murasoli thalayangam

“இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதம் நடத்தமாட்டோம் என்று ஒரு வார காலமாக இழுத்தடித்தது பா.ஜ.க. அரசு. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 28 ஆம் தேதியன்று விவாதம் நடத்துவதாக ஒப்புக்கொண்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.

பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் முறையான பதிலை நாடாளுமன்றத்தில் அளிக்கவில்லை. வாய்ஜாலம் காட்டினார்களே தவிர, வாய்மையைக் காட்டவில்லை.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது” என்று சொன்னார். நமது முக்கியமான கேள்வி என்பது, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூரமானத் தாக்குதலை எப்படி நடத்தினார்கள்? எப்படி உள்ளே வந்தார்கள்? அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? என்பது ஆகும். அதற்கு இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார் மோடி. மூன்றாவது முறையாக இப்போது பிரதமராக இருக்கிறார். ‘ஒரு இந்தியன் கூட இனி சாக மாட்டான்’ என்று உறுதி அளித்தவர் மோடி. ஆனால் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டாமா? பஹல்காமில் 22 பேர் கொல்லப்பட்டது யாருடைய பலவீனத்தால்?

“தேர்வு எழுதும்போது எத்தனை பென்சில், பேனா உடைந்தன என்பது முக்கியம் அல்ல. தேர்வில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். ராணுவ தரப்பில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை” என்று சொல்லி இருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர். பயங்கரவாதிகளால் 22 பேர் பலியானதைச் சொல்லலாமா? எனத் தெரியவில்லை.

மிகமிக முக்கியமான அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் கூட இல்லை. உள்ளே நுழைந்த நான்கு பேர், 22 பேரைக் கொன்று விட்டுப் போய்விட்டார்கள். இதற்கான காரணத்தை இதுவரைச் சொல்லவில்லை.

பிரதமர் பேசி இருக்கிறார். அவர் பேச்சு, இருபது ஆண்டுகள் கழித்துப் பேச வேண்டிய பேச்சாக இருக்கிறது.

“ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகிறார்கள். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானை துவம்சம் செய்தன. இதற்கு முன்பு இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. போரை நிறுத்தக் கோரி மன்றாடியதால், மே 10-ம் தேதி போர் நிறுத்தப்பட்டது” - இவைதான் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நாட்டுக்கு அளித்துள்ள விளக்கங்கள் ஆகும்.

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் தைரியமாக உள்ளே நுழைந்து, கொலைகளைச் செய்து விட்டு தப்பி ஓடியதை விட அவமானம், ‘இந்தியாவின் போரை நான்தான். நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வது ஆகும். அவர் எதற்காக அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வில்லை. ஆனால் அமெரிக்க அதிபரது பொய்யை, பொய் என்று சொல்வதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஏன் வலிக்கிறது என்று தெரியவில்லை.

“பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்துமாறு உலகின் எந்தத் தலைவரோ, எந்த நாடோ அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ், என்னை தொடர்பு கொள்ள ஒரு மணி நேரம் முயற்சி செய்தார். பின்னர் நான் அவரோடு பேசினேன். அப்போது அவர் கூறும்போது, ‘பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது’ என்றார்.

அவரிடம் மிகவும் தெளிவாகக் கூறினேன். ‘பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கான பெரும் விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் துப்பாக்கியால் சுட்டால், நாங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசுவோம்’ என்று அமெரிக்கத் துணை அதிபரிடம் தெளிவுபடுத்தினேன். இதன் பிறகு பாகிஸ்தானின் ராணுவ பலம் முழுமையாக அழிக்கப்பட்டது” என்று பட்டும் படாமல் பதில் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “வெளிநாட்டு அழுத்தம் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது” என்று அமெரிக்கா பெயரையே சொல்லாமல் பதில் அளித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, “ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் எந்த வகையிலும் பேசுகிறார். பேசவில்லை” என்றார்.

ஒருமுறையல்ல, 26 முறை சொல்லி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா? அதற்குப் பிரதமர் பதில் என்ன? அமெரிக்க அதிபருக்கு மறுப்புத் தெரிவிக்க என்ன கூச்சம்? ஏன் பயம்?

“ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றால், ‘போர் வெற்றி பெற்றுவிட்டது’ என்று சொல்ல முடியுமா? தற்காலிகமாக ஏன் நிறுத்துகிறீர்கள்? யார் சொல்லி நிறுத்தப்பட்டது?

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘பலவீனத்தால்’ பஹல்காம் தாக்குதல் நடந்தது. ‘மர்மமான’ முறையில் போர் நிறுத்தப்பட்டது.

Also Read: வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிவிக்க போவது எப்போது? : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!