murasoli thalayangam

“வலுவான போராட்டத்தால் இந்தித் திணிப்பை விரட்டி அடித்த மராட்டியம்” - முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!

இந்தியைத் திணிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாடு அதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறது என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

குறித்து “மகத்தான மராட்டியம்” என்ற தலைப்பில் முரசொலி தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு :-

வலுவான போராட்டங்களின் மூலம் இந்தித் திணிப்பை விரட்டி இருக்கிறது மராட்டியம்!

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வரத் திட்டமிட்டது ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு. இதற்கு அந்த மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. என்னென்னவோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பின்வாங்கவில்லை. அதனால் அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான சிவசேனாவும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது பா.ஜ.க. வழக்கம் போல் தனது இந்தித் திணிப்பை இந்த மாநிலத்திலும் செய்யப் பார்த்தது பா.ஜ.க. அது அந்த ஆட்சிக்கே பெருத்த பின்னடைவாக முடிந்துவிட்டது.

இந்தியைத் திணிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாடு அதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மகாராஷ்டிரா மாநிலப் பள்ளிக் கல்வி பாடத்திட்ட கொள்கை கடந்த ஆண்டு வகுக்கப்பட்டது.

அதன்படி, மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளி களில் 1 முதல் 5 - ஆம் வகுப்பு வரை இந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை வெளியானதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக விருப்பப் பாடம் என்ற வார்த்தையைப் போட்டு புதிய அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டது.

கடந்த ஜூன் மாதம் 17--ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அரசாணையில், 1 முதல் 5-- ஆம் வகுப்புவரை இந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும். குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 20 விழுக்காடு மாணவர்கள் விரும்பினால், இந்தியைத் தவிர வேறு ஒரு மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம்' என்று குறிப்பிடப்பட்டது. '20 விழுக்காடு மாணவர்கள் விரும்பினால்' என்பது, நடைமுறைக்கு சாத்தியப்படாத வழி முறை ஆகும்.

எனவே மராத்தி அமைப்பினர் இந்த அரசாணையையும் கடுமையாக எதிர்த்தார்கள். மராத்தி மொழியின் அடையாளத்தை அழிக்கும் இந்த முயற்சியை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தது.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகியவை கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனை பா.ஜ.க. கூட்டணி அரசால் சமாளிக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநில மொழி ஆலோசனைக் குழுவும், மும்மொழித் திணிப்பு அரசாணையை திரும்பப் பெற கோரிக்கை வைத்தது. இதுவும் பா.ஜ.க. அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

தெற்கு மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டவர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை ஆகிய கட்சிகள் சார்பில் ஜூலை 5--ஆம் தேதி கூட்டுப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டசபையும் கூட இருக்கிறது. எனவே எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்று நினைத்தது பா.ஜ.க. கூட்டணி அரசு.

இதைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ், "மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களில் போடப்பட்ட இரண்டு அரசாணைகளையும் திரும்பப் பெறுகிறோம்" என்று அறிவித்தார். மராத்திய மொழி மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்து விட்டது. 'இது மராத்தியர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி' என்று சொல்லி இருக்கிறார் உத்தவ் தாக்கரே.

‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எந்த மொழியையும் திணித்தால் எதிர்ப்போம்' என்று சொல்லி இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதே நிலைப்பாட்டையே ராஜ் தாக்கரேவும் எடுத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருவரும் அரசியல் ரீதியாக பிரிந்தவர்கள்.

2005 ஆம் ஆண்டு சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கியவர் ராஜ் தாக்கரே. இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்தித் திணிப்பு இப்போது உத்தவ் தாக்கரேவையும் ராஜ் தாக்கரேவையும் ஒன்றாக இணைத்து விட்டது. பா.ஜ.க.வுக்கு இது அரசியல் நெருக்கடியாகவும் அமைந்துவிட்டது. "

இது மராத்தியர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி. தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று பயந்து இந்தித் திணிப்பை அரசு கைவிட்டு விட்டது" என்று உத்தவ் கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் சொல்லி இருக்கிறார்.

"இந்திக்கு எதிரான பேரணி நடந்திருந்தால் அது மிகப்பெரியதாக இருந்திருக்கும்" என்று ராஜ் தாக்கரேவும் சொல்லி இருக்கிறார். 'இந்தியைத் திணிக்க ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள். இந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாக இருக்கிறது. இந்தியை எப்போது திணித்தாலும் எதிர்ப்போம்" என்றும் சொல்லி இருக்கிறார் ராஜ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து அறிவித்த பேரணிக்கு தார்மீக ஆதரவைச் சொல்லி இருந்தார் மகாராஷ்டிரா மாநில மூத்த தலைவரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார். உத்தவ் தாக்கரே நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கெடுத்தது. இந்த வகையில் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி மகத்தான மராட்டியமாகக் காட்டிவிட்டது.

Also Read: “முதலில் பாஜகவிடம் அடமானம் வைத்த அதிமுகவை மீட்கட்டும்.. பிறகு...” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!