murasoli thalayangam

மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை காக்கும் திராவிட மாடல் அரசு : வேறெந்த மாநில அரசும் செய்யாத திட்டங்கள்!

முரசொலி தலையங்கம் (31-05-2025)

மீனவர் நலன் காக்கும் அரசு!

மீன் பிடித்தல் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறையாகும். நமது பண்பாட்டின் அடையாளமாகவும் இத்தொழில் உள்ளது. கடலும் கடல் சார்ந்த மக்களும் வாழும் நிலத்தை நெய்தல் நிலம் என்று அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள். இந்தியாவின் 13 விழுக்காடு கடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. 1876 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

இன்று இந்த சென்னை மாபெரும் மாநகராக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இங்கிருக்கும் மாபெரும் கடற்கரைதான் காரணம். பரந்து விரிந்த கடற்கரை, மிகப்பெரிய வியாபார தலமாக இருந்ததால்தான் கடற்கரையில் கோட்டையைக் கட்டினார்கள் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள். 490 ஆண்டுகளுக்கு முன்பே திருவொற்றியூர், எண்ணூர், மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர் ஆகியவை சிறுசிறு கிராமங்களாக இருந்தன. சென்னைக்கு வடக்கே பழவேற்காடு தொடங்கி - சென்னைக்கு தெற்கே கோவளம் வரை பல மீனவர் கிராமங்கள் இருந்தன. இந்த கிராமங்கள் அனைத்தும் சேர்ந்துதான் சென்னைப்பட்டணமாக ஆனது. இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்கள் மீனவ மக்கள்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவ மக்களது பங்களிப்பு அதிகம். இவர்கள் கடல் சார் சமூகத்தின் அங்கமாக - தமிழர்களின் கடலோரப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறார்கள். அதனால்தான் மீனவ மக்களைக் காப்பதை தனது முக்கியமான கடமையாகத் தமிழ்நாடு அரசு கொண்டுள்ளது.

மீனவர்களின் நலன் காப்பதுடன், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலை நாட்டிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கச்சத்தீவை மீட்போம் என்ற தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதலமைச்சர் அவர்கள்.

கடந்த 28 ஆம் தேதியன்று திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 272 கோடி மதிப்பில் இந்த துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறைமுகம் இது. இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள்,"கச்சத்தீவினை இந்தியாவிற்கு மீட்பது ஒன்றே இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்”என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.“கச்சத்தீவு மீட்கப்பட்டால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது”என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.

இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற வகையில்தான் இந்திய மீனவர்கள் கைதும் தொடர்ந்து வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில் மட்டும் 1,354 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் அவர்களது படகுகள் மீட்கப்படவில்லை. கைது சம்பவங்கள் தொடர்கிறது. வழக்குகள் போடுவதை இலங்கை அரசு நிறுத்தவில்லை. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவு மீட்பே சரியானது.

கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தாரை வார்த்தார் என்று குற்றம் சாட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை மீட்பதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. ‘கச்சத்தீவை திரும்பக் கொடுத்து விடுங்கள்' என்று ஒரு வேண்டுகோளைக் கூட இலங்கை அரசுக்கு வைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வரவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். மீனவர் தம் வாழ்வாதாரம் காக்க பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள்.

இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 129 விசைப்படகு உரிமையா- ளர்களுக்கு தலா ரூ.5.00 இலட்சம் வீதமும், 26 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதமும் மொத்தம் ரூ. 6.84 கோடி ரூபாய் வழங்கி உள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

• 121 மீன்வள உட்கட்டமைப்பு பணிகள்.

• 46 புதிய மீன் இறங்குதளங்கள்.

• 29 மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள்.

• 11 புதிய மீன் பண்ணைகள்.

• 14 மீன் பண்ணைகள் மேம்பாடு.

• 12 மீன் இறங்கு தளங்கள் ஆய்வு.

• மீன் பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு.

• வரி விலக்கு தரப்பட்டுள்ள டீசல் அதிகரிப்பு

• மீன்பிடி கலன்கள் இயந்திரமயமாக்கல்.

• மீனவர் வீடுகளுக்கு பட்டா

• 20 ஆயிரம் மீனவர்க்கு நிதி உதவிகள்.

• காணாமல் போகும் மீனவர் தம் குடும்பத்துக்கு உதவித் தொகை உயர்வு

• புயல்கால நிவாரணங்கள்

• 49 மீனவ கிராமங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள்.

• மீனவ மகளிருக்கு மானியங்கள்

• மீனவ மாணவ, மாணவியருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதப் பயிற்சி - என

"மீனவ மக்களுக்காக இத்தனை திட்டங்களை இந்தியாவின் எந்த மாநில அரசும் செய்யவில்லை, செய்ய முடியாது என்று சொல்லத்தக்க வகையில் திராவிட மாடல் அரசு செய்து வருகிறது”என்று சொல்லி இருக்கிறார் முதல்மைச்சர் அவர்கள். இதுதான் முழு உண்மை ஆகும்.

"தரை மேல் பிறக்க வைத்தான்

எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்.

கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்.

ஒரு நாள் வருவார்

ஒரு நாள் போவார்

ஒவ்வொரு நாளும் துயரம்" என்ற பாடலைத்தான் அனைவரும் பாடுவார்கள்.

அப்படி மீனவர் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்தே முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

Also Read: ”மக்களால் மூலையில் உட்கார வைக்கப்பட்ட பழனிசாமிக்கு அடக்கம் தேவை” : முரசொலி கண்டனம்!