத் தயார் செய்வது குறித்து யாரிடமும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கப்பட்ட தேவையில்லை. அவர்களை நீக்கியதற்கான காரணங்கள் குறித்தும் யாரிடமும் பகிர வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக விபரங்களைத் தரச் சொல்லி மனுத் தாக்கல் செய்வதே ஏற்புடையது அல்ல” என்பதை விட ஆணவம் இருக்க முடியுமா?
செய்த செயல் சாதாரணமானது அல்ல. சிறப்பு நடவடிக்கை என்ற பெயரால் மாபெரும் ஜனநாயகப் படுகொலையை பீகாரில் அரங்கேற்றி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பீகாரில்‘சார்’எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (சிறப்பு தீவிர திருத்தம் -எஸ்ஐஆர்) பீகார் அரசு எடுத்து வருகிறது.
2003–ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தின் இன்னொரு வடிவம் போல இதனை மாற்றி விட்டார்கள். ஒருவர் தனது பிறந்த நாளையும், பிறந்த ஊரையும் சரியானதுதான் என நிறுவவேண்டும். இந்த ஆவணங்கள் இல்லை என்றால், அவர்களது பெற்றோர்களின்குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார். இந்த அடிப்படையில் சுமார் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.
8 கோடி பேர் தொடர்புடைய பிரச்சினையை 25 நாட்களுக்குள் முடிக்க நினைத்தது தவறு. ஓராண்டு காலம் செய்ய வேண்டிய வேலை இது. அந்த 8 கோடி பேரில் 3 கோடி பேர் தங்களது ஆவணங்களை இணைத்து அதனை இணையத்தில் பதிய வேண்டும். இதற்கு பல மாதங்கள் தேவை. நிரப்பப்பட்ட படிவங்களுடன் அலுவலர்கள், ஒவ்வொரு வாக்காளர்களையும் வீடுகளுக்கு வந்து சந்திப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அப்படி எந்தச் சந்திப்பும் பீகாரில் நடக்கவில்லை.
பீகாரில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை அங்கேயே விட்டுவிட்டு, பல்வேறு மாநிலங்களில் தின ஊதியம், வார ஊதியம், மாதம் ஊதியம் பெற்று தற்காலிகமாக வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது பீகார் மக்களின் வாழ்வுரிமை பறிப்பு ஆகாதா?
இன்று சென்னையில் ஒரு பீகார் தொழிலாளி, நாளை பஞ்சப்பில் இருப்பார். அடுத்தமாதம் பீகார் சென்று விடுவார். பின்னர் கர்நாடகாவுக்கு வேலைக்கு வந்துவிடுவார். ஆனால் அவரது நிரந்தர வாழிடம் என்பது பீகார்தானே? அப்படிப்பட்டவர் வாக்குரிமையை பறித்தது கொடூரமான மனோபாவம் அல்லவா?
வறுமை சூழ் வாழ்க்கைத் தரம் உள்ள அந்த மாநிலத் தொழிலாளிகள் பலரிடமும் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசு பணி அடையாள அட்டை, பாஸ்போர்ட், பிறப்புச் சான்று ஆகியவை இல்லை. அவர்களிடம் இருப்பது ஆதார் அட்டையும், குடும்ப அட்டையும். ஆனால் அது இரண்டையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இவை அனைத்தையும் விட கொடுமை, தேர்தல் ஆணையமே வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையமே ஏற்கவில்லை. அதாவது, ஒரு குடிமகனின் வாக்குரிமையைப் பறிக்க மட்டுமே தேர்தல் ஆணையம் சிந்தித்துள்ளது. இதனைத்தான்‘மனிதத் தவறு’என்கிறோம்.
ஆம்! ‘மனிதத் தவறுகள்’ அதிகம் நடந்துள்ளது. தவறான மனிதர்களிடம் ஆணையம் சிக்கி உள்ளது. தவறான மனிதர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது.
Also Read
-
தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ’SIR’: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள்
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்” : திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!
-
தமிழ்நாட்டிற்கு பலன் அளிக்கிறதா ஒன்றிய அரசின் திட்டங்கள்? : நாடாளுமன்றத்தில் திமுக MPக்கள் கேள்வி!
-
பட்டியலினத்தவர் மீதான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
மதுரை AIIMS மருத்துவமனை எப்போது செயல்பாட்டிற்கு வரும்?: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி சோமு MP!